34 . காதல் திருமணங்கள்

“பசு பதி பாசம் “என்ற மூன்று விஷயங்களைக் கற்றுக்கொண்ட பிறகுதான் எனக்கு அவள் மீது இருந்த காதலும் ஒரு “பொய்” என்று உணர்ந்தேன். 
34 . காதல் திருமணங்கள்


“பசு பதி பாசம் “என்ற மூன்று விஷயங்களைக் கற்றுக் கொண்ட பிறகுதான் எனக்கு அவள் மீது இருந்த காதலும் ஒரு “பொய்” என்று உணர்ந்தேன். 

“பசு”வாகிய உயிருக்குள் “பாசமா”க ஒட்டிக் கொண்டிருந்த அவளது நினைவும் ஒருவகையில் பொய் என்ற ஞானம் பெற்றேன் என்பது வரை சென்ற வாரத்தில் பார்த்தோம். 

அப்படி என்றால் காதல் திருமணங்களே கூடாதா? என்று கேட்பீர்கள். 

நான் காதல் மணம் புரிந்திருந்தால் எப்படி இருந்திருப்பேன் என்று என்னால் கூற முடியாது. 

“ஒருமுறைதான் பிறக்கிறோம்; ஒரு முறை வாழ்கிறோம், மனதுக்குப் பிடித்தவனோடோ / பிடித்தவளோடோ வாழ்ந்து விட்டுப் போகலாமே என்றுதான் தோன்றும்.

“ஜாதி என்ன ஜாதி அது எங்குள்ளது? என்று பெற்றோரிடம் கேட்கலாம்.

காதல் மணம் புரியக் கூடாது என்றில்லை. புரியலாம். இந்த இடத்தில் கலைஞர் அவர்கள் எழுதிய “பராசக்தி” படத்தின் வழக்குமன்ற வசனம்தான் நினைவுக்கு வருகிறது.

“...கோயில் கூடாது என்பதற்காக அல்ல; கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக!” 

மிகவும் பொருள் நிறைந்த வசனம் அது.

அது போலப் பிள்ளைகளின் காதல் திருமணங்களைப் பெற்றோர் தடுப்பது, 

“...காதல் கூடாது என்பதற்காக அல்ல;
காதல் காமுகர்களின் கூடாரம் ஆகிவிடக் கூடாது என்பதற்காக!” 

பெற்றோர் காதலுக்குத் தடை போடுவதன்  காரணமும் அதுதான்!

அதிகமான காதல் திருமணங்கள் விவகாரத்துக் கேட்டு வழக்காடு மன்றங்களுக்கு இன்று வந்துகொண்டிருக்கின்றன.

காரணம் காதலை முன்னிட்டுப் பலவிஷயங்களை மூடி மறைத்துவிடுகிறார்கள் காதலர்கள். 

நடைபாதைக் கடைகள்

சென்னைக்கு வந்த புதிதில் நண்பர் ஒருவருடன் பிளாட்பாரத்தில் நடந்து கொண்டிருந்தேன்.

பிளாட்பாரக் கடையில் “ரெடிமேடு” சட்டைகள் விற்றுக் கொண்டிருந்தார்கள். விலை வெறும் நூறு ரூபாய்தான்!

தையற்கூலியே ஐம்பது ரூபாய் கேட்கிறான். சட்டைத் துணி எடுத்தால் நூற்றைம்பது ரூபாய் வரும். தையற்கூலி வேறுத் தனியாக ஐம்பது ரூபாய் தர வேண்டும். மொத்தம் இருநூறு ரூபாய் ஆகிவிடும். தையற்கடைக்கு அளவு கொடுப்பதற்காக ஒரு தடவையும் , திரும்ப வாங்குவதற்காக ஒரு தடவையும் என்று அலைய வேண்டும். அதைவிட இது எவ்வளவோ மேல் என்று “ரெடிமேட்” சட்டையை வாங்கி விட்டார் நண்பர்.

அந்தச் சட்டையை அணிந்துகொண்டு மறுநாளே வேலைக்கும் போய் வந்தார். 

அடுத்த நாள் சட்டையைத் துவைத்தார். காயப் போடுவதற்கு முன்னே தொய்ந்து போனார்!

காரணம் சாயங்கள் வாளியோடு தனிக்குடித்தனம் போய்விட்டன! தையல்கள் ஆங்காங்குப் பிரிந்து போயிருந்தன!

ஈரத்தோடு சுருட்டிக் கொண்டு சட்டையை வாங்கிய பிளாட்பாரக் கடையைத் தேடி ஓடினான். கடைக்காரன்  அங்கு இல்லை! ஏமாற்றியவன்  காத்திருப்பானா? எங்கு கடை விரித்திருப்பானோ, எவருக்குத் தெரியும்!

நூறு ரூபாய் போயிற்று. இனி துணி எடுத்துத் தைத்தால் மேற்கொண்டு இருநூறு ரூபாய் போகும். நண்பருக்கு நஷ்டத்திற்கு மேல் நஷ்டம் அந்தப் பணம்.

வாங்கும் வரை சட்டை “கடைக்காரனுக்குரியது”. கைமாறிய மறுகணம் வாங்கியவனுக்குரியது.

அவனைத் தெருத் தெருவாகத் தேடிக் கொண்டு போய் உண்டு இல்லை என்று பண்ணி விட வேண்டும் என்று புறப்பட்டார். நண்பனை ஆசுவாசப்படுத்தினேன். ஏமாந்தது நாம். தப்பு நம் மேல். ஏமாற்றியவனைக் குற்றம் கூறமுடியாது நண்பா. 

ஊஹும். நான் நேரில் பார்த்து நான்கு “விடு விடா”மல் விடமாட்டேன்..என்ற வரிந்து கட்டிக் கொண்டுக் கிளம்பினார் நண்பர்.

சென்னை எத்தனை பெரிய நகரம். எந்தத் திசைக்குச் சென்று தேடுவாய்? பத்தாயிரம் ரூபாய் செலவழித்தாலும் அவனைக் கண்டு பிடிக்க முடியாது. இது உமக்கு ஒரு பாடம். இனிமேல் ஏமாறாமல் இருப்பதற்கு  என்றேன்.

ஒரு வேளை அக்கம்பக்கமாக அவனைக் கண்டுபிடித்துக் கேட்டாலும் ஒப்புக் கொள்ள மாட்டான். உன்னை வாங்கச் சொன்னேனா? என்று கேட்பான். அவனிடம் போய் வாதாடிக் கொண்டிருக்க முடியாது என்றதும்தான் அமைதியடைந்தார் நண்பர்.
*

பலவருடங்களுக்கு முன்னர்-

வெளியூரிலிருந்து வந்திருந்த சொந்தக்காரர் அணிந்திருந்த சட்டையைப் பார்த்துவிட்டு, அதே மாதிரிச் சட்டை வேண்டும் என்று எங்கள் ஊர்க் கடையில் போய்த் தேடினேன்.

உறவினர் அணிந்திருந்த அதே டிசைன் கிடைத்தது. ஆசையோடு வாங்கிப் போய்த் தைத்தேன். அணிந்தபோது நூல்கள் பிரிவது போன்ற சத்தம் வந்தது.

கழற்றிப் பார்த்தேன்.

தோள்பட்டை இணைப்புத் தையல்கள் பிரிந்து கொண்டு வந்தன. அப்போதுதான் அது ஒரு மட்டமான துணி என்று தெரிந்து கொண்டேன்.  அப்போதே தூக்கிக் கொண்டு தையல் கடைக்காரரிடம் ஓடினேன். அவர் இந்தத் துணி மட்டமானது. தையல் போட்ட இடத்தை இழுத்துப் பார்த்தாலே “நார் நாராக “வருகிறது பாருங்கள். நீங்கள் கொடுத்த துணியில் உங்களுக்குச் சட்டை தைத்துக் கொடுத்துவிட்டோம், இனி நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று கைவிரித்துவிட்டார்.

மீண்டும் அச்சட்டையை சுருட்டிக் கொண்டு துணி எடுத்த ஜவுளிக் கடைக்காரரிடம் ஓடினேன்.  தையல் போட்ட இடத்தை இழுத்துக் காட்டி இப்படிப் பிரிந்து கொண்டு வருகிறதே என்று கேட்டேன். 

நான் அப்போது இளமையோடு இருந்தேன். கன்னங்கள் வழுவழுவென்றிருந்தது.

அந்தக் கடைக்காரர் என் கன்னத்தைப் பிடித்து ஆசையோடுக் கிள்ளி இழுத்தார்.

வலி தாளாமல் உஷ்..ஷ்...என்று கத்தினேன். 

உன் கன்னத்தைப் பிடித்து இப்படிச் சும்மாச் சும்மா இழுத்துக் கொண்டே இருந்தால் புண்ணாகிவிடாதா? தையல் போட்ட இடத்தை இழுத்துக் கொண்டே இருந்தால் கிழியாதா? இதை ஒன்றும் செய்ய முடியாது. பேசாமப் போட்டுக்கோ, உனக்கு ரொம்ப அழகா இருக்கு. என்றார்.

அவன் கிள்ளுவதை விட்டால் போதும் என்று வேதனையோடு திரும்பினேன்.

சொந்தக்காரர் போட்டிருந்தது விலையுயர்ந்த “டெர்ரி காட்டன்” துணி. நான் வாங்கியதோ”நைலான்”துணி! என்னதான் தைத்தாலும் தையல் பிரிந்து கொண்டு போகும்! அதுதான் அதன் தலை எழுத்து.

ஆசை எதோ ஒரு வகையில் துன்பத்தைத் தராமல் போகாது.

அப்படித்தான் காதல் திருமணங்களின் நிலையும் இருக்கிறது என்றால் மிகையாகாது.

கண்ணுக்கு அழகான பிளாட்பாரத் துணிகளில் ஏமாறுவதும், ஆண் பெண் தோற்றத்தில் மயங்குவதும் ஒன்றே!

ஆணுக்கு  அவளிடம் ஏதோ ஒரு விஷயம் பிடித்திருக்கும். அதற்காக அவளை அடைந்து விட முயற்சிப்பான். அதைக் காதலாக வெளிப்படுத்துவான்.

பெண்ணுக்கும்  அவனிடம் ஏதோ ஒன்று பிடித்திருக்கும். அதை அடைந்து விட முயற்சிப்பாள். காதலை வெளிப்படுத்துவாள்.

ஒருவரை ஒருவர் அடையத் துடிப்பது ஒரு வகை உடல் தேவைதான். “காதல்” என்ற பெயரில் ஏற்படும் “காமத்”தின் மயக்கம் உடல் சேர்க்கையோடு விடை பெற்றுக் கொண்டு விடும்.

எப்போதுமே  காரியங்களை விடக் கற்பனைகளுக்கு வலிமை அதிகம்!

ஆண் பெண் சேர்க்கையில் கற்பனைதான் கொடி கட்டிப் பறக்கிறது.

சேர்க்கை பூர்த்தியடையும் போது  கற்பனைகள் யாவும் ஓடி ஒளிந்து விடுகின்றன.

என்னென்னமோ கற்பனை செய்தோமே, கடைசியில் ஒன்றுமே இல்லையே, இவ்வளவுதான் காதலா? இந்த அற்பச் சுகத்துக்காகத்தான் இவளை/இவனைக் காதலித்தோமா என்று மனச்சாட்சி கேள்விகளை எழுப்பும்.

பிளாட்பாரத்தில் வாங்கிய “மட்டமான துணி” போன்றதுதான்  அழகில் மயங்கும் காதலும்!

நனைக்கும் போது சட்டையில் விடுபடும் சாயமும், சுருக்கமும்தான் கல்யாணத்திற்குப் பிறகு ஏற்படும் ஏமாற்றமும்!

“அழகான”காதல் மனைவியின் சுயரூபம் பிறகுதான் தெரியவருகிறது.

“அழகான”காதல் கணவனின்  சுயரூபமும் பிறகுதான் தெரிய வருகிறது.

இத்தொடரில் அடியேன் அடிக்கடி குறிப்பிடும் விஷயம் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்தான்.

எதிர்பார்ப்பு என்பதே ஏமாற்றம். 

ஏமாறப்போவதே எதிர்பார்ப்பு ஆகும்.

*

காதல் ஏன் புனிதமானது என்றால் அது ஆன்மா சம்பந்தப்பட்டது.

உள்ளத்தின் தேவைகளை முன்னிட்டு எழுவது காதல். 

உண்மையான காதலர்களுக்குத்தான் மணவாழ்க்கை  அமைய வேண்டும்.
 
அவர்களுக்குத்தான் இல்லறம் நல்லறமாகும்.

யோகம் என்பது உடலையும் உள்ளத்தையும் இணைப்பது.

பின்னர் ஆன்மாவையும் பரம்பொருளையும் இணைப்பது.
இவை இரண்டுமே  மெய்ப்பொருள் சார்ந்தவை.

உண்மையான காதலும் மெய்ப்பொருளும் ஒன்றாகும்.
உண்மையும் உண்மையும் சேர்ந்தால் பேருண்மையாகும்!

உண்மையான காதலர்கள்  அன்போடு கூடிப் பெறும்  சிற்றின்பமே  பேரின்பமாக மாறும்.

இப்படிப்பட்ட காதலர்கள் எங்கேனும் இருக்கிறார்களா என்று மனதை ஓட விடுங்களேன்.. ..

இன்றைக்கு உண்மையான காதல் யாரிடமும் இல்லை. காரணத்தோடு கூடிய காதல்தான் உள்ளது. 

காமம் என்ற உடல் தேவைகளே இன்றையக் காதலாக வெளிப்படுகிறது. காதல் என்ற பெயரில்  காமம் வளர்க்கப்படுகிறது.

கல்யாணம் என்ற எல்லைக்கோட்டில் போய் முட்டிக்கொள்கிறது.

எங்கே பொய் முடிகிறதோ, அங்கே அராஜகம் வெளிப்படும்.

எங்கே உண்மை முடிகிறதோ, அங்கே தெய்வீகம் வெளிப்படும்.

ஆம்.

காதல் திருமணங்களை விடுங்கள்.

பொதுவாகப் பெற்றோர் பார்த்து முடிக்கும் திருணமங்களில் கூட எதிர்பார்ப்புகள் இருந்தால் ஏமாற்றத்தில்தான் முடிகின்றன.

“பிறக்கும் போதே இறக்கப் போவது உறுதி” என்பது மிகப் பெரிய உண்மை. 

“எதிர்பார்க்கும் போதே ஏமாறப்போகிறோம்” என்பதும் மிகப்பெரிய உண்மை!

பெண் பார்க்கும் / மாப்பிள்ளை பார்க்கும் படலம் முடிந்த பிறகு மணமகன்/ மணமகள் மனதில் என்னென்னமோ கற்பனைகள் “பட்டாம் பூச்சி”கள் போலச் சிறகடிக்கின்றன. 

திருமணத்திற்குப் பிறகு அத்தனைப் பட்டாம்பூச்சிகளும் ஏமாற்றம் என்ற பெட்டிக்குள் போட்டுப் மூடப்படுகின்றன!

இதுதான் வாழ்க்கை!

எதிர்பார்ப்பே இல்லாமல் இருக்க முடியாதே என்று கேட்கலாம்.

எதிர்பார்ப்பு இருக்கட்டும். அரு, வருவதை ஏற்றுக் கொள்ள வேண்டும் - என்பதாக இருக்க வேண்டும். 

அப்படிப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருக்கலாம். 

அந்த எதிர்பார்ப்புக்கள் நம்பிக்கைகளை வளர்க்கும்.

நம்பிக்கை ஒருபோதும் தோற்காது. ஏமாற்றாது. ஏமாறாது.

மணவாழ்க்கைக்கு அச்சாணி நம்பிக்கை; ஆபத்து எதிர்பார்ப்பு.

அதற்குப் பெற்றோரின் வளர்ப்பு முறை முக்கியம். அதுதான் பிள்ளைகளின் எதிர்காலத்தை நிச்சயிக்கின்றன. 

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஏன் சொன்னார்கள்?

குருவே தாய் தந்தைதான். 

குருவாக உள்ள பெற்றோரே நமக்குத் தெய்வமாகிறார்கள்.

பெற்றோரின் அனுபவங்களே பிள்ளைகளை வளர்க்கின்றன.

பெற்றோர் தங்கள் அனுபவங்களைப் பிள்ளைகளிடம் பகிர்ந்துகொண்டு அவர்களிடம் குற்றங்கள்  தோன்றிவிடாமல் தடுக்கவேண்டும்.

எந்தப் பெற்றோர் இதைச் செய்கிறார்கள்?

முதலில்-

பிள்ளைகளின் முன்னால் பாராமுகமாக நடக்கக் கூடாது. 

ஆனால் பிள்ளைகளின் முன்னால் இன்று குடுமிப்பிடிச் சண்டையிடுகிறார்கள்.

நீயா..நானா? என்ற அகம்பாவமே  அதற்குக் காரணம்.

பெற்றோரிடம் ஒற்றுமையில்லாவிட்டால் பிள்ளைகள் மணவாழ்விலும் பின்னால் விரிசல் ஏற்படும்.

பெற்றோர் இருபத்தொன்பது நாளும் சிரித்துப் பேசி மகிழ்ந்திருப்பது தெரியாது. ஒருநாள் சண்டையிட்டுக் கொண்டால் அதுமட்டும்தான் தெரியும். அதுவே மனதிலும் ஆழமாகப் பதிந்துவிடும். அதுதான் வாழ்விலும் வெளிப்படும்.

ஒரு சின்ன உதாரணம்-

திரைப்பட நாயகன் எவ்வளவு நல்லது செய்தாலும் அவை கண்களுக்குத் தெரியாது. மனதிலும் பதியாது.

ஆனால் அவன் சிகரெட்டை “ஸ்டைலாக”த் தூக்கிப் போட்டுப் பிடிப்பான். அதையே ரசிகனும் செய்து பார்ப்பான்.

நாயகன் மதுவை அருந்துவான். அதைப் பார்க்கும்  ரசிகனும் மதுவை அருந்துவான். 

படத்தில் வரும் வன்முறைக் காட்சிகள் பார்ப்போர் மனதில் ஆழப்பதியும். அதையே ரசிகனும் பிரயோகப்படுத்துவான்.

நாயகன் வில்லனோடு ஆவேசமாகச் சண்டையிடும் காட்சிகள் ரசிகன் மனதில்  இடம் பிடித்துவிடுகின்றன. 

வீட்டுக்கு வந்த பின் நண்பர்களுடன்  அதே மாதிரி சண்டையிட்டுப் பார்ப்பான். 

சண்டைக் காட்சிகளில் சிறுவர்கள்தான் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.

நல்ல விஷயங்களை விடக் கெட்ட விஷயங்கள் மனதில் மிக எளிதில் இடம் பிடித்துவிடுகின்றன.

எண்ணம்தான் சொல்லாகும் . 

சொற்கள்தான் செயலாகும்.

கணவன் மனைவிக்கிடையே தப்பான எண்ணங்கள் இருக்கும். அது சமயங்களில் தப்பான வார்த்தைகளாக வெளிப்படும். அதுவே மிகப் பெரிய சண்டையில் கொண்டு போய் விட்டுவிடும்.

பிள்ளைகளை வைத்துக்கொண்டே விவகாரத்துக்கு விரைகிறார்கள்!

பெற்றோரின் சண்டைகளைப் பார்க்கும் பிள்ளைகள் வாழ்க்கையில் குழப்பமடைகிறார்கள். நம்பிக்கை இழக்கிறார்கள். பெற்றோரிடம் கற்றுக் கொள்ளும் தீய விஷயங்கள், பிள்ளைகள் வாழ்க்கையில் பங்கெடுத்துக் கொண்டு அவர்களையும் அமைதி இழக்கச் செய்து விடுகின்றன!

ஆனால்-

கணவனும் மனைவியும் கருத்தொருமித்து வாழும் குடும்பங்களில் பிள்ளைகளும் பக்குவமான மனநிலையில் வளர்ந்து  மணவாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்கிறார்கள்.

கும்பகோணத்தில் ஒரு திருமண  மண்டபத்தில் “திருப்பூட்டு மேடை”க்கு மேலே இப்படி எழுதி வைத்திருக்கிறார்கள்.

“உள்ளே இருப்பவன் வெளியே வரத் துடிக்கிறான்.
வெளியே இருப்பவன் உள்ளே வரத் துடிக்கிறான்.
 
புரிகிறதா?

“ஏன்டா கல்யாணம் செஞ்சோம்” என்று கல்யாணம் பண்ணியவர்கள் நொந்து கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் கல்யாணம் பண்ணியாக வேண்டும் என்று இளைஞர்கள்  ஆசைப்படுகிறார்கள்.

பெற்றோர் கல்யாணம் செய்து கொண்டு என்ன சுகத்தைப் பெற்றார்கள் என்று பிள்ளைகள் எவருமே கேட்பது கிடையாது.

பெற்றோர் சலித்துக்கொள்வதைப் பார்த்தும் கூடத் திருமணம் செய்து கொள்ள முன் வருகிறார்கள்.

காரணம் காமம்.

காமம் விநோதமான உணர்வு! 

ஆணும் பெண்ணும் அந்தரங்கமாகப் பெறப்போகும் அனுபவங்கள் அவர்களை ஆசை வளையில் இழுத்துப் போட்டு விடுகின்றன.

அதனால்தான் பல திருமணங்கள் எந்தவித விசாரிப்பும் யோசனையும் இன்றி  பார்த்த உடனேயே முடிக்கப்படுகின்றன.

வாழ்க்கை எல்லாருக்குமே கசப்பது உறுதி. அதுதான் இயற்கையின் நியதி.

பெற்றோரின் சலிப்புகளைப் பார்த்த பிறகும் எதற்காகப் பிள்ளைகள் திருமணம் செய்யத் தலைப்படுகிறார்கள்?

எல்லாற்றுக்கும் அனுபவத்தின் மீதான மோகம்தான் காரணம். அதை யாராலும் வெல்ல முடியாது.

எல்லோரது எண்ணங்களும், சொற்களும், செயல்களும் அனுபவங்களுக்காகவே உருவாகின்றன!

அனுபவங்கள்  அனைத்தும் அடுத்தவர்களுக்குப் பாடங்களாக  அமைகின்றன! இதுதான் இயற்கை நமக்கு வகுத்தளித்த விதி!

ஞானம் பெருகும்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com