4. ஏழாவது சுவை!

நமக்காகச் செய்துகொள்ளும் பணிகளைவிட பிறருக்காகச் செய்யும் பணிகளே போற்றுதலுக்குரியவை.
4. ஏழாவது சுவை!

"நாளை காலை உனக்குப் பாடம் இல்லை. வேறு ஒரு உயர்வான பணி காத்திருக்கிறது. உணவு தயார் செய்ய உனக்கு கூடுதல் நேரம் தேவைப்படும்" என்றார் குருநாதர். புருவம் உயர்த்தினான் சிஷ்யன்.

"நகரத்தில் இருந்து விருந்தினர்கள் இருவர் நம்மைச் சந்திக்க வருகிறார்கள். அவர்கள் பசியோடு வரக்கூடும். அவர்களுக்கும் சேர்த்து காலை உணவு சமைக்க வேண்டும்" என்றார் குரு.

பாடம் படிப்பதைவிட சமையல் செய்வது உயர்வான செயலா என்ன! எரிச்சலடைந்தான் சிஷ்யன். ஆனால், எதுவும் பேசாமல் இடம் பெயர்ந்தான். மறுநாள் காலை உணவுக்கு என்ன சமைக்கலாம் என யோசிக்க ஆரம்பித்தான்.

அருகே இருந்த கிராமத்துக்குச் சென்று தேவையான பொருட்கள் வாங்கிக்கொண்டான் சிஷ்யன். ஆசிரமத்தின் பின்புறம் இருந்த தோட்டத்தில் வேண்டிய அளவு காய்கறிகள் பறித்துக்கொண்டான்.

விடிந்தது. வழக்கமான கடமைகள் முடிந்ததும் சமையல் வேலைகளில் மும்முரமானான். திட்டமிட்டிருந்தபடி உணவு வகைகளைத் தயார் செய்தான். அவனுக்கும் குருவுக்கும் வழக்கமான உணவு. விருந்தினர்களுக்காக சிறப்பான சாப்பாடு.

விருந்தினர்கள் வந்தனர். நகரத்தில் வசிக்கும் தம்பதியர் அவர்கள். அவ்வப்போது வந்து குருவிடம் ஆசி பெற்றுக்கொண்டு திரும்புவார்கள்.

குருவின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தனர் இருவரும். அவர்கள் முகத்தில் புன்னகை தொலைந்திருந்ததை அறிந்தார் குரு. காரணத்தை அவர்களே சொல்வார்கள் எனக் காத்திருந்தார். அப்படியே நடந்தது.

"எதற்கெடுத்தாலும் கருத்து சொல்லிக்கொண்டே இருக்கிறாள் இவள். அதனால் எனக்கும் இவளுக்கும் தினமும் சண்டை சச்சரவு இருந்து கொண்டே இருக்கிறது. வாழ்க்கை நிம்மதியாக இல்லை ஸ்வாமி" என்றான் கணவன்.

"ஸ்வாமி.. நான் நல்லதுக்குத்தானே என் கருத்துகளைச் சொல்றேன். அதை இவர் ஏற்றுக்கொள்வதே கிடையாது" என்றாள் மனைவி.

"நாலு இடங்களுக்குப் போய்வரும் நானும், சமையல்கட்டிலேயே அடைந்து கிடக்கும் இவளும் சரிசமமாகுமா? கொஞ்சமும் உலக அனுபவமில்லாத இவளால் எப்படி சரியான ஆலோசனைகள் கொடுக்க முடியும் ஸ்வாமி?" என்றான் கணவன்.

"இப்படித்தான் என்னை எப்போதும் மட்டம் தட்டிக் ண்டே இருக்கிறார் இவர்" எனக்கூறி கண்களைக் கசக்கினாள் மனைவி.

பிரச்னை புரிந்துவிட்டது குருவுக்கு. ஓரமாக நின்றிருந்த சிஷ்யனுக்கு, இந்தப் பிரச்னையை எப்படித் தீர்க்கப்போகிறார் தனது குருநாதர் என்பதைத் தெரிந்துகொள்ள ஆர்வம் அதிகமானது.

எதிரே இருந்த கணவனை ஏறிட்டார் குருநாதர். "நீ என்னைச் சந்திக்க வருவதாக எப்போது முடிவெடுத்தாய்?"

"இன்று காலையில் தோன்றியது. உடனேயே உங்களுக்குத் தகவல் அனுப்பினேன்" என்றான் அவன்.

"அலுவலகத்தில் அன்றன்றைய பணிகளை எப்போது திட்டமிடுவாய்?"

"தினமும் காலையில் அலுவலகம் சென்றதும் முதல் வேலையாக அன்றைய பணிகளைத் திட்டமிட்டுக்கொள்வேன். அதன்படியே நடப்பேன்" என்றான் அவன்.

பார்வையை அவனது மனைவியின் பக்கம் திருப்பினார் குரு. கேள்வியையும்.

"எந்த நாளில் என்ன உணவு சமைப்பது என எப்படி நீ திட்டமிடுகிறாய்?" என்றார்.

"நகரத்தில் நடக்கும் வாரச் சந்தைக்குச் செல்வேன். அடுத்த வாரம் முழுவதும் என்ன சமையல் செய்ய வேண்டும் என்பதை அப்போதே திட்டமிட்டுவிடுவேன். ஒரு வாரத்துக்குத் தேவையான பொருட்களை மொத்தமாக வாங்கி வந்து விடுவேன். அடுத்த நாள் என்ன சமைப்பது என முதல் நாள் இரவிலேயே முடிவு செய்து, அதற்கான காய்கறிகளை எடுத்துச் சுத்தம் செய்து தயாராக வைத்துக்கொள்வேன். மற்ற பொருட்களையும் தேவையான அளவில் எடுத்து கண்ணில் படும்படி வைத்துக்கொள்வேன். மாவு அரைக்க வேண்டுமென்றால், முந்தைய நாள் மாலையிலேயே அரைத்து வைத்துக்கொள்வேன்" என்றாள் அவள். இதையெல்லாம் ஏன் இவர் கேட்கிறார் என அவளுக்கு வியப்பாக இருந்தது.

குவளையில் இருந்த நீரை எடுத்துப் பருகினார் குருநாதர். அவர் என்ன சொல்லப்போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் ஆவலோடு அமைதியாக இருந்தனர் மூவரும்.

கணவனை கனிவுடன் நோக்கினார் குரு. "நமக்காகச் செய்துகொள்ளும் பணிகளைவிட பிறருக்காகச் செய்யும் பணிகளே போற்றுதலுக்குரியவை. அர்ப்பணிப்போடு செய்யும் தவம் போன்றது அடுத்தவர்களுக்காக உணவு தயாரிக்கும் செயல். உன் மனைவி உனக்காகச் சமையல் செய்வது, உன் அலுவலகப் பணிகளைவிட உயர்வானதுதான்".

நிமிர்ந்து உட்கார்ந்தாள் மனைவி.

குரு தொடர்ந்தார். "அன்றன்றைய பணிகளை அன்றன்று காலையில் திட்டமிடும் உன்னைவிட, அடுத்த வார சமையலை இந்த வாரமே திட்டமிட்டுத் தயாராகும் உன் மனைவி எந்த விதத்தில் குறைவானவள்? தொலைநோக்குப் பார்வையுடன் தயாராவது, சரியானதை முதல் நாளிலேயே திட்டமிடுவது, கவனம் சிதறாமல் சமையல் செய்வது, பாசத்தையும் ஏழாவது சுவையாக உணவில் சேர்ப்பது.. இப்படி உன் அலுவலகப் பணிகளுக்குத் தேவையான ஆற்றலைவிடவும் அதிக ஆற்றல் தேவைப்படுவது இவளது சமையலறைப் பணிகளுக்குத்தான். உன் பணிக்கு வார விடுமுறை உண்டு. ஆனால், இவளுக்கு விடுமுறை இல்லை. உன் பணிக்கு ஓய்வடையும் காலம் வரும். ஆனால், இவளது சமையல்கட்டு சேவைக்கு ஓய்வுக்காலம் கிடையாது. தவிர, உன் முடிவுகள் எல்லாமே பொருள் சார்ந்ததாகவே இருக்கும். ஆனால், உன் மனைவியின் முடிவுகள் உன் உடல் நலன் சார்ந்ததாகவும் இருக்கும். அதனால், உன் மனைவியின் ஆலோசனைகளை நீ ஏற்பதனால் உனக்கு நன்மைகள் விளையும் வாய்ப்புகளே அதிகம்" என்றார் குரு.

மனைவிக்கு மகிழ்ச்சி. கணவனுக்குத் தெளிவு. சிஷ்யனின் சிந்தனையில் மலர்ச்சி!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com