குரு - சிஷ்யன்

42. தீதும் நன்றும்

ஜி. கௌதம்

அன்றைய பொழுது சந்தேகத்துடன் விடிந்தது சிஷ்யனுக்கு!

‘‘மாதா, பிதா, குரு, தெய்வம்.. என்றுதானே உறவுகளை வரிசைப்படுத்துகிறார்கள். உறவுகளில் உன்னதமானதான நட்பை இதில் சேர்க்கவில்லையே. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் குருவே?’’ என்றான்.

‘‘உனது சிந்தனை மிகச் சரியானது’’ என்று அவனைப் பாராட்டினார் குரு. அவனது சந்தேகத்தை களையும் நோக்கத்துடன் பேசவும் ஆரம்பித்தார்.

‘‘ஒவ்வொரு உறவுக்கும் அதற்கான கடமைகள் இருக்கின்றன. விருப்பு வெறுப்புகளின்றி இறுதிவரை அன்பு காட்டுவது தாயின் கடமை. உலக ஞானம் ஊட்டி சான்றோனாக்குவது தந்தையின் கடமை. நல்லதையும் கெட்டதையும் பிரித்துப் பார்த்து அறிவைக் கொடுப்பது குருவின் கடமை. தோல்வி கண்டு துவளும் நேரங்களில் நம்பிக்கைத் தோள் கொடுப்பது தெய்வத்தின் கடமை. இவை இந்த நான்கு உறவுகளுக்குமான முக்கியக் கடமைகள் மட்டுமே. இன்னும் பல கடமைகள் இருக்கின்றன’’.

செவிகளால் பருகி, சிந்தைக்குள் நிரப்பிக்கொண்டிருந்தான் சிஷ்யன்.

‘‘நல்ல நண்பனின் கடமைகள் என்னவென்று பட்டியலிட்டால்.. மேலே சொன்ன நான்கு விஷயங்களும் அதில் இருக்கும். அதுதான் நட்பின் பெருமை. அன்னையாக.. தந்தையாக.. குருவாக.. தெய்வமாக.. இப்படி அத்தனை உறவுகளின் அடையாளங்களையும் நல்ல நண்பர்களிடம் பார்க்கலாம். எல்லாமுமாக இருக்கும் உறவு என்பதால்தான் நட்பை வரிசையில் வைக்கவில்லை, பொதுவில் வைத்திருக்கிறார்கள்..’’ என்றார் குரு. தொடர்ந்தார்.

‘‘எல்லாமுமாக இருக்கும் உறவு மட்டுமல்ல, எல்லாவற்றையும் கடந்த உறவும் நட்புதான். எல்லா உறவுகளுக்கும் எல்லைகள் உண்டு, கட்டுப்பாடுகளும் உண்டு. ஆனால், வரையறைகள் எல்லாவற்றையும் கடந்த உறவே நட்பு. நண்பர்களிடம் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம். விவாதிக்கலாம். குற்றம் குறைகளை மறைத்துக்கொள்ளத் தேவையில்லை. பொய்யுரைக்கவும் போலிப் புன்னகைக்கும் அவசியம் இல்லை. நண்பர்கள் மட்டுமே இறுதி வரை உடனிருக்கும் உறவுகள்..’’ என்றார் குரு.

நட்பின் முக்கியத்துவம் சிஷ்யனுக்குப் புரிந்தது. ஆனாலும், இன்னொரு கேள்வி மூலம் குருவிடம் இருந்து மேலும் கற்றுக்கொள்ள முயன்றான். கேள்விகளே ஞானத்தின் திறவுகோல்கள் என்பது அவனுக்குத் தெரியும்.

‘‘கடமைகளை மீறுகின்ற தாயையும், தந்தையையும், ஆசிரியரையும் அரிதாகவே காண்கிறோம். அப்படியே காண நேர்ந்தாலும், விதியை மீறிய விதி விலக்குகளாகவே அவற்றை எடுத்துக்கொள்கிறோம். ஆனால், நட்பில் அப்படியில்லையே? நட்பைத்தானே நல்ல நட்பு - கூடா நட்பு என இரண்டு பெரும் கூறுகளாகப் பிரித்துவைத்துப் பேசுகிறோம்?’’ என்று தன் ஐயத்தை கேள்வியின் தொணியில் எடுத்துவைத்தான் சிஷ்யன்.

‘‘ஆம். மனித வாழ்வில் நட்புக்கு அதிக முக்கியத்துவம் இருப்பதனால்தான் அதனை மற்ற உறவுகளை விடவும் அதிக கவனம் செலுத்துகிறோம். ஒரு கோப்பை பாலில் ஒரே ஒரு துளி மோர் சேர்த்தால்.. அது தயிராகிறது. தன் வாழ்வின் அடுத்த நிலையை அடைகிறது. மாறாக, ஒரே ஒரு துளி விஷம் சேர்த்தால்.. மொத்தமும் விஷமாகிறது. அது தன் வாழ்வின் அடுத்த நிலையினை அடைவதில்லை. கூடவே, அதனால் மற்றவர்களுக்கும் தீமையே விளையும். நல்ல நட்புக்கும், கூடா நட்புக்கும் இதுவே உதாரணம். ஒரே ஒரு நண்பனால் உயரத்துக்குப் போனவர்களும் உண்டு. ஒரே ஒரு நண்பனால் சரிவுகளைச் சந்தித்தவர்களும் உண்டு. தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பார்கள் அல்லவா.. நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுக்காதவர்களுக்கு இது பொருந்தாது. தீதும் நன்றும் நண்பர்கள் மூலமே கிடைக்கும்!’’.

பேசி முடித்தார் குரு. ஊரில் இருக்கும் தன் நண்பர்களின் முகங்களையெல்லாம் நினைத்துக்கொண்டான் சிஷ்யன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடும்பத்துடன் வாக்களித்த சூர்யா; ஜோதிகா பங்கேற்காதது ஏன்?

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

தேர்தல் பணிக்குச் சென்றபோது விபத்து: ஆசிரியை கணவர் பலி!

கடக் நகராட்சி துணைத்தலைவர் குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கொடூரக் கொலை

தமிழகத்தில் 1 மணி நிலவரம்: 40.05 % வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT