குரு - சிஷ்யன்

46. குறையொன்றுமில்லை!

2nd Aug 2019 11:00 AM | ஜி. கௌதம்

ADVERTISEMENT

 

ஊருக்குள் செல்வாக்குடன் வாழும் மனிதர் அவர். கடவுள் நம்பிக்கை அதிகம் கொண்டவர். அவ்வப்போது ஆசிரமத்துக்கு வந்து, குருவருள் பெற்றுச் செல்வார். அன்றும் வந்திருந்தார்.

அவரது முகத்தில் வழக்கமான உற்சாகம் இல்லை.

அவர் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள அவகாசம் கொடுத்துக் காத்திருந்தார் குரு. சில நிமிடங்கள் கழித்து அவரிடம், ‘‘என்ன பிரச்னை?’’ என்று கேட்டார்.

ADVERTISEMENT

‘‘தொழில் முன்புபோல வெற்றிகரமாக இல்லை..’’ என்றார் வந்திருந்த மனிதர்.

ஒப்பந்த அடிப்படையில் அரசு வேலைகளை எடுத்துச் செய்துகொடுப்பதுதான் அவரது தொழில். அவர் கலந்துகொள்ளும் ஏலங்கள் அனைத்திலும் அவருக்கே வெற்றி கிடைக்கும். அவரும் மனசாட்சிக்கு விரோதமில்லாமல் கொடுத்த ஒப்பந்தப் பணிகளை முடித்துக் கொடுப்பார்.

‘‘வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லை. அடிக்கடி வந்துகொண்டுதான் இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால்.. முன்பைவிட அதிக வாய்ப்புகள் இப்போது கிடைக்கின்றன. ஆனால், ஒப்பந்தங்கள் முன்புபோல எனக்குக் கிடைப்பதில்லை. பெரும்பாலும் தோல்வியுடன்தான் வீடு திரும்புகிறேன்’’ என்று கூறிய அவர் முகத்தை ஒரு தாயின் கருணையுடன் கவனித்துக்கொண்டிருந்தார் குரு.

‘‘எத்தனை கோயில்கள் ஏறி இறங்கி இருக்கிறேன்.. எத்தனை கடவுள்களை வேண்டியிருக்கிறேன்.. எந்தக் கடவுளும் எனக்கு கருணை காட்டுவதில்லை இப்போதெல்லாம். இனி கடவுளை கும்பிடப்போவதில்லை என முடிவெடுத்துவிட்டேன். உங்களிடம் ஏதேனும் ஆறுதல் வார்த்தைகள் பெற்றுச் செல்லலாம் என்பதற்காக வந்துள்ளேன்..’’ என்று கூறி, கலங்கினார் அவர்.

சற்று தூரத்தில் நின்றுகொண்டிருந்த சிஷ்யனை அழைத்தார் குரு. ஓடிவந்தான் அவன்.

ஒரு பாத்திரத்தில் பருகும் நீர் எடுத்துவரச் சொன்னார். எடுத்துக்கொண்டு வந்தான் அவன்.

இருக்கையை விட்டு எழுந்தார் குரு. கலங்கியிருந்த அந்த மனிதரையும் எழச் சொன்னார். அவரையும் அழைத்துக்கொண்டு ஆசிரமத்தின் பின்புறம் இருந்த சிறிய தோட்டத்துக்குச் சென்றார். நீர் நிரம்பிய பாத்திரத்துடன் சிஷ்யனும் பின்தொடர்ந்தான்.

பாத்திரத்தை சிஷ்யனிடம் இருந்து பெற்றுக்கொள்ளும்படி அந்த மனிதரிடம் கூறினார்.

‘‘அதனை அதோ அந்த உயரமான இடத்தில் வையுங்கள். பறவைகள் வந்து நீர் பருகிச் செல்லட்டும்’’ என்றார். அப்படியே செய்தான் அந்த மனிதர்.

பாத்திரத்தை வைத்துவிட்டு வந்தவரிடம், ‘‘கொஞ்சம் பொறுங்கள். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்’’ என்றார் குரு.

குரு, சிஷ்யன், அந்த மனிதர்.. மூவரும் நின்றிருந்த இடத்தில் இருந்தபடியே குடிநீர் வைக்கப்பட்ட பாத்திரத்தைக் கவனிக்க ஆரம்பித்தனர்.

சில நிமிடங்களுக்குப் பின்னர்.. காகம் ஒன்று முதலில் வந்தது. பாத்திரத்துக்கு சற்று தள்ளி நின்று அதனை உற்றுக் கவனித்தது. பின்னர், தூரத்தில் நின்றிருந்த மூவரையும் தலை சாய்த்துப் பார்த்தது. பாத்திரத்தின் அருகே சென்றது. பிறகு என்ன நினைத்ததோ தெரியவில்லை. சட்டெனப் பறந்து சென்றுவிட்டது.

ஒரு சில விநாடிகளில் வேறொரு காகம் வந்தது. பறந்து வந்து பாத்திரத்தின் விளிம்பில் உட்கார்ந்தது. அங்கிருந்தபடியே தலை தூக்கி, தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த மூவரையும் கவனித்தது. அதன் பின்னர் தலையைக் குனிந்து தண்ணீர் பருகியது. இடையிடையே தலை உயர்த்தி சுற்றும் முற்றும் ஜாக்கிரதையாக கவனித்துக்கொண்டே இருந்தது. பின்னர் பறந்து சென்றுவிட்டது.

‘‘போதும்.. வாருங்கள் ஆசிரமத்துக்குள் செல்வோம்’’ என்றார் குரு. பாத்திரத்தை எடுப்பதற்காக அதை நோக்கிச் சென்றான் சிஷ்யன்.

‘‘வேண்டாம். அது அங்கேயே இருக்கட்டும். அதில் இருப்பது நீர்தான், பயப்பட வேண்டாம் என்று இந்தக் காகம் மற்ற காகங்களுக்குச் சேதி சொல்லும். அவை நீர் பருக வரக்கூடும்..’’ என்று கூறினார் குரு. திரும்பி வந்துவிட்டான் சிஷ்யன்.

அனைவரும் ஆசிரமத்துக்குள் சென்றனர்.

இதில் ஏதோ ஒரு பாடம் இருக்கிறதென்று சிஷ்யனுக்குப் புரிந்தது. அதனால் முதல் ஆளாகச் சென்று தரையில் அமர்ந்துகொண்டான். அவனுக்கு அருகிலேயே வந்தமர்ந்தார் அந்த மனிதர். குரு, தன் இருக்கையில் அமர்ந்தார்.

‘‘நீங்கள் இப்படிச் செய்யலாமா? இது எவ்வளவு பெரிய தவறு?’’ என்று தன் அதிரடி குரலில் கேட்டார் குரு.

ஆடிப்போய்விட்டார் அந்த மனிதர்!

‘‘என்ன கேட்டீர்கள் குருநாதா? நான் என்ன தவறு செய்தேன்?’’ என்று பதட்டத்துடன் பதில் கேள்விகள் கேட்டார்.

‘‘முதலில் வந்தமர்ந்த காகத்துக்கும் உங்களுக்கும் என்ன தகராறு? நீரைப் பருக்காமல் அது சென்றதற்கு நீங்கள்தானே காரணம்?’’ என்றார் குரு. அவரது குரலில் குறும்பு ஒளிந்திருந்தது.

‘‘இதென்ன அபாண்டமான குற்றச்சாட்டு குருநாதா! பறவைகள் வந்து பருகட்டும் என மனதார நினைத்துக்கொண்டுதான் பாத்திரத்தை வைத்தேன். அந்தக் காகம் தண்ணீர் குடிக்காமல் சென்றதற்கு நான் எப்படி காரணமாக இருக்கமுடியும்! இது நியாயமா குருநாதா?’’ என்றார் அந்த அப்பாவி மனிதர்.

‘‘வாய்ப்புகளை உங்களுக்கு வாரிக் கொடுக்கும் இறைவனே உங்களுக்கு ஒப்பந்தங்கள் கிடைக்காமல் போவதற்கான காரணம் என நீங்கள் முடிவெடுத்திருக்கிறீர்களே.. அது மட்டும் நியாயமா?’’ என்றார் குரு.

தலை கவிழ்ந்தார் அந்த மனிதர்.

‘‘குதிரையை குளத்துக்கு அழைத்துச் செல்லலாம். ஆனால், குளத்து நீரை அதுதான் பருகிக்கொள்ள வேண்டும். இறைவனும் அதைத்தான் செய்கிறான். வாய்ப்புகளைக் காட்டுகிறான். அதனைப் பயன்படுத்தி வெற்றிபெறுவது அவரவர் முயற்சிகளில்தான் இருக்கிறது. உங்கள் தோல்விகளுக்கு இறைவன் காரணமல்ல. நிறைய லாபம் வேண்டும் என நினைத்து ஒப்பந்தத் தொகையைக் கூடுதலாகக் கோரும் உங்கள் பேராசையா, அல்லது என்னை விட்டால் இந்தப் பணியைச் செய்ய ஆளில்லை எனக் கருதும் உங்கள் அலட்சியமா, அல்லது வேறேனும் குறைகளா.. உண்மை எதுவென நீங்களே யோசியுங்கள். அதைச் சரி செய்துகொள்ளுங்கள். ஆண்டவனைக் குறை கூறாதீர்கள்..’’ என்றார் குரு.

ADVERTISEMENT
ADVERTISEMENT