64. கண்ணாடிப் புன்னகை

இனி யாரிடம் என்ன பேசுவதானாலும் உங்கள் முன் ஒரு நிலைக்கண்ணாடி இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் மறுப்பையோ நிராகரிப்பையோகூட புன்னகையுடன் சொல்லிப் பழகுங்கள்.
64. கண்ணாடிப் புன்னகை

வணிகர் ஒருவர் ஊரில் இருந்தார். ஊருக்குள் அவருக்கு மிகுந்த செல்வமும் செல்வாக்கும் இருந்தது. 

அவர் எதிரில் நின்று பேசுவதற்கே அனைவரும் தயங்குவார்கள். 

மற்றவர்கள் தன்னிடம் தயங்கித் தயங்கிப் பேசுவதை ஆரம்பத்தில் தனது கௌரவத்துக்கான அடையாளமாக எடுத்துக்கொண்டார் அவர். வயதாக ஆக.. தான் தவறாகப் புரிந்துகொண்டது அவருக்கே புரிந்தது. தன்னிடம் பயம் கொண்டுள்ளார்கள் அனைவரும் என்ற உண்மையை அறிந்துகொண்டார். 

எதிரே நின்று பேசுவதற்கே பயப்படும் அளவுக்கு கொடிய மிருகம்போலவா நான் இருக்கிறேன் என தன்னை நினைத்து கொஞ்சம் அவமானமாகவும் உணர்ந்தார். 

குருவருள் வேண்டி ஆசிரமத்துக்குச் சென்றார். 

அவரை வரவேற்று குருவின் முன்பாக அழைத்துச் சென்ற சிஷ்யன், “தாகமாக இருக்கிறதா? பருக ஏதேனும் கொண்டுவந்து கொடுக்கட்டுமா?” என்று கேட்டான்.

“எதுவும் வேண்டாம்..” என்று சொன்னார் வணிகர். குருவை வணங்கினார். 

“குருநாதரே.. உங்களுக்கே தெரியும், ஊரில் நல்ல நிலையில் இருக்கிறேன் நான். என்னிடம் பலர் பணிபுரிகிறார்கள். பல வீடுகளில் அடுப்பெறிய நான் காரணமாக இருக்கிறேன். யாருக்கும் கெடுதல் செய்ய நினைத்ததில்லை. ஆனாலும், யாரும் என் எதிரே நின்று இயல்பாக பேசுவதில்லை. பயத்துடனும் பதட்டத்துடனும்தான் பேசுகிறார்கள். அவர்கள் அப்படி நடந்துகொள்வதை எனக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை என என் இளமைக் காலத்தில் கருதிக்கொண்டேன். ஆனால், வயதான பின்புதான் அது தவறென்று உரைக்கிறது. ஒரு கொடிய மிருகத்தின் முன்னால் நிற்பவர்களைப் போல, அவர்கள் என் எதிரே நிற்கவே பயப்படுகிறார்கள்..” என்றார் வணிகர்.

அவரது முகத்தில் தெரிந்த கவலையைக் கண்டு, அவரை ஆயாசப்படுத்தும் நோக்கத்தில் அருகே வந்தான் சிஷ்யன். அவர் பருகுவதற்காக, நீர் நிரப்பியிருந்த குவளையினை நீட்டினான் சிஷ்யன். 

“அதான் எதுவும் வேண்டாமென்று சொன்னேனல்லவா..” என்றபடியே அவர் சட்டென சிஷ்யனை கோப முகத்துடன் ஏறிட, சிஷ்யனின் முகம் பட்டென வாடியது. குவளையோடு இருந்த கையை பின்நோக்கி இழுத்துக்கொண்டான். விலகி, தூரம் சென்றுவிட்டான். 

நடந்தவை அனைத்தையும் கவனித்தபடியே இருந்தார் குரு. சிறிய விஷயத்துக்கும் சட்டென கோபம் கொள்ளும் அவரது குணம்தான் அவரிடமிருந்து மற்றவர்களை விலக்கிவைத்திருக்கிறது என்ற உண்மையைப் புரிந்துகொண்டார். 

“நீங்கள் வேண்டாம் என்று சொன்னபோதும், உங்களை ஆயாசப்படுதுவதற்காகவே நீர் கொடுத்தான் என் சிஷ்யன். அவனது உள் நோக்கத்தை உணராமல் கடிந்துகொண்டீர்கள் நீங்கள். அதனால் அவன் பதறியதைக் கவனித்தீர்களா?” என்று கேட்டார்.

“இல்லை குருவே.. நான் வேண்டாம் என்று சொன்னபிறகும் அவன் கொடுத்ததால்தான் என்னையறியாமல் கோபம் வந்துவிட்டது எனக்கு..” என்றார் வணிகர்.

“இந்தக் கோபம்தான் உங்கள் எதிரி. அதுதான் உங்களிடம் மற்றவர்கள் பயந்து ஒதுங்குவதன் காரணம்” என்றார் குரு.

தலை கவிழ்ந்தார் வணிகர்.

“நிலைக்கண்ணாடி முன்பு நின்று நீங்கள் புன்னகைத்தால், அதில் தெரியும் உங்கள் பிம்பமும் புன்னகைக்கும். கோப முகம் காட்டினால் என்னாகும்? கண்ணாடியில் தெரியும் பிம்பமும் கோப முகத்தையே காட்டும். கண்ணாடி போலத்தான் நம்மைச் சுற்றி இருக்கும் மனிதர்கள். நீங்கள் கோபப்பட்டால் உங்களுக்குச் சமமாக இருப்பவர்கள் கோபத்தையே பதிலாகக் காட்டுவார்கள். மற்றவர்கள் பயத்துடன் ஒதுங்கிவிடுகிறார்கள். நீங்கள் உயர்ந்த நிலையில் இருப்பவர் என்பதால் பதிலுக்கு உங்களிடம் கோபப்பட முடியாதல்லவா, அதனால்தான் ஒதுங்கிவிடுகிறார்கள். இதுதான் நிஜம். இனி யாரிடம் என்ன பேசுவதானாலும் உங்கள் முன் ஒரு நிலைக்கண்ணாடி இருப்பதாக எண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் மறுப்பையோ நிராகரிப்பையோகூட புன்னகையுடன் சொல்லிப் பழகுங்கள். மற்றவர்களுக்கும் உங்கள் புன்னகை பரவும். யாரும் உங்கள் முன் பயந்து நடுங்கமாட்டார்கள்..” என்றார் குரு. 

தனது பிரச்னைக்கான தீர்வை அறிந்துகொண்ட மகிழ்ச்சியோடு நன்றி கூறி விடைபெற்றார் அந்த வணிகர். ஆசிரமத்தை விட்டு வெளியேறும் முன்னர், சிஷ்யனிடம் தன் செயலுக்காக மன்னிப்பு கேட்டுவிட்டு, புன்னகையுடன் சென்றார். 

சிஷ்யனின் வாடியிருந்த முகம் இன்முகமாக மாறியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com