7. இருக்கு! இல்லை!!

விளக்கு எரியும்போது வெளிச்சம் நிரம்பி இருக்கும். விளக்கு அணைந்தவுடன் வெளிச்சம் மறைந்துவிடும். வெளிச்சத்தில் இருந்த அதே உலகம்தான் வெளிச்சம் இல்லாதபோதும் அப்படியே இருக்கும்.
7. இருக்கு! இல்லை!!

இருட்டைக் கண்டாலே உடல் நடுங்கும் சிஷ்யனுக்கு. இருட்டு சாத்தானின் இருப்பிடம் என்றே அவன் நம்பியிருந்தான்.

பெரும் காற்றினால் ஆசிரமத்தின் விளக்கு அணைந்துவிடும் சமயங்களில் சர்வநாடியும் ஒடுங்கிப்போகும் அவனுக்கு. விளக்கை அணையாமல் வைத்திருப்பதற்காக, எந்நேரமும் எண்ணெய் விட்டுக் கவனித்துக்கொண்டே இருப்பான்.

நள்ளிரவு நேரம். ஆசிரமத்துக்குள் புகுந்த பூனை ஒன்று பாய்ந்து ஓடும்போது விளக்கைத் தட்டிவிட்டுச் சென்றது. அதிலிருந்த எண்ணெய் முழுவதும் கீழே கொட்டியது. விளக்கு, கீழே விழுந்து உருண்டு அணைந்தது.

சத்தம் கேட்டு விழித்துக்கொண்டான் சிஷ்யன். சுற்றிலும் இருள். பயம் மனதுக்குள் புகுந்தது.

குரு எங்கிருக்கிறார் என இருட்டில் அவன் கண்கள் துழாவின. அவர் உறக்கத்தில்தான் இருந்தார்.

எழுந்து நடந்து, சமையலறையில் வைத்திருக்கும் எண்ணெய்ப் பாத்திரத்தை எடுத்துவர வேண்டும். அதைச் செய்துமுடிக்க முடியுமா என அச்சமாக இருந்தது சிஷ்யனுக்கு. இறைவனை நினைத்தவாறே சிலையாக உட்கார்ந்திருந்தான்.

பிள்ளைக்குப் பசி வந்தால் அது சொல்லித்தானா தாய்க்குத் தெரிகிறது! சட்டென விழித்துக்கொண்டார் குருநாதர்.

நடந்ததை அறிந்துகொண்டார். அவரே எழுந்துபோய், எண்ணெய்ப் பாத்திரத்தை எடுத்துவந்தார். கவிழ்ந்து கிடந்த விளக்கை எடுத்து, உயரே தொங்கிய, தாங்கியில் பொருத்தினார். எண்ணெய் ஊற்றி, நெருப்பைப் பற்றவைத்தார். விளக்கு மறுபடியும் விட்ட இடத்தில் இருந்து வெளிச்சத்தைக் கொடுத்தது.

கூனிக்குருகி உட்கார்ந்திருந்த சிஷ்யனைப் பார்த்தார். அவன் முகத்தில் கொஞ்சம் கொஞ்சமாகக் கலையும் பயத்தையும் கவனித்தார்.

சிஷ்யனை அருகே வரும்படி அழைத்தார் குரு. அதற்காகக் காத்திருந்தவன்போல, எழுந்தோடி வந்தான் அவன்.

அவனது கரம் பற்றி, அருகே அமரவைத்துக்கொண்டார் குரு.

‘‘இருள் என்ற ஒன்று உலகத்தில் இல்லை. இல்லாத ஒன்றுக்காக நீ ஏன் பயப்படுகிறாய்?’’ என்றார்.

புரியாமல் அவரை ஏறிட்டான் சிஷ்யன்.

‘‘புறக்கண்களுக்குத்தான் விளக்கின் மூலம் கிடைக்கும் வெளிச்சம் தேவை. அகக்கண்களுக்கு உள்ளொளியே போதும். அதனால்தான் தன்னிலை அறிபவர்களுக்கும் தன்னிலை மறப்பவர்களுக்கும், வெளிச்சத்துக்கும் வெளிச்சமின்மைக்கும் வேறுபாடு தோன்றாது’’ என்றார் குரு.

அப்போதும் புரியவில்லை சிஷ்யனுக்கு.

‘இன்னொரு விதத்திலும் இதை விளக்குகிறேன்.. கேள்’’ என்றார் குரு. பேச்சைத் தொடர்ந்தார்.

‘‘விளக்கை எரியவிடுவதால் வெளிச்சம் கிடைக்கிறது. விளக்கு அணைந்துபோனால், வெளிச்சம் இல்லை. அவ்வளவே. வெளிச்சம் இல்லாதபோது தோன்றும் மாயப்பிம்பமே இருள் எனப்படுகிறது. உண்மையில் அப்படி ஒன்று இல்லவே இல்லை’’ என்றார்.

புரிந்தும் புரியாமலும் இருந்தது சிஷ்யனுக்கு. அவனுக்கு இன்னும் எளிமையாகப் புரியவைக்க முயன்றார் குரு.

‘‘காலிப் பாத்திரத்தில் நீர் ஊற்றினால் என்னாகும்?’’

கேள்வியைக் கேட்டுவிட்டு, அவனது பதிலுக்குக் காத்திராமல் குருவே பதிலையும் சொன்னார்.

‘‘பாத்திரம் முழுவதும் நீர் நிரம்பும். சரி, பாத்திரத்தில் இருக்கும் நீரை கீழே ஊற்றிவிட்டால் என்னாகும்? பாத்திரத்தில் நீர் இல்லாமல் காலியாக இருக்கும். சரிதானே?’’

‘‘ஆம் குருவே’’ என்றான் சிஷ்யன்.

‘‘நீருக்குப் பதிலாக அப்போது அந்தப் பாத்திரத்துக்குள் விஷம் நிரம்பி இருக்குமா?’’

‘‘இல்லை குருவே’’.

‘‘அதேபோலத்தானே இதுவும். விளக்கு எரியும்போது வெளிச்சம் நிரம்பி இருக்கும். விளக்கு அணைந்தவுடன் வெளிச்சம் மறைந்துவிடும். வெளிச்சத்தில் இருந்த அதே உலகம்தான் வெளிச்சம் இல்லாதபோதும் அப்படியே இருக்கும்!’’

புரிய ஆரம்பித்தது சிஷ்யனுக்கு.

‘‘சிலம்பாட்டம் போன்ற ஆயுதக் கலைகளில் உச்சபட்சம் என்பது கண்களைக் கட்டிக்கொண்டு விளையாடுவதுதான். அதேபோல், கண்களை மூடிக்கொண்டு உள்ளொளியைக் காண்பதே தியானத்தின் அடிப்படை. சூரியன் நிரந்தரம். வெளிச்சம் என்பது நிஜம். அதனை மறைப்பதால் ஏற்படும் நிழல்தான் இருள். நிழல், மாயை என்பது உனக்குத் தெரியும்தானே!’’

சிஷ்யனின் பயம் போக்க புற இருள் பற்றியும், அவனுக்கு அறிவூட்டுவதற்காக அக வெளிச்சம் பற்றியும் பேசி முடித்தார் குரு.

ஆசிரமத்துக்குள் நுழைந்த இரவுக் காற்றின் ஒரு கொத்து, விளக்கின் தீபத்தை முட்டிமோதி விலகியது. சமாளித்து மீண்ட தீபம் சுடர் விட்டு எரிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com