12. விடியட்டும்.. முடியட்டும்..

இன்று நாம் உயிருடன் இருப்பது இறைவன் நமக்களித்த வரம். நாளை என்பது நம் கையில் இல்லை.
12. விடியட்டும்.. முடியட்டும்..

நண்பர்கள் இருவருக்கு அடிக்கடி கருத்து மோதல் ஏற்பட்டுவிடும். எடுத்ததெற்கெல்லாம் சதா சண்டை சச்சரவுதான். அடிதடியும் அடிக்கடி நடப்பதுண்டு. நட்பு, விரோதமாக மாறி நாளுக்கு நாள் பகைமை அதிகரித்துக்கொண்டே போனது.

பெரிதாக எதுவும் அசம்பாவிதம் நடப்பதற்கு முன்னர் தன் நண்பர்கள் இருவரையும் எப்படியாவது திருத்த வேண்டும் என்று ஆசைப்பட்டான் அவர்கள் இருவருக்கும் பொதுவான இன்னொரு நண்பன். எதற்கெடுத்தாலும் சண்டையிட்டுக்கொள்ளும் அவர்கள் பழக்கத்தை மாற்ற விரும்பினான்.

கெஞ்சிக் கூத்தாடி தன் நண்பர்கள் இருவரையும் சம்மதிக்க வைத்தான் ஒருநாள். அவர்களை குருநாதரிடம் அழைத்து வந்தான். தேவையில்லாத விஷயங்களுக்கெல்லாம் சண்டையிட்டுக்கொள்ளாமல் ஒற்றுமையாக இருக்குமாறு தன் நண்பர்கள் இருவருக்கும் புத்திமதி கூறும்படி குருவைக் கேட்டுக்கொண்டான் அந்தப் பொது நண்பன்.

அடிதடிக்காரர்கள் இருவரையும் தன் அருகே அழைத்து உட்கார வைத்துக்கொண்டார் குருநாதர். தீர்க்கமான குரலில் ஓரிரு விநாடிகள் ஏதோ கூறினார்.

சற்றுத் தொலைவில் வேறு பணியில் ஈடுபட்டிருந்த சிஷ்யனுக்கு குருவின் குரல் தெளிவாகக் கேட்கவில்லை. ஆனால், நடப்பது அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருந்தான்.

குரு பேசி முடித்ததும் கோபக்கார நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். பாசக்காரர்களானார்கள். அவர்களது கண்கள் லேசாகக் கலங்கி இருந்தது போலவும் தெரிந்தது.

குருவுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அங்கிருந்து வெளியேறினார்கள் அவர்கள் இருவரும். ஒருவரது தோளில் மற்றவர் கைபோட்டு அணைத்தபடியே நடந்து சென்றார்கள். ஆச்சரியத்துடன் குருவுக்கு நன்றி சொன்னான் அவர்களை அழைத்து வந்திருந்த பொது நண்பன். அவனும் சென்றுவிட்டான்.

சிஷ்யனுக்கு இருப்புக்கொள்ளவில்லை. அப்படியென்ன அவர்களிடம் சொல்லியிருப்பார் நம் குருநாதர் என்ற கேள்வி அவனைக் குடைந்துகொண்டிருந்தது.

தன் பணியை நிறுத்தி வைத்துவிட்டு, குருவின் அருகே ஓடினான். ‘‘ஏதாவது மந்திரம் கற்றுக்கொடுத்தீர்களா அவர்கள் இருவருக்கும்? அப்படியென்ன மந்திரம் அது? எனக்கும் கற்றுக்கொடுங்களேன் குருநாதா’’ என்று கேட்டான்.

அவன் தோளில் அன்பாகத் தட்டிக் கொடுத்தார் குரு. அவர்களுக்குச் சொல்லிய அந்த மந்திர வார்த்தைகளை சிஷ்யனிடம் திருப்பிச் சொன்னார்..

‘‘இன்று நாம் உயிருடன் இருப்பது இறைவன் நமக்களித்த வரம். நாளை என்பது நம் கையில் இல்லை. உயிரோடு உறங்கச் செல்லும்போது, அடுத்த நாள் காலை உயிரோடு நாம் எழுவோம் என்பதற்கான உத்தரவாதம் யாருக்கும் இவ்வுலகில் இல்லை. இதுவே மனித வாழ்வின் யதார்த்தம். ஒவ்வொரு முறையும் நீங்கள் சந்திக்கும்போது, அதுவே உங்கள் கடைசி சந்திப்பாக இருக்கக்கூடும் என்று மனதில் நினைத்துக்கொள்ளுங்கள். விரோதம் உங்கள் மனதிலிருந்து தானாகவே வெளியேறிவிடும். வீண் விவாதங்களுக்காக சண்டை போட்டுக்கொள்ளமாட்டீர்கள்’’.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com