62. பயன் என்ன?

சிந்தனைகளாலும் செயல்களாலும் பிறருக்கு என்ன பயன் என்று நாம் ஒவ்வொருவரும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.
62. பயன் என்ன?

கண்ணுக்கெட்டிய தூரம் முழுக்க தண்ணீர். கடற்கரையில் நின்று கொண்டிருந்தனர் குருவும் சிஷ்யனும். ஓடிவந்த அலை நீர் இருவரது கால்களையும் நனைத்துச் சென்றது. அதன் அழகு நுரையாக விரிந்தது.

“எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காதவை கடல், யானை, ரயில் என்று சொல்லி இருக்கிறீர்கள் குருவே. அதன் அர்த்தம் இப்போதுதான் முழுமையாகப் புரிகிறது!” என்றான் சிஷ்யன். கடல் நீரைப் பார்த்துப் பார்த்துப் பிரமித்தான்.

“பிரமிப்புக்கு உரியது மட்டுமல்ல கடல். அது நமக்குச் சொல்லும் பாடங்களும் ஏராளம்! அதன் ஒவ்வொரு குணத்தில் இருந்தும் நம் வாழ்க்கைக்கான பாடங்களை ஒவ்வொருவிதமாகக் கற்றுக்கொள்ளலாம்!” என்றார் குரு.

குருவின் புகழ்ச்சி வார்த்தைகளுக்கு அடக்கத்துடன் ஆமாம் சொல்லிக்கொண்டிருந்தது அலை நீரின் சங்கீதம்.

“பார்க்கும் இடமெல்லாம் நீரே நிறைந்திருக்கிறது. இந்த கடல் நீரை எடுத்துப் பருகி உன் தாகத்தைத் தீர்த்துக்கொள்ள இயலுமா?” என்று கேட்டார் குரு.

“முடியாது குருவே. உப்பு நீர் தாகத்தைப் போக்காது. அதிகரிக்கவே செய்யும்..” என்றான் சிஷ்யன்.

“அள்ள அள்ளக் குறையாத நீர். ஆனாலும், ஒரு வாய்கூட பருக முடியாது..”.

“ஆம் குருவே..” என்றான் சிஷ்யன்.

“வாய் இருக்கிறது என்பதற்காக எவ்வளவு வார்த்தைகள் பேசுகிறோம்! மனம் இருக்கிறது என்பதற்காக எப்படியெல்லாம் சிந்திக்கிறோம்! செய்ய முடியும் என்பதால் எத்தனை செயல்களைச் செய்கிறோம்! சிந்தனைகளாலும் செயல்களாலும் பிறருக்கு என்ன பயன் என்று நாம் ஒவ்வொருவரும் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். அதைத்தான் சொல்லாமல் சொல்கிறது இந்தக் கடல்” - பேசினார் குரு.

குரு பேச.. சிஷ்யன் சிந்திக்க.. அலையின் ஆர்ப்பரிப்பால் கடல் ஆமோதித்தது.

“ஒருவனின் வார்த்தைகளால் யாருக்கும் பயனில்லை என்றால், அது பருக இயலாத கடல் நீருக்கே சமமாகும். ஒருவனின் சிந்தனைகளால் இந்தச் சமுதாயத்துக்கு உபயோகமேதும் இல்லை என்றால், அது உப்புக்கரிக்கும் கடல் நீருக்கே சமமாகும். ஒருவனின் செயல்களால் இந்த உலகிற்கு  பலனேதும் கிடைப்பதில்லை என்றால், அது அலை தீரா நீர் கொண்டாலும் பருகப் பயன்தராத இந்த கடலுக்கே சமமாகும்!” என்றார் குரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com