குரு - சிஷ்யன்

24. வேலை காலி இல்லை!

12th Jun 2019 10:00 AM | ஜி. கௌதம்

ADVERTISEMENT

 

வெளியே சென்றிருந்த சிஷ்யன் ஆசிரமத்துக்கு திரும்பும்போது, கூடவே ஒரு இளைஞனையும் அழைத்து வந்தான்.

வழியில் சிஷ்யனுக்கு ஏதோ ஒரு அனுபவம் குறுக்கிட்டிருக்கிறது என எண்ணிக்கொண்டார் குரு. சிஷ்யன் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பேசும்வரை காத்திருந்தார்.

பேசினான் சிஷ்யன்.. ‘‘நான் வழக்கமாக உணவு தானியம் வாங்கும் கடைக்காரரைத் தெரியுமல்லவா உங்களுக்கு. அவரது வாரிசு இவர். படித்து முடித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறார். எங்கு சென்றாலும், ‘வேலை காலி இல்லை’ என்றே கூறுகிறார்களாம். மனமுடைந்து இருக்கிறார். இவரால், இவரது தந்தைக்கும் மன உளைச்சல். அவர்தான் இவரை உங்களிடம் ஆசி வாங்க அனுப்பி வைத்திருக்கிறார்..’’ என்றான்.

ADVERTISEMENT

அந்த இளைஞனை உற்றுப் பார்த்தார் குரு. படித்த, பண்புள்ள இளைஞனாகவே தெரிந்தான். ஆனால், ஏதோ ஒன்று அவனிடம் குறைவாக இருப்பதை உணர்ந்தார். அதை அவனுக்கும் உணர்த்த விரும்பினார்.

இளைஞனையும் சிஷ்யனையும் எதிரே அமரச் சொன்னார். இருவரும் அமர்ந்தார்கள்.

இருவரையும் கண்களை இறுக மூடிக்கொள்ளச் சொன்னார். செய்தார்கள். ‘‘நான் சொல்லும்வரை கண்களைத் திறக்காதீர்கள்’’ என்றார் குரு.

அந்த இளைஞனிடம் கேட்டார்.. ‘‘ஏதாவது சத்தம் கேட்கிறதா உனக்கு?’’.

புருவங்களைச் சுருக்கி, யோசித்துவிட்டு பதில் சொன்னான் அவன்.. ‘‘நீங்கள் என்னுடன் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். காற்றில் திரைச்சீலை படபடக்கும் ஓசை கேட்கிறது. பூஜை அறையில் தொங்கிக்கொண்டிருக்கும் மணி அவ்வப்போது அசைவதும் காதில் விழுகிறது..’’ என்றான்.

‘‘அவ்வளவுதானா?’’ என்றார் குரு.

‘‘ஆம் ஸ்வாமி..’’ என்றான் அந்த இளைஞன்.

‘‘சரி கண்களைத் திறக்க வேண்டாம். அப்படியே இரு..’’ என்று அவனிடம் கூறிவிட்டு, சிஷ்யன் பக்கம் திரும்பினார் குரு. ‘‘சிஷ்யா.. உனக்கு என்ன கேட்கிறது?’’ என்றார்.

உற்சாகத்துடன் பதில் சொல்ல ஆரம்பித்தான் சிஷ்யன்.. ‘‘நீங்கள் பேசுவது, திரைச்சீலை படபடப்பது, பூஜை மணி அசைவது..’’.

‘‘அவ்வளவுதானா?’’ என்றார் குரு.

‘‘இல்லை குருவே. இன்னும் நிறைய சத்தங்கள் கேட்கின்றன..’’ என்றான் சிஷ்யன்.

‘‘சொல்..’’ என்றார் குரு.

‘‘ஆசிரமத்தின் பின்புறம் இருக்கும் பசு மாடு அசை போடும் ஓசை, அதனுடன் முட்டி மோதி விளையாடும் கன்றின் காலடிச் சத்தம், மரங்களில் இருக்கும் பலவிதமான பறவைகளின் குரலோசை, இன்னும் உற்றுக் கேட்கும்போது, என் இதயம் ஒலிக்கும் ஓசையையும் என்னால் கேட்க முடிகிறது..’’.

சிஷ்யன் ஒவ்வொன்றாகச் சொல்லச் சொல்ல, ‘‘ஆமாம்.. அதுவும் கேட்கிறது எனக்கு இப்போது’’ என்று சொல்லிக்கொண்டே இருந்தான் வந்திருந்த இளைஞன்.

இருவரையும் கண்களைத் திறந்துகொள்ளச் சொன்னார் குரு. அவர் என்ன சொல்லப்போகிறார் என்பது சிஷ்யனுக்குப் புரிந்துவிட்டது.

‘‘இடைவிடாது ஓடிக்கொண்டே இருக்கும் உன் இதயத்தின் ஓசை உனக்குப் பழகிவிட்டது. அதனால் அதை நீ ஒரு சத்தமாகவே உணரவில்லை. அதேபோல, இந்த அறைக்குள் மட்டுமே நீ கவனம் செலுத்தினாய். அதனால்தான் அறைக்கு வெளியே ஒலித்த எதுவுமே உன் கவனத்துக்கு வரவில்லை..’’.

‘‘ஆம் ஸ்வாமி. அது என் கவனக்குறைவுதான்’’ என்றான் இளைஞன்.

‘‘நீ கவனிக்கவில்லை என்பதால், அந்த ஓசைகளெல்லாம் இல்லை என்று ஆகிவிடாதல்லவா?’’

‘‘ஆம் ஸ்வாமி’’.

‘‘உனக்குத் தென்படாத வேலை வாய்ப்புகளும் அப்படித்தான். விசாலப் பார்வையால் உற்றுக் கவனி. உனக்கான பணி உன் கண்களுக்குத் தெரியவரும்’’.

இளைஞன் அமைதியாக இருந்தான். குரு பேசுவதையே கவனமாகக் கேட்டான். அதைக்காண சிஷ்யனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT