குரு - சிஷ்யன்

44. காரணம் காரியம் வீரியம்

29th Jul 2019 12:00 AM | ஜி. கௌதம்

ADVERTISEMENT

 

குளக்கரையில் அமர்ந்து இயற்கைப் பேரழகை ரசித்துக்கொண்டிருந்தனர் குருவும் சிஷ்யனும். அப்போது அந்த இடத்துக்கு வந்த பள்ளிச் சிறுவர்கள் சிலர் கவனத்தை ஈர்த்தார்கள்.

காரசாரமாகப் பேசியபடியே வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள் அந்தச் சிறுவர்கள். அவர்களில் ஒருவன் முகம் சோகத்தில் இருந்தது. இன்னொருவன் கோபத்தில் இருந்தான். மற்றவர்கள் இருவரையும் சமாதானம் செய்யும் நோக்கத்தில் இருந்தார்கள்.

அவர்களுக்குள் என்ன பிரச்னை என்பதை அறிய முற்பட்டார் குரு. அவர்களை அருகே அழைத்து வருமாறு சிஷ்யனைக் கேட்டுக்கொண்டார்.

ADVERTISEMENT

வந்தார்கள் அந்தச் சிறுவர்கள். என்ன பிரச்னை உங்களுக்குள் என்று கேட்டார் குரு.

‘‘அய்யா.. இன்று இவனுக்கு பிறந்த நாள்..’’ என்றான் ஒருவன், கோபமுகத்துக்காரனைக் காட்டி.

‘‘அது மகிழ்வான நிகழ்வுதானே? அதற்கேன் கோபம்?’’ என்றான் சிஷ்யன்.

‘‘சிறிய பேனா ஒன்றை எனக்கு பரிசளித்தான் இவன்..’’ என்றான் கோபமுகத்துப் பையன். தனக்கு பரிசளித்தவனாக சோகமுகத்துக்காரனை காட்டினான் அவன்.

‘‘பிறந்த நாளன்று நண்பர்களிடம் பரிசு பெறுவதும் மகிழ்ச்சிகரமான நிகழ்வுதானே? அதற்கேன் கோபம்?’’ என்று மறுபடியும் கேட்டான் சிஷ்யன். குரு கேட்க நினைத்ததும் அதைத்தான்.

‘‘நான் இவனது பிறந்த நாளுக்கு இதைவிட விலை அதிகம் கொண்ட பரிசுப் பொருள் வாங்கிக் கொடுத்தேன். இவன் காலணா பெறாத இந்தப் பேனாவை வாங்கிக் கொடுத்தது எனக்குப் பிடிக்கவில்லை..’’ என்றான் பிறந்த நாள் பையன்.

அவனது கோபத்துக்கான காரணம் புரிந்தது குருவுக்கும் சிஷ்யனுக்கும். அது தவறு என்பதை அவனுக்குப் புரியவைக்க முயன்றார் குரு.

‘‘பேனாவை அவன் பரிசாகக் கொடுத்தது அவன் செய்த காரியம். அவன் கொடுத்த பொருள் வேண்டுமானால் விலை மலிவானதாக இருக்கலாம். அதன் பின்னால் இருக்கும் காரணம் விலை மதிப்பற்றது. தன் அன்பின் வெளிப்பாடாக அதைக் கொடுத்திருக்கிறான் அவன். அந்த அன்பினை எண்ணி மகிழ்வதே நட்பின் அழகு. எவ்வளவு விலை கொடுத்து வாங்கும் பொருளாக இருந்தாலும் அது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அழிந்துவிடும். அன்புக்கு அழிவில்லை. காரியத்தைவிட அதற்கான காரணமே இங்கே கவனிக்கத் தக்கது..’’ என்றார் குரு.

தலையாட்டி ஆமோதித்தான் சிஷ்யன். பொறுமையாகவும், கனிவான வார்த்தைகளுடனும், உள்ளன்புடனும் குருநாதர் பேசியது கோபப்பட்ட சிறுவனை யோசிக்கவைத்தது.

பரிசைக் கொடுத்து வருத்தத்தை வாங்கிக் கட்டிக்கொண்டவனை ஏறிட்டார் குரு. நண்பன் தன் அன்பை குறைவாக மதித்துப் பேசிவிட்டானே என்ற வருத்தம் அவன் முகத்தை விட்டு மறையவில்லை.

மறுபடியும் பிறந்த நாள் பையனிடம் பேசினார் குரு.. ‘‘உனக்கு அன்பு காட்டிய உன் நண்பனின் வாடிய முகத்தைப் பார். அடுத்து நீ செய்ய வேண்டிய காரியத்தின் முக்கியமும் அவசியமும் உனக்குப் புரியும்’’ என்றார்.

சில விநாடிகளுக்கு முன்பு காரணமே முக்கியமானது என்று சொன்ன குருநாதர், காரியமே முக்கியம் என்று இப்போது சொல்கிறாரே என்ற குழப்ப ரேகைகளுடன் சிஷ்யன் உட்பட அனைவரும் குருவை நோக்கினார்கள்.

‘‘அவன் உனக்குக் கொடுத்த பொருளைவிட நீ அவனுக்குக் கொடுத்த பொருள் விலை மதிப்பானது என்பதால், அவனைவிட நீயே உயர்ந்தவன் என்று உன் மனம் நினைத்துவிட்டது. அதனால்தான் நீ அவனைக் காயப்படுத்திவிட்டாய். நானே உயர்ந்தவன் எனக் கருதுவது உன்னைப் பற்றி நீ கொண்டிருக்கும் வீரியம். அதனுடன் ஒப்பிட்டால், ஒரு நல்ல நண்பனின் மனவருத்தத்தைப் போக்கும் காரியமே முக்கியமானதாகும்..’’ என்றார் குரு.

தன் தவறை உணர்ந்த அந்தச் சிறுவன், தன் நண்பனிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான். இருவரும் அன்பின் மிகுதியால் அணைத்துக்கொண்டார்கள்.

காரணம்.. காரியம்.. வீரியம்.. மூன்றையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அனுபவப் பாடம் கிடைத்த மகிழ்ச்சி சிஷ்யனுக்கு.

ADVERTISEMENT
ADVERTISEMENT