குரு - சிஷ்யன்

40. ஜோதிடம் நிஜமா?

19th Jul 2019 12:00 AM | ஜி. கௌதம்

ADVERTISEMENT

 

ஜோதிடத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டவராக இருந்தார் வணிகர் ஒருவர். அவர் பார்க்காத ஜோதிடர்களே இல்லை. அந்த அளவுக்கு எப்போதும் ஜாதகத்தைக் கக்கத்தில் வைத்துக்கொண்டு அலைபவராகவே அறியப்பட்டார்.

ஒருநாள் குருநாதரையும் சந்திக்க வந்தார்.

‘‘என் ஜாதகத்தைப் பார்த்த எல்லா ஜோதிடர்களும் எனக்கு நல்ல நேரம் வந்துவிட்டதாகவே கூறுகிறார்கள். வெற்றிகள் என்னைத் தேடிவரும் என்றுதான் பலன் கூறுகிறார்கள். ஆனால், அப்படியேதும் நடக்கவில்லை. நல்லதைவிட கெட்டதைத்தான் அதிகம் சந்திக்கிறேன். வெற்றிகளைவிட தோல்விகளே அதிகமாகக் கிடைக்கின்றன. என் ஜாதகத்தில் குறையேதும் இருக்கிறதோ என கவலையாக இருக்கிறது ஸ்வாமி..’’ என்று சோகம் வடியும் முகத்துடன் கூறினார்.

ADVERTISEMENT

அவரைப் பார்ப்பதற்கே பரிதாபமாக இருந்தது. ஆசுவாசப்படுத்துவதற்காக கோப்பையில் நீர் எடுத்துவந்து பருகக் கொடுத்தான் சிஷ்யன்.

பருகிவிட்டு தன் பரிதாப முகபாவத்தைத் தொடர்ந்தார் அந்த வணிகர்.

பேச ஆரம்பித்தார் குருநாதர்.. ‘‘ஜோதிடத்தை முழுதும் நம்பிக்கொண்டு ஜோதிடர்களைச் சந்திப்பதற்காகவே ஊர் ஊராக அலைந்து, தொலைந்துபோனால் திரும்ப வராத நிகழ்காலத்தை வீணடிப்பது தவறு. நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை. சர்க்கரைப் பொங்கல் உங்களுக்குப் பிடிக்கும் என்பதற்காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வேளையும் அதையே சாப்பிட்டுக்கொண்டிருக்க விரும்புவீர்களா?’’ என்றார்.

‘‘அப்படியானால் ஜோதிடத்தைப் பொய் என்று சொல்கிறீர்களா ஸ்வாமி?’’ என்று திருப்பிக் கேட்டார் வணிகர்.

‘‘அப்படியில்லை’’ என்றார் குரு. தொடர்ந்து ஆழமாகப் பேசினார்.. ‘‘கோள்களை அடிப்படையாகக் கொண்டதுதான் ஜோதிட சாஸ்திரம். தன் தவ வலிமையால் ஒன்பது கோள்களையும் சிறைப்பிடித்தவன் ராவணன். கோள்களைப் படிக்கட்டுகளாக்கி அவற்றின் மீதேறி சிம்மாசனம் அமர்ந்தவன். அவனது கதி என்ன என்பது தெரியும்தானே!’’.

நிமிர்ந்து உட்கார்ந்தான் சிஷ்யன்.

குரு தொடர்ந்தார்.. ‘‘ஜோதிட சாஸ்திரங்களைக் கரைத்துக் குடித்தவன் சகாதேவன். அவன் குறித்துக்கொடுத்த நாளில்தான் போருக்குப் போனான் துரியோதனன். அவனது கதி என்ன என்பதும் தெரியும்தானே!’’.

நிமிர்ந்து உட்கார்ந்தார் அந்த வணிகரும்.

குரு பிரவாகம் தொடர்ந்தது.. ‘‘நூற்றுக்கணக்கானோர் உங்கள் ஊரில் வணிகம் செய்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரையும் முந்தி நின்று நீங்களே எப்போதும் வெற்றியாளராக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும், அதற்காக ஜோதிடர்களைச் சந்திப்பதும் பேராசை மட்டுமல்ல.. முட்டாள்தனமும்கூட. உங்கள் ஜாதகம் அருமையாக இருக்கிறது என ஜோதிட சாஸ்திரம் கூறலாம். நீங்கள் சந்தித்த ஜோதிடர்களும் கூறலாம். ஆனால், உங்களோடு களத்தில் இருக்கும் நூற்றுக்கணக்கானோரின் ஜாதகங்கள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதை நீங்கள் சந்தித்த ஜோதிடர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லையே! அத்தனை பேரின் ஜாதகங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால்தானே யாருக்கு பலாபலன்கள் அதிகமாக இருக்கின்றன என்று கூற முடியும். மற்றவர்களின் ஜாதகங்களை மட்டமாக எடுத்துக்கொண்டு, நீங்கள் மட்டுமே எப்போதும் வெற்றியாளர் என்று கூறுவது எப்படி சரியானதாக இருக்க முடியும்..’’.

குருநாதர் பேசப்பேச.. குழம்பிப்போனார் அந்த வணிகர்.

‘‘கர்மவினைக்கான பலன்களை ஜோதிட சாஸ்திரம் மூலம் அறியலாம். ஆனால், அதனை அறிந்துகொள்வதால் எவ்வித உபயோகமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஜாதகத்தின்படி கோள்கள் ஒருவனுக்குச் சாதகமாக இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அதனைத் தெரிந்துகொண்ட அலட்சியத்தாலும் முயற்சியின்மையாலும் அவன் தனக்கான வெற்றி வாய்ப்புகளை இழக்க நேரிடலாம்.

ஜாதக அடிப்படையில் ஒருவனுக்கு நேரம் சரியில்லை என்று எடுத்துக்கொள்வோம். ஆனாலும்.. உழைப்பும் விடாமுயற்சியும் அவனை வெற்றியாளனாக ஆக்கும். இதைத்தான் விதியை மதியால் வெல்லமுடியும் என்கிறார்கள். ஆக.. ஜோதிடம் உண்மை. உழைப்பும் விடாமுயற்சயும் அதை விடவும் உண்மை’’ என்றார் குரு.

‘‘ஒப்புக்கொள்கிறேன் ஸ்வாமி. ஜோதிடர்களைச் சந்திப்பதற்காக ஊர் ஊராகச் சென்றிருக்கிறேன் நான். அதற்காக விரயம் செய்த நாட்களை வியாபாரத்தைக் கவனிப்பதற்குச் செலவு செய்திருந்தால் நிச்சயம் இப்போதிருப்பதைவிட நல்ல நிலையை அடைந்திருப்பேன்’’ என்று கூறிவிட்டு குருவை வணங்கினார் வந்திருந்த வணிகர்.

சிஷ்யனுக்கும் அருமையான பாடம் கிடைத்தது.

ADVERTISEMENT
ADVERTISEMENT