வெள்ளிக்கிழமை 20 செப்டம்பர் 2019

59. மகா மந்திரம்

By ஜி. கௌதம்| Published: 02nd September 2019 12:00 AM

 

வித்தியாசமான ஒரு பிரச்னையை எடுத்துக்கொண்டு ஆசிரமத்துக்கு வந்தான் இளைஞன் ஒருவன். அவ்வப்போது வந்து குருநாதரிடம் ஆசியையும் சிஷ்யனிடம் அன்பையும் பெற்றுக்கொண்டு செல்லும் உள்ளூர்க்காரன்தான் அவன்.

‘‘இன்றைக்கு செய்து முடிக்க வேண்டும் என குறித்துக்கொண்டுதான் அன்றன்றைய வேலைகளைச் செய்ய ஆரம்பிக்கிறேன். ஆனால், அவற்றைச் செய்து முடிப்பதற்குள் நாள் முடிந்துவிடுகிறது. முதல் நாள் முடிக்க வேண்டிய வேலைகள் அடுத்த நாளில் முட்டிக்கொண்டுவந்து நிற்கின்றன. அடுத்த நாளில் முடிக்க வேண்டிய வேலைகளையும் முழுமையாகச் செய்து முடிக்கமுடியாமல் போய்விடுகிறது. இப்படியே ஒவ்வொரு நாளும் நேரம் போதாமலேயே கடந்துபோய்விடுகின்றன. ஒரு நாளில் இருபத்தி நான்கு மணி நேரம் மட்டும் இருப்பது எனக்குப் போதவில்லை குருவே..’’ என்று கூறி, கைகட்டி உட்கார்ந்தான் குருவின் எதிரே.

‘‘கவலைப்படாதே.. இந்த பிரச்னையைச் சரிசெய்துவிடலாம். தினமும் இருபத்தி நான்கு மணி நேரத்தைவிட அதிக நேரத்தை உனக்கு மட்டும் கிடைக்கச்செய்யும் ஒரு மந்திரத்தை நான் உனக்குப் போதிக்கிறேன்’’ என்றார் குரு.

தள்ளி நின்று கேட்டுக்கொண்டிருந்த சிஷ்யனுக்கு ஆச்சரியம் மேலிட்டது. அதெப்படி இவனுக்கு மட்டும் நாட்களின் நேரத்தை அதிகரித்துக் கொடுக்கமுடியும்.. இயற்கையை மீறும் சங்கடமல்லவா அது.. அப்படியென்ன மகா மந்திரம் அது என்று யோசிக்க ஆரம்பித்தான்.

அருகே வந்து, இளைஞனின் பக்கத்திலேயே சம்மணமிட்டு உட்கார்ந்து கொண்டான். குருவை ஆச்சரியம் விலகாமல் பார்த்தான்.

அப்போது பகல் இரண்டு மணியைக் கடந்திருந்தது.

‘‘தினமும் எத்தனை மணிக்கு கண் விழிக்கிறாய் நீ?’’ என்று அந்த இளைஞனிடம் கேட்டார் குரு.

‘‘தினமும் உறங்கச் செல்வதற்கு நெடுநேரமாகிவிடுகிறது குருவே. அப்படியும் அன்றன்றைய பணிகளை முடிக்கமுடியாமல் போய்விடுவதால் கவலையோடுதான் தூங்குகிறேன். அதனால், காலையில் எழுவதற்கு கொஞ்சம் நேரமாகிவிடும். விடிந்து வெகுநேரமான பிறகுதான் எழுகிறேன்..’’ என்றான் இளைஞன்.

‘‘நாளை காலை சூரிய உதயத்துக்கு முன்னதாக ஆசிரமத்துக்கு வந்து சேர். அந்த மந்திரத்தை உனக்குக் கற்றுத்தருகிறேன்’’ என்றார் குரு.

நம்பிக்கையுடன் எழுந்து சென்றான் வந்திருந்த இளைஞன்.

மறுநாள் அவன் வருவதற்கு முன்னரே எழுந்து, காலைக்கடன்களையும் பூஜைகளையும் முடித்துவிட்டுக் காத்திருந்தான் சிஷ்யன். சூரியன் உதிப்பதற்கு முன்பே வந்து சேர்ந்துவிட்டான் அந்த இளைஞன்.

தியானத்தில் மூழ்கி இருந்த குருநாதர் கண் திறக்கவில்லை. அவரது தியானத்தைக் கலைக்க மனமின்றி, இளைஞனும் சிஷ்யனும் காத்திருந்தனர்.

சில நிமிடங்களில் தியானத்தை முடித்து, இன் முகத்துடன் கண்களைத் திறந்தார் குரு. தன் எதிரே கைகட்டி பவ்யமாக அமர்ந்திருந்த இருவரையும் பார்த்துப் புன்னகைத்தார்.

‘‘இதோ இன்னும் சில நிமிடங்களில் சூரியன் உதிக்கப்போகிறான். வாசலில் நின்று சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு வரலாம்.. வாருங்கள்..’’ என இருவரையும் அழைத்துக்கொண்டு ஆசிரமத்தின் வாசலுக்குச் சென்றார் குரு.

மூவரும் செக்கச் சிவந்திருந்த அதிகாலை சூரியனை வணங்கினார்கள். மறுபடியும் ஆசிரமத்துக்குள் புகுந்தார்கள்.

பயபக்தியுடன் குருவின் எதிரே அமர்ந்தான் இளைஞன். சிஷ்யனும்!

குரு பேச ஆரம்பித்தார்.. ‘‘சரி.. இப்போது ஒரு உண்மையைச் சொல்லப்போகிறேன். தொடர்ந்து இருபத்தியோரு நாட்கள் சூரியனுக்கு முன்பாகவே எழுந்து, சூரிய நமஸ்காரம் செய்யும் ஒருவனுக்குத்தான் அந்த மந்திரத்தைப் போதிக்கமுடியும். அதுதான் சாஸ்திரம். தினமும் மிக தாமதமாக கண்விழிக்கும் உன்னைத் தயார்படுத்துவதற்காகவே இன்று இங்கே வரச்செய்தேன். இனி.. தொடர்ந்து இருபது நாட்கள் இதேபோல் சூரியனுக்கு முன்னதாகவே எழுந்துவிடு. குளித்து முடித்து தயாராகிவிடு. ஆசிரமத்துக்கு வரத் தேவையில்லை. உன் வீட்டின் வாசலிலேயே சூரிய நமஸ்காரம் செய். இருபத்தி இரண்டாம் நாள் அதிகாலையில் இங்கே வா. நிச்சயமாக அந்த மந்திரத்தை உனக்குப் போதிக்கிறேன்’’ என்றார் குரு.

எப்பாடு பட்டாவது தொடர்ந்து இருபத்தோரு நாட்களும் சூரிய உதயத்துக்கு முன்பாக எழுந்துவிட வேண்டும், குருவிடம் வந்து அந்த மந்திரத்தைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற வைராக்கியத்துடன் சென்றான் அந்த இளைஞன்.

இருபத்தி இரண்டாம் நாள் அதிகாலை. சொன்னபடி, மிகவும் சுறுசுறுப்பாக வந்து சேர்ந்தான் அந்த இளைஞன்!

அவனுடன் சேர்ந்து, தானும் அந்த மகா மந்திரத்தை இன்று கற்றுக்கொள்ளப்போகிறோம் என்று ஆவலில் குதூகலித்தான் சிஷ்யன். இருவரும் குருவின் எதிரே உட்கார்ந்தனர்.

‘‘நாள் தவறாமல் நான் சொன்னபடி நடந்தாயா?’’ என்று கேட்டார் குரு.

‘‘ஆமாம் குருவே’’ என்றான் இளைஞன்.

‘‘வழக்கமாக தாமதமாகவே எழும் பழக்கமுள்ள நீ எப்படி இந்த நாட்களில் மட்டும் அதிகாலையிலேயே எழுந்துகொண்டாய்?’’ என்றார் குரு.

‘‘ஆரம்பத்தில் ஒரு சில நாட்கள் மிகவும் சிரமமாக இருந்தது. மந்திரத்தைக் கற்றுக்கொள்ளும் மனதிடம் இருந்ததால் சமாளித்துவிட்டேன். பிறகு சிரமமாகத் தெரியவில்லை..’’ என்றான் இளைஞன்.

‘‘சரி.. இப்போது அந்த மந்திரத்தைக் கற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறாயா?’’ என்றார் குரு.

‘‘வேண்டாம் குருவே. இனி அந்த மந்திரம் எனக்குத் தேவையில்லை என்று நினைக்கிறேன்..’’ என்றான் இளைஞன்.

அதிர்ச்சியும் ஆச்சரியமும் கலந்த விழிகளுடன் அவனை ஏற இறங்கப் பார்த்தான் சிஷ்யன்.

‘‘கடந்த பல வருடங்களாக சூரிய உதயத்தையே நான் பார்த்ததில்லை. ஆனால், இந்த இருபத்தி இரண்டு நாட்களாக தினமும் பார்த்துவிட்டேன். சூரிய நமஸ்காரம் செய்வதற்கு முன்னரே குளித்துமுடித்து தயாராக இருந்ததால், அதன் பிறகு சோம்பல் ஏற்படவில்லை. அன்றன்றைய பணிகளை ஆரம்பித்துவிடுகிறேன். சூரியன் மறையும் நேரத்துக்குள் திட்டமிட்ட அத்தனை பணிகளையும் முடித்துவிடுகிறேன். இனி அந்த மந்திரம் எனக்குத் தேவையில்லை என்பதை தெரிவித்துவிட்டுச் செல்வதற்காகவே இன்று வந்தேன்..’’ என்றான்.

மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார் குரு.. ‘‘அந்த மந்திரத்தை நீயாகவே கண்டறிந்துவிட்டாய்’’ என்றார்.

‘‘எந்த ஒரு செயலையும் தொடர்ந்து இருபத்தியோரு நாட்கள் செய்துவந்தால் அது பழக்கமாக மாறிவிடும். சூரியனுக்கு முன்னரே எழும் பழக்கம் இப்போது உனக்கு வந்துவிட்டது. பொதுவாகவே மிகவும் தாமதமாக கண் விழிப்பவர்கள்தான் அன்றன்றைய பணிகளை அன்றன்றே செய்து முடிக்காமல், நேரம் போதவில்லை என சாக்குச் சொல்வார்கள். நீயும் அதைத்தான் சொன்னாய். ஆனால், தினமும் கிடைக்கும் இருபத்தி நான்கு மணி நேரத்தையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளும் அந்த மகா மந்திரத்தை நீ இப்போது கற்றுக்கொண்டுவிட்டாய்..’’ என்றார் குரு.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : குரு சிஷ்யன் ஆசிரமம் சூரிய உதயம் மகா மந்திரம் 24 மணி நேரம்

More from the section

65. குட்டி குரு!
64. கண்ணாடிப் புன்னகை
63. விதைகள் விருட்சங்கள்
62. பயன் என்ன?
61. நான்!