5. மழையானவன்!

தாயானவள் தன் குழந்தைகள் அனைவரிடமும் ஒரே அளவிலான அன்பைத்தானே காட்ட வேண்டும். ஆனால், இறைவன் அப்படியில்லையே?
5. மழையானவன்!

நெடுந்தொலைவு பயணம் செய்து ஆலய தரிசனம் ஒன்றை முடித்துவிட்டு, ஆசிரமம் திரும்பியிருந்தனர் குருவும் சிஷ்யனும்.

நகரங்களைக் கடக்கையில் சகலவிதமான மனிதர்களையும் சந்தித்துக் கடந்திருந்தான் சிஷ்யன். இருப்பதைக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்கள், இல்லாததைக் கூறி வருத்தப்படுவர்கள், அதிகமாக இருப்பதை மற்றவர்களுக்குக் கொடுத்து மகிழ்பவர்கள்.. என பல கூறுகளாக இருந்தார்கள் அவன் பார்த்த மனிதர்கள்.

இறைவன் ஏன் மனிதர்களை இத்தனை கூறுகளாகப் பிரித்து வைத்திருக்கிறான்?!

இந்தக் கேள்வியை குருவிடம் கேட்கும் தருணத்துக்காகக் காத்திருந்தான் சிஷ்யன். அதற்கான நேரம் வந்தது.

"உன் மனதில் ஏதோ குழப்பம் இருப்பதுபோலத் தெரிகிறதே! என்ன விஷயம்?" என்றார் குரு.

"இறைவன் எல்லோருக்கும் பொதுவானவன்தானே?" என்று கேட்டான் சிஷ்யன்.

"ஆமாம். அதிலென்ன சந்தேகம்? நாம் எல்லோருமே அவனின் குழந்தைகள். நம் அனைவருக்கும் பொதுவான தாய்தான் இறைவன்" என்றார் குரு.

"தாயானவள் தன் குழந்தைகள் அனைவரிடமும் ஒரே அளவிலான அன்பைத்தானே காட்ட வேண்டும். ஆனால், இறைவன் அப்படியில்லையே? ஒரு சிலருக்கு போதும் என்கிற அளவுக்கு அதிகமாகவே கருணை காட்டுகிறான். ஒரு சிலருக்கு தன் கருணைப் பார்வையை துளிக்கூட காட்டுவதில்லையே. அது ஏன்? சிலரை இன்பமாகவும், சிலரை துன்பத்திலும் வைத்து ஓரவஞ்சனை செய்பவன் எப்படி அனைவருக்கும் பொதுவான தாயாக இருக்க முடியும்?" என்றான் சிஷ்யன்.

அவனது கேள்வியில் இருந்த நியாயத்தை ரசித்தார் குரு. பொறுமையாக அவனுக்கு விளக்க முற்பட்டார். அவனது கேள்விக்கான விடையை அவனது வாயிலிருந்தே பெறவும் விரும்பினார்.

"மழை யாருக்காகப் பெய்கிறது?" என்று கேட்டார்.

"சந்தேகமே இல்லை.. எல்லோருக்கும்தான்" என்றான் சிஷ்யன்.

"கொட்டும் மழையைப் பிடிக்க உள்ளங்கையை நீட்டுபவர்களுக்கும், பெரிய பாத்திரத்தை எடுத்துவைத்துக்கொண்டு காத்திருப்பவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறதுதானே?"

"ஆமாம். அவரவர் எடுத்துவைக்கும் பாத்திரத்தின் அளவுக்கேற்பத்தான் மழை நீரைப் பிடித்துக்கொள்ள முடியும்" என்றான் சிஷ்யன்.

"உன் கேள்விக்கான பதிலும் அதுதான். இறைவனின் கருணையும் மழை நீர் போலத்தான்" என்று கூறிப் புன்னகைத்தார் குரு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com