10. அன்னையா.. தந்தையா?

தாயின் தியாகம் ஒப்புவமை இல்லாதது. ஒவ்வொரு தாயும் தன் உயிரைப் பணயம் வைத்தே பிரசவத்துக்குத் தயாராகிறாள். பெண்ணாக இறந்து, தாயாக மறுபடியும் பிறக்கிறாள்..
10. அன்னையா.. தந்தையா?

மாதா, பிதா, குரு, தெய்வம்.. என்கிறது வேதம்.

‘மாதாவுக்குப் பின் ஏன் பிதா? உயிர் கொடுக்கும் தந்தைக்குப் பிறகுதானே, உதிரத்தையும் உருவத்தையும் கொடுக்கும் தாய் வர வேண்டும்?’

குழப்பமாக இருந்தது சிஷ்யனுக்கு. விளக்கம் வேண்டி குருவை அணுகினான்.

‘‘ஒரு தாய், ஆயிரம் தந்தைகளுக்குச் சமம்’’ என்றார் குருநாதர்.

சிஷ்யன் சமாதானமடையவில்லை. குழப்பம் குறையவில்லை.

‘‘விதையைக் கொண்டுவந்து பூமிக்குக் கொடுக்கும் பறவைக்கும், அதை விழலுக்கு இறைத்த நீராக்காமல் விருட்சமாக்கும் பூமிக்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே?’’ என்று கேட்டார் குரு.

‘‘நீங்கள் மனிதப் பிறப்பின் முதல் கட்டத்தைச் சொல்கிறீர்கள். தாய் - தந்தை இருவரில் யார் சிறந்தவர் என்பதை அளவிடுவதற்கு அதுமட்டும் போதுமா?’’ என எதிர்க்கேள்வி கேட்டான் சிஷ்யன்.

புன்னகைத்துக்கொண்டார் குரு. இன்னும் பேச விஷயம் இருந்தது சிஷ்யனிடம்.

‘‘கருவாக்கி, உருவாக்கம் செய்யும் தாயின் தியாகம் அளவிட முடியாததுதான். ஆனால் அதன் பின்னர், வளர்த்து.. ஆளாக்கி.. உலக அனுபவம் கொடுத்து.. சான்றோனாக்கி.. பிறந்த குழந்தை தானாகவே வாழக் கற்றுக்கொள்ளும்வரை அதைத் தூக்கிச் சுமந்து வழிகாட்டும் தந்தைதானே உயர்ந்தவராக இருக்க முடியும்!’’ என்றான் சிஷ்யன்.

‘‘தங்களை உருக்கிக்கொண்டு, குழந்தைகளுக்காக தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை அர்ப்பணிப்பவர்கள் தந்தையர்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மைதான்’’ என்றார் குரு.

மகிழ்ந்தான் சிஷ்யன். குருவை மடக்கிய தன் வாதத்திறமையை எண்ணி ஏற்பட்ட மகிழ்ச்சி அது.

தொடர்ந்தார் குரு. ‘‘தன்னை உருக்கிக்கொண்டு, சுற்றியிருப்பவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கும் மெழுகுவர்த்திபோலத்தான் தந்தையின் தியாகம்’’.

நிமிர்ந்து உட்கார்ந்தான் சிஷ்யன்.

‘‘ஆனால், அந்த மெழுகுவர்த்தி எரிய இறுதிவரை ஆதாரமாக இருக்கும் திரிக்குச் சமமானவள் தாய்’’.

அமைதியாகக் கவனித்தான் சிஷ்யன்

‘‘தாயின் தியாகம் ஒப்புவமை இல்லாதது. ஒவ்வொரு தாயும் தன் உயிரைப் பணயம் வைத்தே பிரசவத்துக்குத் தயாராகிறாள். பெண்ணாக இறந்து, தாயாக மறுபடியும் பிறக்கிறாள்’’.

குருவின் போதனை தொடர்ந்தது.

‘‘குழந்தையைப் பெற்றெடுப்பதோடு தாயின் தியாகம் நின்றுவிடுவதில்லை. உயிர் உள்ளவரை தாயின் இதயம் தன் குழந்தைக்காகவே துடித்துக்கொண்டிருக்கும். தவிர, தன் அன்பினாலும் தியாகத்தாலும் இறுதிவரையில் தந்தையை நல்வழி நடத்துவதும் அந்தத் தாய்தான்’’ என்றார் குரு.

தன் தாய் தந்தையரைப் பிரிந்து, பாடம் கற்றுக்கொள்வதற்காக குருகுலம் வந்திருந்த சிஷ்யன், அவர்கள் இருக்கும் திசை நோக்கி தரையில் விழுந்து வணங்கினான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com