37 வினைகளுக்குத் தப்பிக்க முடியுமா?

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்யும் துரோகம் 'கண்ணுக்குத் தெரியாத' வினைகளின் விளையாட்டு.
37 வினைகளுக்குத் தப்பிக்க முடியுமா?

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் செய்யும் துரோகம் 'கண்ணுக்குத் தெரியாத' வினைகளின் விளையாட்டு. இதைப் புரிந்து கொண்டவனுக்கு வாழ்க்கையே ஒரு விளையாட்டு! மேனாட்டுக் கலாச்சாரம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டு என்பதுவரை சென்ற இதழில் பார்த்தோம்.

பொம்மலாட்டத்தைப் பார்ப்பவர்களுக்கு உள்ளிருந்து ஒருவர் ஆட்டுவிக்கிறார் என்ற உண்மை புரியும். அடியேன் அந்த உண்மையும்கூடப் புரியாத சிறுவனாக இருந்தேன் ஒருகாலத்தில்!

சின்ன வயசிலேயே எம்.ஜி.ஆர்.படங்களுக்கு என் பெற்றோர் கூட்டிச் செல்வார்கள்.

நான் திரைப்டத்தில் வரும் காட்சிகள் எல்லாம் திரை மறைவிலே இருக்கும் உண்மையான பொருட்கள் என்றுதான் நம்பிக் கொண்டிருந்தேன். காடு மலை மேடுகள் அனைத்துமே நடிகர்களோடு உள்ளே வைத்து வெள்ளைத்திரையால் மூடப்பட்டுள்ளதாக நம்பிக் கொண்டிருந்தேன்.

ஒரு சமயம் எம்.ஜி.ஆர். அவர்கள் எங்கள் ஊருக்கு தி.மு.கழகத்தின் சார்பாக நடந்த விழாவுக்கு வந்திருந்தார். அந்தப் பழைமையான தியேட்டரில் மக்களைப் பார்வையிடுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எங்கள் பெற்றோர் என்னையும் அழைத்துக் கொண்டு அந்தத் தியேட்டருக்குப் போயிருந்தனர்.

முற்பகல் சுமார் பத்து மணி இருக்கும்.  நாங்கள் குடும்பத்தினருடன் சேர் டிக்கட் பகுதியில் போய் உட்கார்ந்திருந்தோம். எம்.ஜி.ஆர். வெள்ளைத் திரைக்கு அடுத்துள்ள மேடையில் தோன்றிய போது பயங்கரமான கரவொலி! உற்சாகக் குரல் தியேட்டரையே அதிர வைத்தது! வெள்ளை நிற வேட்டிச் சட்டை அணிந்திருந்தார்.

படங்களில் வேடம் போட்டு நடித்தவர், திரை மறைவில் வேட்டி சட்டையோடு தங்கியிருப்பதாக எண்ணிக் கொண்டேன்! 

ரசிகர்கள் வரிசையாக அந்த மேடையில் ஏறிச் சென்று ஒவ்வொருவராக எம்.ஜி.ஆரைக் க் கட்டித் தழுவி முத்தமிட்ட பிறகு இறங்கி வந்தனர்.

கொழுகொழு குழந்தையை எப்படித் தெருவில் போய் வருவோர் கொஞ்சுவார்களோ அப்படித்தான் அவரைக் கொஞ்சிக் கொண்டிருந்தார்கள் அன்று!

*

பொம்மலாட்டத்தைக் கயிறு கட்டி இழுக்கிறார்கள் என்பது தெரியும்.

அப்படித்தான் கணவன் மனைவி துரோகத்தையும்  அவரவர் வினைகள் இழுத்து ஆட்டுகின்றன.

சின்னத் தலைவலிக்கும்  அதுவே காரணம்;  உயிர்க்கொள்ளி நோய்க்கும் அதுவே காரணம்.

சின்னக் கவலைக்கும்  அதுவே காரணம்;  கொடிய மனநோய்க்கும்  அதுவே காரணம்!

இதைப் புரிந்து கொள்ளும் மனிதன் இது போன்ற சோதனைகளிலிருந்து தன்னைத் விலக்கிக் கொண்டு  தீர்வு காண்கிறான்.

அதுதான் பலபேரது துறவறத்திற்குக் காரணம்.

குடும்பம் இருக்கும் போதே காவி பூண்டு கோயில் தளங்களுக்குச் சென்று பிச்சை எடுத்து வயிற்றைக் கழுவும் அவல நிலைக்குத் துணிந்து விடுகிறார்கள். குடும்பத்தின் கொடுமையை விட இது பரவாயில்லை என்ற ஆறுதல் அது!

பலர் மதுவுக்கு அடிமையாகி அடிதடிகளில் இறங்கிக் குற்றவாளியாகிச் சிறைக்குள் போய்விடுகிறார்கள்.

குடும்பக் கொடுமைகளுக்கு இது எவ்வளவோ தேவலை என்று கம்பி எண்ணுகிறார்கள்.

இத்தகைய துரோகச் செய்திகளைப் படிப்பதற்கும், தொலைக்காட்சிகளில் பார்ப்பதற்கும் துணிவு வேண்டும்.

இந்தச் செய்திகளை வரிவரியாகப் படிப்பவர்கள் நாளை அத்தகைய செய்திகளுக்குத் தம்மை ஆயத்தமாக்குகிறார்கள் என்றால் மிகையில்லை.

வியாபாரத்தின் பொருட்டு அப்படி வெளியிடும்  ஊடகத்தாரின் குடும்பங்களும் நாளைக்கு நாறும்.

செய்திகளை அனுதாபத்தோடு வெளியிடுங்கள். ஆர்வத்தோடு வெளியிட்டு உங்கள் வீட்டுச் செய்திகள் வரும்போது அசிங்கப்படாதீர்கள்!

பட்டினியோடு உணவைத் தேடிச் சென்ற பச்சைக் குழந்தையைப் பிணம் தின்னிக் கழுகு காத்திருந்து கவர்ந்து செல்கிறது. அதைக் காத்திருந்து படம் எடுத்த உலகப் புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் இறுதியில் என்ன கதி ஆனார் என்பதை உலகறியும், ஊடகமும் அறிய வேண்டும்!

அந்தப் படப்பிடிப்புக்காக உலகம் அந்த ஒளிப்பதிவாளருக்கு உலகப் புகழ் பெற்ற பரிசைக் கொடுத்தது.

ஆனால் உலகம் அக்கொடுமையைப் படம்பிடித்தற்காக தண்டனை அவரைக் கொண்டே அவருக்கு அளித்தது.

தர்மத்தின் வாழ்வு தன்னைச் சூது கவ்வியது.

தர்மம் ஜெயித்தது.

தலைமறைவாக, அடுத்தவர்களின் அவலங்களை அழகுபடுத்தியமைக்காக.

மீண்டும் ஒருமுறை சொல்லிக் கொள்கிறேன். எந்த ஊடகமாக இருந்தாலும் சரி, உலகத்தார் வினைகளினால் படும் வேதனைகளைப் படம் பிடித்து தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும்  விலாவாரியாக வெளியிட்டு விளம்பரம் தேடினால் அவர்கள் குடும்பத்திலும் நாளை அதே மரணம் நிகழும், நிச்சயம், அதுவும் சத்தியம்!

அந்த ஒளிப்பதிவாளருக்கு அப்படி என்ன நேரிட்டது? ஊடகத்தாருக்கே தெரியாது. காரணம் அத்தனை பணிகள். ஆனாலும்  கூகுள்தான் இருக்கிறதே,  போய்த் தேடிப் பாருங்கள்!

ஊடகங்களுக்கு மட்டும் இது பொருந்தாது.

சோகங்களை வீட்டுக்கு வீடு நின்று“வாய்க்கு அவல்” கிடைத்தாற் போன்று பேசி மகிழுவோர் வாழ்க்கையும் நாளை  நாறப் போகிறது, எச்சரிக்கை!

அதனால்தான் எவரையும்  புறங்கூறாதீர்கள் என்றனர்  முன்னோர்கள்.

மதுரை கிறித்துவ இடுகாட்டில் “இன்று எனக்கு நாளை உனக்கு” என்ற வாசகம் அந்த வழியில் போய் வருவோர் அனைவரையும் மரணத்திற்குக் காத்திருங்கள் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறது.

அது மரணத்தை மட்டும் சொல்லவில்லை

வாழும்போதே “இன்று எனக்கு நாளை உனக்கும்”வினைகள் வந்து சேரும் என்பதையும் வலியுறுத்துகின்றன.

                            பெற்றோர் செய்த பாவம் பிள்ளைகளுக்கு

சுவற்றில் நாம் எரியும் பந்து நம்மை நோக்கித்தானே திரும்பி வரும்!

அடியேன் வாழ்க்கையில் நடந்த உண்மையைச் சம்பவத்தை சொல்லிக் கொள்ள அசிங்கப்படவில்லை. அப்படிச் சொல்லிக் கொள்வதற்காகப் பெருமைப்படுகிறேன். காரணம் யாரும் நாளை அந்தத் தப்பைச் செய்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

என் தகப்பனார் நாத்திகர்.

அதனால் வீட்டில் தீபாவளி கொண்டாடக் கூடாது என்று உத்திரவு போட்டிருந்தார். ஆனால் பச்சைக் குழந்தைகளுக்கு என்ன நாத்திகம் தெரியும்? ஊரே விழாவெடுத்துக் கொண்டாடும் போது நம்ம பிள்ளைகளும் கொண்டாடிவிட்டுப் போகட்டுமே என்று நினைத்திருக்க வேண்டும்.

பிள்ளைகள்தான் அவர் வயிற்றில் பிறந்ததற்காகத் தண்டனை பெற்றோம்.  பாவம், எங்கள் தொழில்கூடத்தில்  பணிபுரிந்தோர் என்ன பாவம் செய்தார்கள்?

நாங்களே கொண்டாடுவதில்லை. உங்களுக்கு எதற்குத் தீபாவளி என்று பணியாளர்களுக்கு போனஸ் தர மறத்து விட்டார் தகப்பனார்.

எங்களைப் போல அவர்களும் ஊரார் கொண்டாடுவதைப் பார்த்து ஏங்கினார்கள்.

காலங்கள் உருண்டன.

பலவிதமான கடன்களால் எங்கள் தொழில் சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு நான் சென்னைக்குப் பிழைப்புத் தேடி வந்தேன். எங்கள் தகப்பனார் நடத்திய அதே தொழில் நிறுவனத்தில் போய்  கூலி வேலைக்குச் சேர்ந்தேன். தெரிந்த தொழில் அதுதானே!

அது ஒரு தீபாவளிச் சமயம்

ஒரு வாரத்திற்கு முன்னதாகவே சக தொழிலாளர்கள் “போனஸ் “பணத்தைக் கத்தைத் கத்தையாக வாங்கிக் கொண்டு வந்து என் முன்னதாகவே எண்ணிக் களிப்படைந்து கொண்டிருந்தார்கள்.

உங்களுக்கும் வரும். நீங்கள் “ஜுனியர்”தானே, அதனால் கடைசியாகத் தருவார்கள் என்று என்னிடம் கூறினார்கள்.

நானும் நம்பிக்கையோடு காத்திருந்தேன்.

“யானை வரும் பின்னே; மணியோசை வரும் முன்னே”.

தீபாவளிக்கு முன்னதாகவே ஊருக்குள் பட்டாசுகள் எதிரொலிக்கத் தொடங்கிவிட்டன.

தீபாவளிக்கு முதல்நாள் மாலை

என்னைக் கூப்பிட்டனுப்பினார் மேனேஜர்.

“போனஸோ”டு வீட்டுக்குப் போகப் போகிறோம் என்ற மகிழ்ச்சியோடு போய் நின்றேன்.

கையில் “கவரை”த் தந்தார். வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு காலில் விழாக் குறையாக நன்றி கூறினேன்.

இது போனஸ் அல்ல. உங்களது இந்த மாதச் சம்பளப் பாக்கி. பாதி நாள் வேலை பார்த்ததற்கானச் சம்பளம். நீங்கள் இன்றோடு வேலையை விட்டுப் போகலாம். ஆட்கள் அதிகம் இருப்பதால் முதலாளி உங்களை அனுப்பச் சொல்லிவிட்டார் என்று கூறினார்.

மேலும் கேட்டால் என் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிவிடுவார் என்பது போலக் கடுமையாகச் சொன்னார் மேனேஜர்.

முதலாளி வரும்போது இருந்தால் விபரீதாமகிவிடும், இப்போதே வெளியேறி விடுங்கள் என்று விரட்டாமல் விரட்டி அடித்தார் மேனேஜர்.

சோகத்துடன் வெளிவந்தேன்.

அப்போதுதான் என் தகப்பனார் போனஸ் தராமைல்  பணியாளர்களை அனுப்பிய காட்சி கண்களுக்குள் தெரிந்தது. 

அன்று உனக்கு; இன்று எனக்கு.

எதுவானாலும்!

இப்படித்தானே அவர்களும் வேதனைப்பட்டிருப்பார்கள்?  என்ற கவலையோடு வீடு திரும்பினேன்.

அடியேன் அனைவருக்கும் இதனால் சொல்லிக் கொள்வது என்னவென்றால்,

பெற்றோர் செய்யும் பாவங்கள் பிள்ளைகளைப் பாதிக்கும் என்பதற்கு என் வாழ்க்கைச் சம்பவமே மிகச் சிறந்த  உதாரணம்.

இப்போது பாருங்கள். உலகில் எத்தனையோ பேர் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று!

காரணமில்லாமல் காரியம் இல்லை.

*

நம்முடைய கஷ்டங்களில் இரண்டு வகை உண்டு.

“சின் முத்திரை”யில் ஆணவத்திற்கு சுண்டு விரலையும், கர்மாவிற்கு மோதிர விரலையும், மாயாவுக்கு நடுவிரலையும் நீட்டி ஆட்காட்டி விரலை கட்டை விரலோடு மடக்கிப் பொருத்தி வைக்கிறோம்.

ஆணவம் என்பது நமது அகம்பாவம்.அறியாமையால் இந்தப் பிறவியில் நாம் செய்த வினைகளுக்கான தண்டனை.  அதற்கு அடையாளமாக சுண்டு விரல். அதில் நம் பெற்றோரின் “பாவங்களும் அடங்கியிருக்கின்றன.

கர்மா என்பது முற்பிறவியல் நாம் செய்த வினைகளுக்கான தண்டனைகள். அதற்கு அடையாளமாக மோதிர விரல்.

அதுமட்டுமல்ல, நம் பெற்றோர் செய்த பாவங்களின் தண்டனைகளும் சேர்ந்தே வருகின்றன.

நமது பாவங்களும் பெற்றோரின் பாவங்களும் ஒன்று கலக்கும் போதுதான் உய்விக்க முடியாதக் குறைபாடுகள் ஏற்படுகின்றன!

பிறக்கும்போதே உடல் மன ஊனங்களோடுப் பிறந்து இறுதி நாள் வரை அல்லல்பட்டு அழுந்தும் எத்தனையோ பேர்களைப் பார்த்திருப்பீர்கள்.

நகரக் கூட முடியாதபடி வெயில் பனி மழையில் அழுந்திக் கொண்டு சாலையில் கிடக்கும்  ஊனமுற்ற பிச்சைக்காரர்களைப் பாருங்கள்.

அவர்களால் மலஜலம் கழிப்பதற்குக் கூட அசைய முடியாதே!

எல்லாச் சோதனைகளுக்கும் தங்களைத் தாங்களே இரையாக்கிக் கொண்டு சீனித்துப் போய்க் கிடக்கிறார்கள். எழுதக்கூட முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்கிறது. கண்கள் ஈரமாகின்றன.

இன்னலில் கண் விழித்து இன்னலோடு கண்மூடும் கொடும்பாவிகள் அவர்கள்!

மனம் முடைந்துபோய்த் தம்மைதாமே மாய்த்துக் கொள்ளவும் அவர்களால் முடியாது. அதுதான் அதைவிடக் கொடுமை!

கைகால்கள் உள்ளவர்கள் சின்னச்சின்ன விஷயங்களுக்கு எல்லாம் தங்களைத் தாங்களே மாய்த்து விடுகிறார்கள். அவர்களது கைகால்கள் அதற்கு உதவியாக உள்ளன.

ஆனால் மாண்டுவிடலாம் என்றால் அதுற்கும்கூட வழியில்லா வண்ணம் இக்கட்டில் சிக்கிச் சித்தரவதைப்படுவோர் என் செய்வர்?

தன்னைத் தானே மாய்ப்பது இறைவனுக்குச் செய்யும் துரோகம்.

அவர்கள் மீண்டும் பிறந்து மீண்டும் அதே துன்பத்தில் சிக்கிச் சீரழிந்தாக வேண்டும்.

கடனைத் திருப்பித் தராமல் இங்கிருந்து எவரும் எப்படியும் தப்பித்து ஓடமுடியாது.

அதனால்தான் எல்லோருமே சகித்துக்கொண்டு போராடுகிறார்கள்.

வாழ்க்கை மிகவும் விசித்திரமானது.

கலாச்சாரம் அதனினும் விசித்திரமானது.

மேனாட்டில் ஒரு கலாச்சாரம். நம் நாட்டில் ஒரு கலாச்சாரம். இது ஏன்?

இதுவும் வினைப் பயன்தான்.

கடையில் பெண்கள்  புடவையை விரித்து விரித்துக் காட்டச் சொல்வார்கள். ஒரு பக்கம் பார்த்தால் போதாதா?

“அந்தப் பக்கம் காட்டு.. .. இந்தப் பக்கம் காட்டு, பார்டரைக் காட்டு.. ..” என்றெல்லாம்  புரட்டிப் புரட்டிக்காட்டச் சொல்லிப் புரட்டி எடுத்துவிடுவார்கள்!

எந்தப் பக்கம் எப்படிப் புரட்டினாலும் எல்லாமே ஒரே டிசைன்தானம்மா என்பார் பணியாளர்.

ஆனாலும் விட மாட்டார்கள்.

அத்தனையும் பார்த்துவிட்டு வேண்டாம் என்று ஒதுக்கிவிட்டு வேறு கடைப் பக்கம் நடையைக் கட்டிவிடுவார்கள்.

வாழ்க்கையில் எது எப்படி நடந்தாலும் எல்லாமே வினைகளினால் ஆன  “ஒரே டிசைன்”தான் என்பதில் மாற்றம் இல்லை!

மேலை நாடுகளில் கணவனோ மனைவியோ தடம் மாறிப் போனால் அது அந்த நாட்டுக்கான வினை.

அன்புதான் அனைத்துக்குமே பொது! அதுவே அனைத்து வினைகளுக்கும் பொதுவான ஒரே தீர்வு!

*

அண்மையில் ஒரு “விலங்கியல் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

மானைத் துரத்திச் சென்ற சிறுத்தை அதனை அடித்து வீழ்த்தித் தனது காலடியில் போட்டுக் கொள்கிறது.

பச்சைக் குழந்தை போலப் பின்னங்கால்களையும் இரண்டு பக்கமுமாக விரித்துப் போட்டபடிச் சிறுத்தையின் காலடியில் மூச்சு வாங்கியபடிக் கிடக்கிறது மான்குட்டி.

சிறுத்தை இளைப்பாறிய பிறகு உண்ணலாம் என்று காத்திருக்கிறது. 

அத்தருணைத்தைப் பயன்படுத்திக் கொண்டு மான் குட்டி எழுந்து ஓட எத்தனிக்கிறது.

என்னை விட்டுத் தப்பிக்க விடுவேனோ என்பது போலச் சிறுத்தை தனது முன்னங்காலால் ஒரு போடு போடுகிறது. மான்குட்டி மனச்சோர்வுடன் வீழ்ந்து விடுகிறது.

மீண்டும் முயல்கிறது. சிறுத்தை மீண்டும் வீழ்த்துகிறது.

இந்தப் போராட்டம் வெகுநேரம் தொடர்கிறது.

இறுதியாக அந்தச் சிறுத்தை மான்குட்டியின் கழுத்தைக் கவ்விகொண்டு இழுத்துச் செல்கிறது.

மான்குட்டி அப்போது  துள்ளித் துடித்திருக்க வேண்டாமா?

கண்களைத் திறந்தபடியே மரணத்தை எதிர்கொண்டு உடன்பட்டுச் செல்கிறது.

இனியும் தப்பிக்க முடியாது என்று அதற்குத் தெரிந்துவிட்டது!

வாழ்க்கையிலும் வினைகள் சூழும்போது இறுதிக்கட்டத்தில் மனிதன்  வினைகளுக்குத் தலை வணங்கிவிடுகிறான்!  கொலை, விபத்து, நோய் போன்ற துர்மரணங்களில் உயிர் துறப்போரின் நிலை இதுதான்.

ஆனால் மனிதனுக்கு அதுவே முடிவான முடிவல்ல!

இறைவன் ஒருவன் உண்டு!

அவன் இரக்கமுள்ளவன். கருணைக்கடல்.

அவன் இறங்கி வந்து மனிதனுக்கு இறுதியாக ஒரு வாய்ப்பைத் தருகிறான்!

அதை மனிதனே உணர வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.

உணர்ந்தவனுக்கு அதில் உய்வு உண்டு. உணராதவனுக்கோ அதுவே தொய்வு!

அந்த இடத்தில்தான் நாத்திகனும் ஆத்திகனும் அடையாளம் பெறுகிறான்.

ஆத்திகன்  கை தூக்கிவிடப்படுகிறான்; நாத்திகன் கை விடப்படுகிறான்!

தெய்வத்துக்குக் கண்ணே இல்லை என்று  தூற்றப்படுகிறான்.

தெய்வாதீனமாக உயிர் பிழைத்தேன் என்று போற்றப்படுகிறான்.

இரண்டும் கடவுள்தான்!!

இறுதிக் கட்டத்தில் இறைவன் தரும் அந்த அரிய வாய்ப்பு என்ன?

சரணாகதி!

(ஞானம் பெருகும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com