குரு - சிஷ்யன்

47. ததும்பும் கோப்பை

5th Aug 2019 11:00 AM | ஜி. கௌதம்

ADVERTISEMENT

 

இரண்டு நண்பர்களுக்கு இடையே ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஒருவர் கருத்தை மற்றவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இருவரும் தத்தம் வாதங்களில் பிடிவாதமாக இருந்தனர்.

யாருடைய கருத்து சரி என்ற முடிவை அவர்களால் தீர்மானிக்க முடியவில்லை. தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தால் தங்களுக்குள் இருக்கும் நட்புக்கு சேதாரம் ஏற்படலாம் என்பதை உணர்ந்தனர். நெடுநேரம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தனர்.

குருவின் முன்னால் வந்து நின்றனர். தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை குருவிடம் கூறினார்கள்.

ADVERTISEMENT

‘‘இந்த விஷயத்தில் எங்கள் இருவரில் யாருடைய கருத்து சரியானது என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். எங்களுக்கு நாங்களே முடிவில்லாத விவாதம் செய்துகொண்டே இருந்தால் அது எங்கள் நட்பை பாதிக்கும் என்று கவலைப்படுகிறோம். எங்கள் இருவரது கருத்துகளையும் கேட்டுவிட்டு, நீங்கள்தான் இந்த விஷயத்தில் முடிவு காண உதவி செய்ய வேண்டும்..’’ என்று கேட்டுக்கொண்டார்கள் இருவரும்.

நட்பினை மதிக்கும் அவர்கள் இருவரையும் பாராட்டினார் குரு. சிஷ்யனை அழைத்து, இரண்டு கோப்பைகளில் தண்ணீர் கொண்டுவரும்படி கூறினார். ‘‘கோப்பைகளின் விளிம்பு வரை நீர் இருக்கட்டும்..’’ என்றார்.

அதன்படியே விளிம்பு வரை நீர் நிரப்பிய இரு கோப்பைகளுடன் வந்தான் சிஷ்யன். நீர் சிதறிவிடாமல் கவனமாக எடுத்துக்கொண்டு வந்தான்.

‘‘கோப்பைகளை வாங்கிக்கொள்ளுங்கள்..’’ என்று நண்பர்கள் இருவரிடமும் கூறினார் குரு. ஆளுக்கொரு கோப்பையை சிஷ்யனிடம் இருந்து வாங்கிக்கொண்டார்கள்.

‘‘நல்லது. கோப்பைகளை உங்கள் கைகளில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். நீர் கீழே சிந்திவிடக் கூடாது’’ என்றார் குரு.

அவர்களுக்கு குரு கொடுக்கப்போகும் பாடத்தில் இருந்து தானும் தெளிவுபெறும் நோக்கத்தில் ஆவலோடு கவனிக்கத் தொடங்கினான் சிஷ்யன்.

‘‘இப்போது உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்..’’ என்றார் குரு.

முதலாமவன் தன் தரப்பு வாதத்தை முன்வைத்தான். அவன் முடித்ததும் இரண்டாமவன் தன் தரப்பு வாதத்தைப் பேசத் தொடங்கினான்.

அவர்கள் இருவரது கருத்துகளையும் உற்றுக் கேட்டுக்கொண்டிருந்தான் சிஷ்யன். அவர்கள் கைகளில் இருந்த கோப்பைகளையே உற்றுப் பார்த்தபடி இருந்தார் குரு.

இரண்டாவது நபர் பேசிக் கொண்டிருக்கும்போதே மாற்றுக் கருத்து சொல்வதற்காக இடைமறித்தான் முதலாவது நபர். அதனைத் தொடர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் பதிலுக்குப் பதிலாக வாதிட ஆரம்பித்தனர்.

இருவரையும் மாறி மாறிப் பார்த்தவாறே இருந்தான் சிஷ்யன். குருவுக்கு கோப்பைகளின் மீதே கண்!

ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு வாதப் பிரதிவாதங்கள் எடுத்துவைக்க.. சில நிமிடங்களில் முதலாவது நபரின் கையில் இருந்த கோப்பை நீர் ததும்பி கீழே சிதறியது. ‘‘போதும் நிறுத்துங்கள்’’ என்றார் குரு.

அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்திய ரயில் வண்டிபோல அவர்களது வாக்குவாதம் நிறுத்தப்பட்டது. இருவரும் குருவை படபடப்புடன் பார்த்தார்கள். தன் படபடப்பைத் தணிப்பதற்காக நகம் கடிக்கத் தொடங்கிவிட்டான் சிஷ்யனும்.

முதலாமவனை நோக்கியபடியே, ‘‘உன் நண்பனின் கூற்றே ஏற்புடையதாகும்’’ என்றார் குரு. தொடர்ந்து பேசலானார்.. ‘‘ஆரோக்கியமான விவாதங்களில் வறட்டுப் பிடிவாதம் இருக்கக் கூடாது. உண்மையும் நேர்மையும் மட்டுமே இருக்க வேண்டும். அவை இல்லாதபட்சத்தில் ஒரு கட்டத்தில் நாம் அறியாமலேயே கோப உணர்ச்சி ஏற்படும். அதனைத் தொடர்ந்து பதட்டம் பற்றிக்கொள்ளும். உன் கைவிரல்கள் நடுங்கியதும், அதனால் கோப்பையில் இருந்த நீர் சிதறியதும் உனக்கு ஏற்பட்ட கோபத்தின் வெளிப்பாடுதான். கோபத்தினால் தீர்வு கிடைக்காது. அது மட்டுமல்ல, விவாதம் திசைமாறிச் சென்றுவிடும். வாதிடும் இருவரையும் எதிரிகளாக்கிவிடும்’’ என்றார் குரு.

நண்பர்கள் இருவரும் குருவின் வார்த்தைகளுக்கு வணங்கினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT