குரு - சிஷ்யன்

14. தன்னறிவு

20th May 2019 10:00 AM | ஜி. கௌதம்

ADVERTISEMENT

 

குருவிடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்துடன் மூன்று புதியவர்கள் ஆசிரமத்துக்கு வந்திருந்தார்கள். ‘‘எங்களுக்கு ஞானம் கற்பிக்க வேண்டும்’’ என்று வேண்டினார்கள்.

மூன்று பேரையும் பரிசோதிக்க விரும்பினார் குருநாதர்.

ஆசிரமத்துக்கு அருகே ஒரு இலுப்பை மரம் இருந்தது. பெரிய மரம் அது. அதில் இருந்த பொந்துகளில் பல கிளிகள் வசித்து வந்தன. அந்த மரத்துக்குச் சென்று, யாரும் பார்க்காத சமயத்தில் ஆளுக்கு ஒரு கிளியைப் பிடித்து வரும்படி மூவரிடம் கூறினார் குரு.

ADVERTISEMENT

அதைக் கவனித்துக்கொண்டிருந்த சிஷ்யனுக்கு குழப்பம். கிளியைப் பிடிப்பதற்கும் ஞானம் கற்றுக்கொடுப்பதற்கும் என்ன சம்பந்தம் என அவனுக்குப் புரியவில்லை.

வந்திருந்தவர்கள் மூவரும் கிளி பிடிப்பதற்காக வெளியே சென்றுவிட்டனர். தன்னை சீடனாகச் சேர்த்துக்கொள்வதற்கு முன்னர் இப்படி கிளி பிடிக்கும் பரிசோதனையை நடத்தவில்லையே குருநாதர் என எண்ணிக்கொண்டான் சிஷ்யன்.

சிறிது நேரம் கழித்து முதலாவது நபர் திரும்பி வந்தான். அவன் கைகளில் ஒரு பச்சைக் கிளி இருந்தது. ‘‘குருவே.. நீங்கள் சொன்னபடி, யாரும் பார்க்காதபோது இந்தக் கிளியை லாவகமாகப் பிடித்து வந்துவிட்டேன்’’ என்றான் அவன்.

அதனை வாங்கி, வருடிக் கொடுத்தார் குரு. அருகே வைத்தார். கிளி, பறந்து மறைந்தது. ஓரிரு நிமிடங்களில் அது தன் கூட்டத்தை அடைந்துவிடும் என நினைத்து மகிழ்ந்து கொண்டான் சிஷ்யன்.

சற்று நேரத்தில் இரண்டாவது நபர் வந்தான். அவன் கைகள் காலியாகவே இருந்தன. ‘‘குருவே.. யாரும் அங்கே இல்லாவிட்டாலும், எப்போதும் யாரோ என்னைக் கவனித்துக்கொண்டிருப்பது போலவே உணர்ந்தேன். அந்த மரத்தில் சுதந்திரக் காற்றைச் சுவாசித்துக்கொண்டிருக்கும் எந்தக் கிளியையும் பலவந்தமாகச் சிறைப்பிடிப்பது தவறென்றே எனக்குத் தோன்றியது. அதனால் நீங்கள் இட்ட பணியை என்னால் நிறைவேற்ற முடியவில்லை’’ என்றான். தலை குனிந்துகொண்டான்.

‘‘பரவாயில்லை. சற்று நேரம் காத்திரு’’ என்றார் குரு.

மூன்றாவது நபரும் திரும்பி வந்தான். அவனும் வெறும் கைகளை வீசிக்கொண்டு வந்தான்.

‘‘குருவே.. அந்த மரம் இருக்கும் பகுதியில் ஆளரவம் ஏதுமில்லைதான். ஆனால், எனக்கு கிளியைப் பிடித்து வருவதில் கொஞ்சமும் உடன்பாடில்லை. எனக்கு எவ்விதத்திலும் துன்பம் கொடுக்காத அந்தக் கிளிக்கூட்டத்தில் இருந்து ஒரு கிளியை வலுக்கட்டாயமாகப் பிரித்துக் கொண்டுவர என் மனசாட்சி இடம் கொடுக்கவில்லை. மன்னித்துக்கொள்ளுங்கள் குருவே’’ என்றான் அந்த மூன்றாவது நபர்.

‘‘உங்கள் மூவருக்கும் நான் வைத்த பரிசோதனை முடிவடைந்துவிட்டது’’ என்றார்.

புதியவர்கள் மூவரும் எதிரே நின்றிருந்தார்கள். குருவின் சோதனையில் தேர்ச்சிபெற்றது யார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆர்வத்துடன் சிஷ்யனும் அவர்களுடன் சேர்ந்து நின்றுகொண்டான்.

முதலாமவனை அருகே அழைத்தார் குரு.

‘‘நான் சொன்னேன் என்பதற்காக, நன்மை தீமை எதையும் ஆராயாமல் சுதந்திரமாக தன் கூட்டத்துடன் வசித்து வந்த ஒரு கிளியை நீ பலவந்தமாகப் பிடித்துக்கொண்டு வந்தாய். உன் அறிவைப் பயன்படுத்தாமல் கண்மூடித்தனமாக செயல்படும் உன்னால் ஒரு சீடனாகப் பாடம் கற்றுக்கொள்ள முடியாது. நீ போகலாம்’’ என்று கூறினார். அவனை அனுப்பி வைத்தார்.

அடுத்து மூன்றாவது நபரை அருகே அழைத்தார்.

‘‘கடவுள் எப்போதும் உன்னுடனேயே இருக்கிறார். உன் மனசாட்சி வடிவத்தில் அவர்தான் உன்னை வழிநடத்திக்கொண்டிருக்கிறார். ஏற்கெனவே நீ ஞானம் அடைந்துவிட்டாய். அதனால் இனி யாரிடமும் பாடம் கற்க வேண்டிய அவசியம் இல்லை. நீயும் போகலாம்’’ என்றார்.

இறுதியாக இரண்டாமவனை அழைத்தார் குரு.

‘‘குருவே சொன்னபோதும் எது நல்லது எது கெட்டது என்று ஆராய்ந்து பார்க்கும் தன்னறிவு உன்னிடம் உள்ளது. இறைவன் எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பதை நீ உணரவும் ஆரம்பித்திருக்கிறாய். எனவே நீயே கற்றுக்கொள்ளத் தகுதியுள்ளவன். நேரம் வரும்போது சொல்லி அனுப்புகிறேன். நீ வந்து என்னிடம் பாடம் கற்றுக்கொள்ளலாம்’’ என்று கூறி அவனை ஆசிர்வதித்து அனுப்பி வைத்தார்.

Tags : குரு சிஷ்யன் கிளி இறைவன்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT