39. அகமும் புறமும்

மனதில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டிராதவர்கள் எத்தனை கோயில்களுக்குச் சென்று வந்தாலும் அதனால் பலனேதும் கிடைப்பதில்லை
39. அகமும் புறமும்

அன்று மிகவும் மகிழ்ச்சியான மன நிலையில் இருந்தார் குருநாதர். சிஷ்யனை அருகே அழைத்து உட்கார வைத்துக்கொண்டார். அவனுடன் பேச ஆரம்பித்தார்.

‘‘ஒரு புதிர் சொல்கிறேன். விடை கூறுவாயா?’’ என்றார்.

‘‘முயற்சிக்கிறேன் குருவே..’’ என்றான் சிஷ்யன்.

‘‘கண் மருத்துவர் ஒருவரைச் சந்திக்கச் சென்றான் ஒருவன்..’’

‘‘ம்..’’

‘‘எவ்வளவு முயற்சித்தாலும் என்னால் எதையும் படிக்க முடியவில்லை என்றான். மருத்துவர் அவனை இருக்கையில் உட்காரவைத்து, பரிசோதனைகளை ஆரம்பித்தார். அவன் கண்களில் ஒரு கண்ணாடியை அணிவித்தார். எதிரே இருந்த பலகையில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளைக் காட்டி, இப்போது படிக்க முடிகிறதா என்று கேட்டார்..’’

‘‘சரி..’’

‘‘அவன் அந்தப் பலகையையே ஓரிரு விநாடிகள் உற்றுப் பார்த்தான். பிறகு, என்னால் படிக்க முடியவில்லை அய்யா என்றான். அடுத்ததாக இன்னொரு கண்ணாடியை அணிவித்தார் மருத்துவர். அப்போதும், என்னால் படிக்க இயலவில்லை என்றே கூறினான் அவன்..’’

‘‘அப்புறம்?’’

‘‘இப்படியே மருத்துவர் தன்னிடம் இருந்த அத்தனை கண்ணாடிகளையும் அவனுக்கு அணிவித்துப் பரிசோதனை செய்து பார்த்தார். ஒவ்வொரு முறையும், என்னால் படிக்க முடியவில்லை என்றே கூறிக்கொண்டிருந்தான் அவன்’’.

சிஷ்யன் யோசிக்க ஆரம்பித்தான்.

‘‘பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு அணிவித்து சோதனை செய்வதற்காக மருத்துவர் வைத்திருந்த அத்தனை கண்ணாடிகளும் அவனுக்குப் பொருந்தவில்லை. தன்னிடம் இருந்த எல்லா உபகரணங்களைக் கொண்டும் அவனை பரிசோதித்துப் பார்த்தார் மருத்துவர். நேரம்தான் கழிந்ததே ஒழிய, அவனிடம் பலனேதும் இல்லை. அவனால் பலகையில் இருந்த வார்த்தைகளைப் படிக்கவே முடியவில்லை..’’

ஆழமான யோசனைக்குப் போயிருந்தான் சிஷ்யன்.

‘&தன் அனுபவத்தில் அப்படி ஒரு நோயாளியைப் பார்த்திராத அந்த மருத்துவர் குழம்பிவிட்டார். தன் திறமைக்கே இவன் சவாலாக இருக்கிறானே என மிகவும் கவலையுற்றார்..’’

மருத்துவருக்கு ஏற்பட்ட அதே குழப்பம் சிஷ்யனுக்கும் ஏற்பட்டது. அடுத்து குரு என்ன சொல்லப்போகிறார் என்று கேட்க ஆவலுடன் காத்திருந்தான்.

‘‘அவன் கண்களில் என்ன பிரச்னை என்று இறுதிவரை அந்த மருத்துவரால் கண்டறிய முடியவில்லை. என்னடா இது சோதனை என்று வேதனையுற்று, தலையில் கைவைத்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார். ஆனால், அந்த நேரத்தில்.. அந்த இடத்தில் நீ இருந்திருந்தால்.. அவனுக்கு என்ன பிரச்னை என்பதை நீ கண்டுபிடித்திருப்பாய் என்று நான் நம்புகிறேன். நீ என்ன சொல்கிறாய்?’’ என்று கேட்டுவிட்டு, குறும்புடன் புன்னகைத்தார் குருநாதர்.

குரு அவன் மீது நம்பிக்கை கொண்டிருப்பதை நினைத்து லேசாக பெருமைப்பட்டுக்கொண்டான் சிஷ்யன். ஆனாலும் அவனால் புதிரின் விடை என்னவென்று யூகிக்க முடியவில்லை.

‘‘கோயில் கோயிலாகச் சென்று கும்பிட்டு வந்தாலும் மனிதர்கள் பலருக்கு இறைவனின் கருணை கிடைப்பதே இல்லை, அது ஏன் குருவே என்று நேற்று என்னிடம் ஒரு கேள்வியை முன் வைத்திருந்தாய் அல்லவா. அதற்கான பதிலும், இந்த புதிர்க்கான விடையும் ஒன்றுதான். நன்றாக யோசித்துப் பார்..’’ என்று அவனை உற்சாகப்படுத்தினார் குரு.

‘‘அவ்வளவு நிபுணத்துவம் கொண்ட மருத்துவராலேயே அறிய முடியாததை நான் எப்படி அறிய முடியும் குருவே?’’ என்று கேட்டான் சிஷ்யன்.

‘‘உனக்கு எழுதப் படிக்கத் தெரியும். உன்னால் விடையை யூகிக்க முடியும்..’’ என்று கூறி தன் குறும்புப் புன்னகையைக் காட்டினார் குரு.

குருவின் வார்த்தைகளில் கிடைத்த துப்பினை இறுகப் பற்றிக்கொண்டான் சிஷ்யன். சரியான விடையைக் கூறிவிட்டான்.

‘‘அவனுக்கு படிப்பறிவில்லை. எழுதப் படிக்கத் தெரியாது. அதனால்தான் எத்தனை கண்ணாடிகள் அணிவித்துப் பார்த்தாலும் அவனால் எந்த வார்த்தைகளையும் வாசிக்க முடியவில்லை!’’ என்று உரத்த குரலில் கூறினான் சிஷ்யன்.

‘‘சரியான விடை. மனதில் முழுமையான இறை நம்பிக்கை கொண்டிராதவர்கள் எத்தனை கோயில்களுக்குச் சென்று வந்தாலும் அதனால் பலனேதும் கிடைப்பதில்லை என்ற உண்மையும் உனக்கு இப்போது புரிந்துவிட்டதல்லவா!’’ என்று அன்றைய பாடத்தை நிறைவு செய்தார் குரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com