குரு - சிஷ்யன்

58. பிடித்ததைச் செய்!

30th Aug 2019 04:24 PM | ஜி. கௌதம்

ADVERTISEMENT

 

ஆசிரமத்துக்கு அருகே இருந்த பரந்த புல்வெளியில் சிறுவர்கள் விளையாடிக்கொண்டிருந்தனர். எல்லோரும் சின்னஞ்சிறு வாண்டுகள்.

அந்த வழியே நடந்து வந்துகொண்டிருந்தனர் குருவும் சிஷ்யனும். சற்று நேரம் அமர்ந்து, குழந்தைகள் விளையாடுவதை ரசிக்க விரும்பினார் குருநாதர். பார்ப்பதற்கு அத்தனை அழகாக இருந்தது குழந்தைகள் அனைவரும் குதூகலித்து விளையாடும் அந்தக் காட்சி.

ஓரமாக உட்கார்ந்து ரசிக்க ஆரம்பித்தார் குரு. சிஷ்யனோ, தன் வாண்டு வயதுக்கே போயிருந்தான். விளையாடும் சிறுவர்களை நெருங்கி நின்று, அவர்களை உற்சாகப்படுத்தி குரல் கொடுத்துக்கொண்டிருந்தான்.

ADVERTISEMENT

விளையாட்டில் தோற்றுப்போன சிறுவர்கள் ஒவ்வொருவராக வந்து குருவின் அருகே அமர்ந்தார்கள். குருவைப் பார்த்து புன்னகைத்துவிட்டு, தொடர்ந்து ஆடிக்கொண்டிருக்கும் மற்ற சிறுவர்களையே ஆர்வத்துடன் கவனித்தார்கள். ஆ ஊ என குரல் கொடுத்து விளையாடிக்கொண்டிருந்தவர்களை உசுப்பேற்றியபடியே இருந்தார்கள்.

சிஷ்யனும் வந்து குருவின் அருகே அமர்ந்துகொண்டான்.

தன் அருகே அமர்ந்திருந்த சின்னப் பையன்களிடம் கனிவாக பேச முயன்றார் குரு.

‘‘ஆட்டத்தில் தோற்றுவிட்டீர்களே.. வருத்தமாக இல்லையா?’’ என்றார்.

‘‘அதனால் என்ன? அடுத்த ஆட்டத்தில் ஜெயிச்சிடுவோமே!’’ என்றார்கள் சொல்லிவைத்தாற்போல அத்தனை சிறுவர்களும்.

‘‘இந்த முறை தோற்றதனால் இந்த விளையாட்டின் மீது வெறுப்பேதும் வரவில்லையா?’’ என்று கேட்டார் குரு.

தீர்க்கமாக இருந்த ஒரு சிறுவன் பதில் சொன்னான்.. ‘‘ஜெயிச்சாலும் தோற்றாலும் கவலையில்லை. இது எங்களுக்கு பிடிச்ச விளையாட்டு. இந்த முறை தோற்றால்.. அடுத்த முறை ஜெயிச்சிடுவோம். நீங்க வேணும்னா பாருங்க.. இருந்து நாங்க ஜெயிக்கிறதை பார்த்துட்டு போங்க..’’ என்றான்.

‘‘டேய்.. வாங்கடா. அடுத்த சுற்று ஆட்டம் ஆரம்பிக்கலாம். நாம இந்தவாட்டி விளையாடி ஜெயிச்சுக்காட்டணும் இந்த அய்யாவுக்கு..’’ என்று கூறியபடியே, உட்கார்ந்திருந்த மற்ற சிறுவர்களையும் அழைத்துக்கொண்டு கூட்டத்துக்குள் சென்றான்.

‘‘பார்த்தாயா.. எவ்வளவு பெரிய தத்துவத்தை மிகவும் எளிதாகக் கூறிவிட்டுச் செல்கிறார்கள் இந்தப் பாலகர்கள்!’’ என்றார் குரு, தன் அருகே அமர்ந்திருந்த சிஷ்யனிடம்.

புருவம் உயர்த்தினான் சிஷ்யன். ‘இதிலென்ன பெரிய தத்துவம்?!’ என்றது அவன் புருவம் உயர்த்திய தொணி.

‘‘தனக்குப் பிடித்த விளையாட்டை விளையாடும் குழந்தைகள், ஆட்டத்தில் சந்திக்கும் தோல்விகளை கணக்கிடுவதில்லை. தொடர்ந்து விளையாடி அந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவதையே விரும்புகின்றன. அதையே செய்கின்றன சின்னக் குழந்தைகள். ஆனால், வாழ்க்கையில் தான் சந்திக்கும் ஒவ்வொரு தோல்விக்கும் மனம் உடைந்துபோகும் பெரிய மனிதர்கள், அந்த தோல்விகளில் இருந்து மீளமுடியாமல் ஒதுங்கிவிடுகிறார்கள். தோல்விகளை எதிர்கொள்ளும் மனதிடம் இன்றி தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் தவறான முடிவினையும் எடுக்கிறார்கள் சிலர்..’’ என்றார் குரு.

‘‘ஆமாம் குருவே. அவர்களுக்குப் பிடித்த பாடத்தைப் படிக்கும் வாய்ப்பினை குழந்தைகளுக்குக் கொடுத்தாலும், பிடித்த துறையில் பணிபுரியும் வாய்ப்பினை அவர்கள் தேர்ந்தெடுத்தாலும் இதேநிலைதான் அமையும். பிடித்த செயலில் சந்திக்கும் தோல்விகளை அவர்கள் தங்கள் வெற்றிகளுக்கான படிக்கட்டுகளாகவே எடுத்துக்கொள்வார்கள்’’ என்றான் சிஷ்யன்.

தான் சொல்லவந்ததைப் புரிந்துகொண்டான் தன் சிஷ்யன் என்பதை எண்ணி குருவும் மகிழ்ந்தார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT