25. படிப்படியாக..

அதிர்ஷ்டத்தினால் கிடைக்கும் சரியான வாய்ப்பினைக் கோட்டை விடுபவர்கள், தரையிலேயே நின்றுவிடுகிறார்கள். அவர்களைத் தூக்கிவிடுவதற்காக முதல் படியில் காத்திருந்த அதிர்ஷ்டம், கோபித்துக்கொண்டு..
25. படிப்படியாக..

‘‘ஒரு காரியம் வெற்றிபெற வேண்டுமானால் அதிர்ஷ்டம் வேண்டும் என்கிறார்களே.. அப்படியானால் உழைப்புக்கு மதிப்பென்ன குருவே?’’

கேட்டான் சிஷ்யன். அவனையும் அவன் கேள்வியையும் மிகவும் ரசித்தார் குருநாதர். தொடர்ந்து கேட்டான் சிஷ்யன்.

‘‘அதிர்ஷ்டம்தான் மதிப்புக்குரியது என்றால், உழைப்புக்கு அர்த்தம் என்ன குருவே?’’

‘‘உழைப்புதான் எல்லா வெற்றிகளுக்கும் பெரும் காரணம். விடாமுயற்சியும் அதனோடு சேர்ந்துகொள்ள வேண்டும். கூடவே, அதிர்ஷ்டமும் இருந்தால் வெற்றி நிச்சயம்’’ என்றார் குரு. ‘‘அதிர்ஷ்டத்துக்கு இன்னொரு பெயர் கடவுளின் அனுக்கிரகம்’’ என்றும் கூறினார்.

‘‘உழைப்புதான் பெரும் காரணம் என்றால், அதிர்ஷ்டமோ கடவுளின் அனுக்கிரகமோ இல்லாமல் எல்லாச் செயல்களிலும் வெற்றி பெறலாம்தானே?’’

சிஷ்யனின் முகத்தில் சந்தேக ரேகைகள். குருவின் முகத்தில் சாந்தம்.

‘‘உழைப்பும் விடாமுயற்சியும் தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம். வாய்ப்பு நான்கு சதவிகிதம். அதிர்ஷ்டம் ஒரே ஒரு சதவிகிதம். இவை இருந்தால் போதும்.. ஒருவன் வெற்றிகளை அடைய..’’

‘‘ஒரே ஒரு சதவிகிதம் என்பது புறக்கணிக்கக்கூடிய அளவுதானே! அந்த ஒரு சதவிகித அதிர்ஷ்டம் இல்லாவிட்டால் ஜெயிக்க முடியாதா என்ன?!’’

சிஷ்யனின் ஆர்வம் குருவையும் ஆழமாகச் சிந்திக்கச் செய்தது. பொறுமையாக விளக்கினார்.

‘‘அடைய வேண்டிய இலக்கு நூறு படிகளைத் தாண்டிய பின்னர் இருப்பதாக எடுத்துக்கொள்வோம். இறைவன் சகலருக்கும் சரிசமமாகவே கருணை காட்டுகிறான். முதல் படியிலேயே அனைவருக்கும் அதிர்ஷ்டம் காத்திருக்கும். இரண்டாவது படியில் சரியான வாய்ப்பு காத்திருக்கும். அதிர்ஷ்டம் வலிய வந்து கதவைத் தட்டும். இதுவா, அதுவா என எப்போதுமே இரண்டு வாய்ப்புகளை அது நமக்கு அடையாளம் காட்டும். எது சிறப்பானது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டியது நாம்தான். இரண்டாவது படியிலேயே சரியான வாய்ப்பைத் தேர்ந்தெடுத்துவிட்டால், பரமபத ஏணி போல நேரடியாக ஆறாவது படிக்குப் போய்விடலாம். அங்கிருந்து ஒவ்வொரு படியும் உழைப்பையும் விடாமுயற்சியையுமே பிரதிபலிக்கின்றன. படிப்படியாக முன்னேறினால் நூறாவது படியைக் கடந்ததும் வெற்றி நிச்சயம்!’’

‘‘முதல் படியில் இருக்கும் அதிர்ஷ்டம் கை காட்டுகிற சரியான வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறினால் என்னாகும்?’’

‘‘சரியாகக் கேட்டாய். அதிர்ஷ்டத்தினால் கிடைக்கும் சரியான வாய்ப்பினைக் கோட்டை விடுபவர்கள், தரையிலேயே நின்றுவிடுகிறார்கள். அவர்களைத் தூக்கிவிடுவதற்காக முதல் படியில் காத்திருந்த அதிர்ஷ்டம், கோபித்துக்கொண்டு கடைசிப் படிக்குப் போய்விடுகிறது. இப்போது முதல் நான்கு படிகளில் வாய்ப்பும், அதனையடுத்த தொண்ணூற்றி ஐந்து படிகளில் உழைப்பும் விடாமுயற்சியும், நூறாவது படியில் அதிர்ஷ்டமும்.. இடம் மாறிக்கொண்டுவிடுகின்றன. அதன்பின்னர், சரியான வாய்ப்பைக் கண்டறிவது அவர்களுக்குச் சவாலாக அமைந்துவிடுகிறது. அந்தச் சவாலில் தாமாகவே ஜெயித்தால்தான் ஒவ்வொரு படியாக முன்னேறி, கடைசிப்படியில் காத்திருக்கும் அதிர்ஷ்டத்தைக் கடந்து வெற்றியை அடைய முடிகிறது..’’

‘‘ஆரம்பத்தில் அதிர்ஷ்டத்தைக் கோட்டை விட்டால், இறுதிக்கட்டம்வரை போராடிக்கொண்டே இருந்தாக வேண்டுமா குருவே?’’

‘‘தேவையில்லை.. உழைப்பின் தீவிரத்தையும் விடாமுயற்சியின் வேகத்தையும் பொறுத்து, நூறாவது படியில் இருக்கும் அதிர்ஷ்டம் சமாதானமடைந்து கீழிறங்கி வரும். எந்தப் படியில் வேண்டுமானாலும் அது நமக்காக வந்து நிற்கும். அங்கிருந்து நேராக நூறாவது படிக்கு அழைத்துச் செல்லும்’’.

‘‘அதிர்ஷ்டம் தானாகத் தேடிவரும்போது வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் உழைத்து முன்னேற வேண்டும். தவறினால்.. நாமே சரியான வாய்ப்பைக் கண்டறிந்து உழைக்கத் தயாராக வேண்டும். நமது விடாமுயற்சியின் வேகத்துக்கு ஏற்ப, எப்போது வேண்டுமானாலும் அதிர்ஷ்டம் நம்மை குறுக்கிட்டு வரவேற்கும். அது, ஐந்தாவது படியிலும் இருக்கலாம், அல்லது நூறாவது படியிலும் இருக்கலாம். நான் புரிந்துகொண்டது சரிதானா குருவே..’’ என்றான் சிஷ்யன்.

அவனைக் கட்டி அணைத்துத் தட்டிக் கொடுத்தார் குரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com