குரு - சிஷ்யன்

45. தகுதி

31st Jul 2019 03:58 PM | ஜி. கௌதம்

ADVERTISEMENT

 

‘உன்னை அறிந்துவிட்டாய். இனி உன் திறமைகளை அறிவாய். தகுதிகளை அடைவாய். அதற்கடுத்ததாக உன் தகுதிக்கேற்ற பணிகளை அடையாளம் காணும் நிலைக்கு உயர்வாய். அதன் பிறகு நீ எங்கு சென்று வேலை கேட்டாலும் உனக்குக் கிடைக்கும். சென்று வா..’ என்று குரு ஆசிர்வதித்து அனுப்பிவைத்த இளைஞன், திரும்பவும் ஆசிரமத்துக்கு வந்தான். இன்னொரு இளைஞனையும் கூடவே அழைத்து வந்திருந்தான்.

வேலை கிடைத்துவிட்டது என மகிழ்ச்சியுடன் கூறினான். தான் அழைத்து வந்திருந்தவனை குருவுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான்.

‘‘அய்யா.. இவன் என் நண்பன். என்னைவிட பல மடங்கு திறமைகள் கொண்டவன். ஆனால், இன்னும் வேலை கிடைக்காமல் கஷ்டப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறான். நானும் இப்படித்தான் இருந்தேன். உங்கள் ஆலோசனை என்னிடம் இருந்த குற்றம் குறைகளை உணரச் செய்தது. என் திறமைகளை நான் அறிந்துகொண்டேன். எனக்கு இப்போது ஒரு நல்ல வேலை கிடைத்தும் விட்டது. என்னைவிட அதிக திறமைகள் கொண்டிருக்கும் இவனிடமும் ஏதோ ஒரு குறை இருப்பதாக நான் உணர்கிறேன். ஆனால், அது என்ன என்று என்னால் உணர முடியவில்லை. உங்கள் ஆலோசனையும் அறிவுரையும் தேவை..’’ என்றான் வந்திருந்த இளைஞன்.

ADVERTISEMENT

நண்பனுக்கு உதவ நினைக்கும் அவனது நல்லெண்ணத்தைப் பாராட்டினார் குரு. அவனது நண்பனை இன் முகத்துடன் வரவேற்றார்.

‘‘அய்யா.. படிக்கும் காலத்தில் இவனைவிட எல்லா பாடங்களிலும் நான் அதிக மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். கலைகளிலும் விளையாட்டிலும் திறமை கொண்டவனாகவே இருந்திருக்கிறேன். நாங்கள் இருவரும் ஒரே அலுவலகத்துக்குத்தான் வேலை கேட்டுச் சென்றோம். இவனுக்கு கிடைத்துவிட்டது. எனக்குக் கிடைக்கவில்லை. இவன் மீது நான் பொறாமைப்படவில்லை. என்னிடம் என்ன குறை என்பதைத்தான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்..’’ என்றான் அவன்.

புன்னகைத்துக்கொண்டார் குரு. பேச ஆரம்பித்தார். விநோதமான பிரச்னை என்பதால் குருநாதர் இதற்கு என்ன தீர்வு கொடுக்கப்போகிறார் என்பதைக் கவனிக்கும் ஆர்வத்தில், அருகே வந்து அமர்ந்துகொண்டான் சிஷ்யன்.

‘‘நான் உன் நண்பனுக்குக் கொடுத்த அறிவுறையை திரும்பவும் இங்கே நினைவுபடுத்துகிறேன். உன்னை அறிந்துவிட்டாய். இனி உன் திறமைகளையும் அறிவாய். தகுதிகளை அடைவாய். அதற்கடுத்ததாக உன் தகுதிக்கேற்ற பணிகளை அடையாளம் காணும் நிலைக்கு உயர்வாய். அதன் பிறகு நீ எங்கு சென்று வேலை கேட்டாலும் உனக்குக் கிடைக்கும் என்றுதான் கூறியிருந்தேன். அவன், தன்னுள் இருக்கும் திறமைகளை அடையாளம் கண்டுகொண்டான். அடுத்தடுத்த நிலைகளை அனிச்சையாகவே அவன் அடைந்துவிட்டான். இப்படி எல்லோரும் தன் முனைப்பு இன்றி அனிச்சையாகவே அடுத்தடுத்த நிலைகளுக்குச் செல்வதில்லை. உன் திறமைகளை நன்கு அறிந்து வைத்திருக்கும் நீ, தகுதிகளை அடையத் தவறி இருக்கிறாய்’’ என்றார் குரு.

‘‘புரியவில்லையே ஸ்வாமி..’’ என்றான் அவன்.

‘‘உன் வீட்டு தண்ணீர்த் தொட்டியில் நீர் நிரம்பி இருக்கிறது என்று எடுத்துக்கொள்வோம். அதை எப்படிப் பயன்படுத்துவாய்? முகம் கழுவ வேண்டுமென்றால் ஒரு கோப்பையில் அள்ளிப் பயன்படுத்துவாய் அல்லவா. குளிக்க வேண்டும் என்றால் கோப்பை நீர் போதாது. பெரிய பாத்திரத்தில் அள்ளிக் கொள்வாய். தொட்டியில் இருக்கும் நீர், வீட்டின் சமையலறைக்கு தொடர்ச்சியாகச் செல்ல வேண்டும் என்றால் என்ன செய்வாய்? சிறிய கோப்பையோ, பெரிய பாத்திரமோ அப்போது உபயோகப்படாது. தொட்டிக்கும் சமையலறைக்கும் குழாய் மூலம் இணைப்பு கொடுக்க வேண்டும். சரிதானே நான் சொல்வது?’’ என்று கேட்டார் குரு.

தலையை ஆட்டி ஆமோதித்தான் இளைஞன்.

‘‘தொட்டியில் நிறைந்திருக்கும் நீர்தான் உன்னிடம் இருக்கும் திறமை. திறமைக்கு இன்னொரு பெயர் அறிவு. அதனை எதற்காக, எப்படிப் பயன்படுத்துவது என்பதைத் தெரிந்துகொண்டு, அதற்குத் தயாராக இருப்பதுதான் தகுதி..’’

குருவின் குரலை கேட்டுக்கொண்டிருந்த இளைஞன் கண்களை மூடி யோசிக்க ஆரம்பித்தான்.

‘‘குருவே.. நான் இன்னொரு உதாரணம் சொல்கிறேன். அது சரிதானா என்று கூறுகிறீர்களா?’’ என்று ஆர்வத்துடன் கேட்டான் சிஷ்யன். அவனது ஆர்வத்துக்கு அணை போடவில்லை குரு. சொல்லச் சொன்னார்.

‘‘மர வேலைகள் செய்யும் தச்சன் ஒருவனை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். தச்சு வேலைகள் செய்யத் தெரிந்துவைத்திருப்பது அவனது திறமை. அதனைப் பயன்படுத்த வேண்டுமென்றால் வெறும் கையை வீசிக்கொண்டு வேலைக்குப் போகக் கூடாது. தச்சு வேலைகளுக்கான உபகரணங்களை எடுத்துக்கொண்டுதான் போக வேண்டும். அதுதான் தகுதி. சரிதானா குருவே?’’ என்றான் சிஷ்யன். குருவின் கருத்தறியும் ஆவலோடு அவரைப் பார்த்தான்.

‘‘மிகவும் சரி..’’ என்று கூறி, சிஷ்யனைத் தட்டிக் கொடுத்தார் குரு.

ADVERTISEMENT
ADVERTISEMENT