குரு - சிஷ்யன்

43. தகுதியும் திறமையும்

ஜி. கௌதம்

ஆசிரமத்தை விட்டு வெளியே சென்றிருந்த சமயம், வருத்தம் வடியும் முகத்துடன் ஒரு இளைஞனைக் கண்டான் சிஷ்யன்.

அவனை நெருங்கி, அவன் வருத்தத்துக்கான காரணத்தைக் கேட்டான். சிஷ்யன் ஆறுதலாகக் கேட்டதுமே அழத் தொடங்கிவிட்டான் அந்த இளைஞன். வேலை கிடைக்காத கொடுமையைச் சொல்லி கலங்கினான்.

‘‘வேலை கேட்டு எந்த அலுவலகத்துச் சென்றாலும், வேலை இல்லை என்று விரட்டியடிக்கிறார்கள். என் எதிர்காலம் குறித்த கவலை அதிகமாகிறது. நிகழ்காலத்தில் நம்பிக்கை முழுவதும் தொலைந்து விட்டது. ஈவு இரக்கமில்லாத இந்த உலகத்தை எனக்குப் பிடிக்கவில்லை..’’ என்றான் அவன்.

அவனைத் தேற்றி, தன்னுடன் ஆசிரமத்துக்கு அழைத்து வந்தான் சிஷ்யன். அவனைப் பற்றிக் கூறி, அவனுக்கு ஆலோசனை வழங்குமாறு குருநாதரிடம் கோரிக்கை வைத்தான்.

வாடிய முகம் கண்டு வாடிய சிஷ்யனின் குணத்தை எண்ணி மனம் மகிழ்ந்தார் குரு. அந்த இளைஞனை அன்புடன் ஏறிட்டார்.

‘‘இதுவரை எத்தனை அலுவலகங்கள் ஏறி இறங்கியிருப்பாய்?’’ என்று கேட்டார்.

‘‘கணக்கு வழக்கே இல்லை சாமி. தினமும் நான்கைந்து அலுவலகங்கள் செல்வதுண்டு. ஒரு இடத்திலும் என் திறமைகளும் படிப்பும் மதிக்கப்படவில்லை..’’ என்றான் அவன்.

அவனது படிப்பு குறித்து விசாரித்து அறிந்தார் குரு. நிச்சயம் அவன் ஒரு நல்ல பணிபுரியத் தகுதியானவன்தான் என்பதை உறுதி செய்துகொண்டார்.

அதன் பிறகும் ஏன் அவனுக்கு யாருமே வேலை வாய்ப்பு கொடுக்கவில்லை என ஆழ்ந்து யோசித்தார்.

‘‘என்ன சொல்லி எல்லா அலுவலகங்களிலும் வேலை கேட்பாய்?’’ என அவனிடம் கேட்டார்.

‘‘என்னைப் பற்றிச் சொல்வேன். என் கல்வித் தகுதி பற்றிச் சொல்வேன். என் தகுதிக்கேற்ற ஏதேனும் ஒரு வேலை கொடுக்கும்படி கேட்பேன்..’’ என்றான் அவன்.

அவன் பிரச்னைக்கான காரணம் புரிந்துவிட்டது குருவுக்கு. அதை அவனுக்கும் புரியவைக்க முயன்றார்.

‘‘உன் வயது என்ன?’’ என்றார்.

‘‘இருபத்தி நான்கு..’’ என்றான்.

‘‘தன்னை அறிதல் என்பது மிகவும் முக்கியமான குணம். அது உன்னிடம் இல்லை என்பதே உனக்கு பணியேதும் கிடைக்காததன் காரணம்..’’ என்றார் குரு.

அவர் வார்த்தைகளின் அர்த்தம் இளைஞனுக்குப் புரியவில்லை. அருகே இருந்த சிஷ்யனுக்கும்தான்!

‘‘நாம் யார் என்பதை நன்கு உணர வேண்டும். நம்மால் என்ன செய்ய முடியும் என்பதை அறிய வேண்டும். நமக்கு என்ன தேவை என்பதைக் கேட்டுப் பெறும் தகுதியை அதன்பிறகே நாம் அடைவோம்..’’ என்றார் குரு.

அப்போதும் அவர் வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மை அந்த இளைஞனுக்குப் புரியவில்லை.

‘‘நீ யார்.. உன் திறமை என்ன.. உன் தகுதி என்ன என்பதை நீயே தெரிந்து வைத்திருக்க வேண்டும். மற்ற யாரைவிடவும் உனக்கே அது முழுமையாக சாத்தியம். இருபத்தி நான்கு வருடங்களாக நீ உன்னை அறிவாய். அத்தனை ஆண்டுகள் நீ உன்னை அறிந்திருந்தும், உன் தகுதிக்கான பணி என்ன என்பதை நீ அறிந்துகொள்ளாமலேயே இருக்கிறாய். ஆனால், உன்னைப் பார்த்த சில நிமிடங்களிலேயே மற்றவர்கள் உன் தகுதியையும், தகுதிக்கான பணியையும் முடிவு செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறாய். இது எந்த விதத்தில் நியாயம்?’’ என்றார் குரு.

இளைஞனின் அறிவு விழித்துக்கொண்டது.

‘‘இது என் திறமை.. இதுவே என் தகுதி.. இந்தப் பணியே என் தகுதிக்கானது.. என தனக்கேற்ற பணியைக் குறிப்பிட்டுக் கேட்பவர்களைத்தான் வேலை கொடுப்பவர்கள் விரும்புவார்கள். என் தகுதிக்கேற்ற ஏதேனும் ஒரு வேலை கொடுங்கள் என்று பொத்தாம் பொதுவாகக் கேட்பவர்களை யாரும் விரும்பமாட்டார்கள். இவனது தகுதி என்னவென்று இவனுக்கே தெரியவில்லை என ஏளனமாகத்தான் பார்ப்பார்கள். அதுதான் ஒவ்வொரு அலுவலகத்திலும் உனக்கு நடந்திருக்கிறது’’ என்று தன் விளக்கத்தைக் கூறி முடித்தார் குரு.

தனக்குள் இருக்கும் பிரச்னையை புரிந்துகொள்ளாமல், உலகத்தை குற்றம் சாட்டிய தன் அறியாமை அந்த இளைஞனுக்கு தெளிவாகப் புரிந்தது.

‘‘உன்னை அறிந்துவிட்டாய். இனி உன் திறமைகளையும் அறிவாய். தகுதிகளை அடைவாய். அதற்கடுத்து உன் தகுதிக்கேற்ற பணிகளைக் கேட்கும் நிலைக்கு உயர்வாய். அதன்பிறகு நீ எங்கு சென்று வேலை கேட்டாலும் உனக்குக் கிடைக்கும். சென்று வா..’ என்று கூறி வாழ்த்தினார் குரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

கேஷுவல் சுந்தரி.. மீனாட்சி செளத்ரி!

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT