திங்கள்கிழமை 22 ஜூலை 2019

2. அன்பு மொழி!

By ஜி. கௌதம்| Published: 22nd April 2019 10:00 AM

 

எங்கிருந்தோ வந்திருந்த கர்ப்பிணி நாய் ஒன்று ஆசிரமத்துக்கு அருகே அடைக்கலம் புகுந்திருந்தது. அங்கேயே மூன்று குட்டிகளை ஈன்றது.

அந்த இடத்தை சிஷ்யன் கடக்கும்போதெல்லாம் பலமாகக் குரைத்தது. அதனால் அந்த நாயைக் கண்டாலே அவனுக்கு பயம்!

அவன் நடந்து வருவதையும், அவனைப் பார்த்து அந்த நாய் குரைப்பதையும் ஆசிரமத்துத் திண்ணையில் அமர்ந்திருந்த குரு கவனித்தார்.

அவனை அருகே அழைத்தார். ஆசிரமத்துக்கு உள்ளே சென்று ஒரு குவளை பால் எடுத்துவரச் சொன்னார். எடுத்து வந்ததும், அதை அந்த நாயின் குட்டிகளுக்கு அருகே சென்று வைத்துவிட்டு வரச் சொன்னார்.

‘‘நானா?!’’ எனப் பதறினான் சிஷ்யன். ‘‘அவற்றின் அம்மா என்னைப் பார்த்தாலே குரைத்து விரட்டியடிக்கிறது குருவே. நான் எப்படி இதைச் செய்ய முடியும்? அது என்னைக் கடித்துவிடும் என்று பயமாக இருக்கிறது’’ என்றான்.

புன்னகைத்தார் குரு. ‘‘அந்தப் பயம்தான் அது உன்னைப் பார்த்ததும் குரைப்பதற்குக் காரணம்’’ என்றார். புரியாமல் அவரை ஏறிட்டான் சிஷ்யன்.

‘‘பயமில்லாமல் போ. முதலில் அந்தத் தாயிடம் செல். நான் உன் குட்டிகளைத் துன்புறுத்த வரவில்லை. அவற்றுக்கு இந்த உணவைக் கொடுக்க விரும்புகிறேன் என்று சொல். அதன் பின்னர் குவளையை அந்தக் குட்டிகளுக்கு அருகே வைத்துவிட்டு வா’’ என்றார்.

மனத்துக்ளு பயம் ஒளிந்திருந்தாலும், அதை வெளிக்காட்டாமல் குருவின் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு, தாய் நாயின் அருகே சென்றான் சிஷ்யன். குரைப்பதற்கு வாயெடுத்த அது, அவன் தைரியமாக தன்னருகே வரவும் நின்று நிதானித்தது.

‘‘நான் உன்னையோ உன் குட்டிகளையோ துன்புறுத்த வரவில்லை. உன் குட்டிகளுக்கு இந்த ஆகாரத்தைக் கொடுக்கவே ஆசைப்படுகிறேன்’’ என்று சொன்னான். நாய், அவனையும் அந்தக் குவளையையும் மாறி மாறிப் பார்த்தது.

மூலையில் கிடந்த குட்டிகளை நோக்கி நடந்தான் சிஷ்யன். அவனையே பார்த்தபடி அமைதியாகவே நின்றது தாய்.

குவளையை குட்டிகளின் அருகே வைத்தான். வாலாட்டியபடியே குவளைக்குள் தலை நுழைந்தன குட்டிகள். மகிழ்ச்சியோடு குருவிடம் சென்றான் சிஷ்யன்.

‘‘இதெப்படி சாத்தியம் குருவே? நான் பேசியது அந்த நாய்க்குப் புரிந்ததா? அதற்கு என் மொழி தெரியுமா? இது அதிசயமான நாயா?’’ என்றான்.

‘‘இறைவனின் படைப்பில் எல்லாமே அதிசயம்தான்’’ என்றார் குரு. ‘‘அந்த நாய்க்கு உன் மொழி தெரியாது. ஆனால் உன் முகத்தில் இருக்கும் பயமும், நடையில் இருக்கும் பதற்றமும் நன்கு புரியும். அந்தப் பயமும் பதற்றமும் அதற்கு எதிராக நீ ஏதேனும் செய்துவிடக்கூடும் என்ற அச்சத்தை அதற்குக் கொடுக்கும். அதனால்தான் அது உன்னை விரட்டியடிக்க முயற்சித்ததன் காரணம். ஆனால், நீ பயமில்லாமல் நிஜமான நேசத்துடன் அதன் அருகே சென்றால், அது உன்னுடன் நேசம் கொள்ளவே விரும்பும். நீ சொல்வது உன் உணர்வுகளால் அதற்கு நன்றாகவே புரியும்’’.

குரு சொல்லச் சொல்ல, நாய் மீது சிஷ்யனுக்கு இருந்த கொஞ்சநஞ்ச பயமும் முழுவதுமாக விலகியது.

‘‘இந்த நாய் மட்டும் என்றில்லை. உலகின் அத்தனை ஜீவராசிகளும் இப்படித்தான். மனிதனோடு நேசமாக இருக்கவே விரும்புகின்றன. அவற்றுக்கு மனிதன் ஆபத்து கொடுக்காமல் இருந்தால் அவையும் மனிதனுக்கு ஆபத்து கொடுப்பதில்லை’’ என்றார் குரு.

தூரத்தில் இருந்த தாய் நாய், சிஷ்யனைப் பார்த்தபடியே வாலாட்டிக்கொண்டிருந்தது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : குரு சிஷ்யன் அன்பு நாய்க்குட்டிகள் ஆசிரமம்

More from the section

39. அகமும் புறமும்
38. சிறகொடிந்த கிளிகள்
37. தாயன்பு
36. தரமும் தராதரமும்..
35. யார் நல்லவன்?