திங்கள்கிழமை 16 செப்டம்பர் 2019

8. சிறிதினும் சிறிது கேள்!

By ஜி. கௌதம்| Published: 06th May 2019 10:00 AM

 

தெரிந்தோ தெரியாமலோ, சிறிய தவறு ஒன்றைச் செய்துவிட்டான் சிஷ்யன். அன்றைக்கு அவனுக்கு நேரம் சரியில்லை.

அவன் செய்த தவறை பொறுமையோடு சுட்டிக் காட்டினார் குரு. பதிலேதும் பேசாமல், அமைதியாக இருந்தான் சிஷ்யன். மிகவும் சின்னஞ்சிறிய பிழை என்பதால் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை அவன் மனம்.

அந்தப் பிழையின் காரணமாக அடுத்தடுத்த பணிகள் பாதிக்கப்பட்டன. மறுபடியும் அவனை அழைத்து, அவன் செய்த தவறினை மறுபடியும் நினைவுபடுத்தினார் குரு. ‘‘பார்த்தாயா.. காலையில் உனக்கு ஏற்பட்ட கவனக்குறைவினால் இன்று அனைத்து கடமைகளும் தாமதமாகவே முடிகின்றன’’ என்று கூறிவிட்டு, அவன் முகத்தையே உற்றுக் கவனித்தார்.

அப்போதும், எதுவும் பேசவில்லை சிஷ்யன். அவன் தன் தவறை உணர்ந்ததாகவே தெரியவில்லை. இந்தச் சின்னப் பிழையை ஏன் திரும்பத் திரும்ப நினைவூட்டிக்கொண்டே இருக்கிறார் குருநாதர் என அவன் மனம் குறுக்குக் கேள்வி கேட்டது.

ஒவ்வொரு பணிகளும் தாமதமாகி தாமதமாகி, சாப்பிட உட்காரும் நேரமும் தள்ளிப்போனது. இருவரும் உணவருந்த உட்கார்ந்தனர்.

‘‘நீதான் பசி பொறுக்கமாட்டாய். உன் தவறினால்தான் இந்தத் தாமதம்’’ என்றார் குரு. சட்டென அவர் மீது அவனுக்குக் கோபம் வந்தது.

‘‘ஒரே ஒரு பிழைதானே செய்தேன் குருவே. அதுவும் கடுகளவே ஆன குற்றம். அதற்கு ஏன் இத்தனை முறை அதையே சுட்டிக்காட்டிக் கொண்டிருக்கிறீர்கள்?’’ என அவரிடமே கேட்டு விட்டான்.

அவன் கேள்விக்கு, உணவருந்திய பின்னர் பதில் சொல்வதாகச் சொன்னார் குரு. இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.

குருவின் பதிலுக்காகக் காத்திருந்தான் சிஷ்யன்.

பேச்சை ஆரம்பித்தார் குரு.. ‘‘நீ சாப்பிட்ட உணவில் ஒரே ஒரு துளி விஷத்தைக் கலந்திருந்தால், அது விஷம் என்று உனக்கும் தெரிந்திருந்தால், அதை நீ சாப்பிட்டிருப்பாயா?’’ என்றார்.

‘‘மாட்டேன்’’ என்றான் சிஷ்யன். ‘‘இந்த உடல் பூமிக்கு வந்ததன் நோக்கம் அறியாமல், அதைச் செய்து முடிக்காமல், நம்மை நாமே அழித்துக்கொள்வது மாபெரும் பாவம். இதை நீங்கள்தான் எனக்குப் போதித்திருக்கிறீர்கள்’’ என்றும் சொன்னான்.

‘‘ஆம். விஷத்தில் துளியென்றும் குடமென்றும் பாகுபாடில்லை. நாம் செய்யும் தவறுகளும் அப்படித்தான். சிறிதென்றும் பெரிதென்றும் அளவு பார்த்துப் பிரிக்க வேண்டியதில்லை. தெரிந்து செய்தாலும், தெரியாமல் செய்துவிட்டாலும் அதன் விளைவுகளை நாம் சந்தித்தே ஆக வேண்டும். மிகச் சிறிய அச்சாணிதான் மாபெரும் தேரைச் சமநிலையில் வைத்திருக்கிறது. அச்சாணியில் சிறிய சேதம் ஏற்பட்டால் தேருக்குத்தான் சேதாரம். நாம் செய்யும் சிறிய தவறுகளை உற்றுக் கவனிக்காவிட்டால், நாளடைவில் பெரிய தவறுகளையும் கவனித்துத் திருத்திக்கொள்ளாமல் இருக்கப் பழகிவிடுவோம். செய்ததைப் பிழை என்று முழுமையாக உணர்ந்துகொள்ளும் மனது மட்டுமே, இன்னும் ஒருமுறை அதைச் செய்துவிடாமல் நம்மை கவனமாக இருக்கச் செய்யும்’’ என்றார் குரு.

செய்த பிழையைவிட, அதை உணராததே தான் செய்த பெரும்பிழை என்பது சிஷ்யனுக்கு அப்போதுதான் உரைத்தது. அதற்காகத்தான் மீண்டும் மீண்டும் அவர் அதை நினைவூட்டிக்கொண்டே இருந்தார் என்பதையும் உணர்ந்துகொண்டான்.

‘‘இனி அந்தத் தவறை நான் செய்யமாட்டேன் குருவே’’ என்று கூறினான் சிஷ்யன்.

‘‘அது எனக்கும் இப்போது தெரியும்’’ என்று கூறிப் புன்னகைத்தார் குரு.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : குரு தவறு சிஷ்யன் உணர்தல் பிழை

More from the section

63. விதைகள் விருட்சங்கள்
62. பயன் என்ன?
61. நான்!
60. சித்தம் பாக்கியம்
59. மகா மந்திரம்