சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

11. எங்கே நிம்மதி?

By ஜி. கௌதம்| Published: 13th May 2019 11:08 AM

 

குழப்ப முகத்துடன் ஆசிரமத்துக்குள் நுழைந்தான் சிஷ்யன். அவனது முகமொழி அறிந்து, குழப்பத்துக்கான காரணம் கேட்டார் குருநாதர்.

தான் வரும் வழியில் இது வேறு மனிதர்களை சந்தித்ததாகவும், அதன் தொடர்ச்சியாக ஒரு ஐயம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினான் சிஷ்யன்.

அவன் சந்தித்த இருவரில் ஒருவன் ஊரில் மிகப்பெரிய செல்வந்தன். நகை வியாபாரி. எண்ணற்ற சொத்து சுகங்களுக்கு சொந்தக்காரன். இன்னொருவர் காலையில் வேலைக்குச் சென்றால், மாலையில் கூலி வாங்கிக்கொண்டு வீடு திரும்பும் சாதாரண தொழிலாளி.

‘‘நிம்மதியைத் தேடிக்கொண்டிருக்கிறேன் குருநாதரைச் சந்திக்க வேண்டும். நான் வரலாமா?’’ என்று கேட்டிருந்தான் அந்தச் செல்வந்தன்.

‘‘நான் நிம்மதியாக இருக்கிறேன். குருவைச் சந்திக்க வாய்ப்பு கிடைக்குமா? ஆசிர்வாதம் வாங்க வேண்டும்’’ எனக் கேட்டிருந்தான் அந்தத் தொழிலாளி.

சிஷ்யன் தன் சந்தேகத்தைக் கேட்டான்.. ‘‘அதெப்படி குருவே, சாதாரண தொழிலாளிக்குக் கிடைத்துவிட்ட நிம்மதி மிகப்பெரிய செல்வந்தனுக்குக் கிடைக்கவில்லை’’ என்று அப்பாவியாகக் கேட்டான்.

அந்த நபர்கள் இருவரையும் அழைத்து வருமாறு சொன்னார் குரு. அப்படியே செய்தான் சிஷ்யன். அவர்கள் இருவரையும் வரவேற்று அமரச் செய்தார் குருநாதர்.

இனிப்புடன் தயாரிக்கப்பட்டிருந்த உணவுப் பதார்த்தம் ஒன்றை எடுத்து வந்தார். சரிபாதியாய் பகிர்ந்து கொடுத்து, இருவரையும் சாப்பிடச் சொன்னார் குரு.

சாப்பிட்டுவிட்டு, ‘‘நன்றாக இருக்கிறது’’ என்று கூறி மகிழ்ந்தான் தொழிலாளி. ‘‘இனிப்பு சற்றுக் குறைவாக இருக்கிறது. அடுத்த முறை நான் வரும்போது இதைவிடச் சிறந்த இனிப்புகளை வாங்கி வருகிறேன்’’ என்றான் செல்வந்தன்.

அதைத் தொடர்ந்து இருவருக்கும் கொஞ்சம் வேப்பங்கொழுந்துகளைக் கொடுத்தார் குரு. சாப்பிடும்படி சொன்னார்.

‘‘கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் உடம்புக்கு நல்லது’’ என்றபடியே வாங்கி, லபக் என வாயில் போட்டுக்கொண்டான் தொழிலாளி.

கையில் வாங்கும்போதே முகம் சுளித்தான் செல்வந்தன். ‘‘கசக்குமே’’ என்றான். சாப்பிடத் தயங்கினான். ‘‘கொஞ்சம் சர்க்கரை கிடைக்குமா? அதைச் சேர்த்து அப்படியே விழுங்கி விடுவேன்’’ என்றான்.

சிஷ்யனை ஏறிட்டார் குருநாதர். ‘‘இனிப்புதான் நம்மைத் தேடிவரும் இன்பங்கள். கசப்புதான் நம்மை நாடிவரும் துன்பங்கள். இனிப்பையும் கசப்பையும் அளவிடும் உரிமையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் அவரவர் மனதில். இரண்டையும் நாம் எப்படி எடுத்துக்கொள்கிறோமோ அதைப் பொறுத்துத்தான் நமக்கு நிம்மதி கிடைக்கிறது’’ என்றார்.

சிஷ்யனுக்குப் புரிந்தது. தொழிலாளிக்குப் புரிந்தாற்போல் இருந்தது. செல்வந்தனுக்கு எதுவும் புரியவில்லை.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : குரு வாழ்க்கை இனிப்பு சிஷ்யன் கசப்பு இன்பம் துன்பம்

More from the section

65. குட்டி குரு!
64. கண்ணாடிப் புன்னகை
63. விதைகள் விருட்சங்கள்
62. பயன் என்ன?
61. நான்!