3. உடல் வெப்பநிலை எவ்வாறு சீராக காக்கப்படுகிறது?

உடல் வெப்பநிலை அதிகரிக்க, காய்ச்சல் முக்கியமாகக் காரணமாக இருப்பதுடன், உடற்பயிற்சி, அஜீரணம் (வளர்சிதை மாற்றம் அதிகரித்தல்) போன்ற காரணங்களும் இருக்கின்றன.

உடல் வெப்பநிலை சீராக இருக்கும் வகையில், உடலே தன்னை தயார்படுத்திக்கொள்கிறது. ஏனெனில், அப்போதுதான் ஆரோக்கியமாக இருக்கமுடியும்.

உடல் வெப்பநிலை அதிகரித்தால் அது காய்ச்சலாக மாறிவிடும். (100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் அதிகமாக அல்லது 37.8 டிகிரி செல்ஷியஸுக்கும் அதிகமாக) அதனால், உடல் பல்வேறு பிரச்னைகளுக்கும் ஆளாக நேரிடும். இது, நாம் அனைவருக்கும் அனுபவப்பட்ட ஒன்றுதான்.

மற்றொன்று, உடலின் வெப்பநிலை வெகுவாகக் குறைந்து, உடல் தாழ்வெப்பநிலையை அடையும். இதன் காரணமாகவும் உடல்நிலை பாதிக்கப்படும். நமது நாட்டில் இத்தகைய பாதிப்பு குறைவாக இருப்பதால், பலரும் இதுபற்றி கவலைப்படுவதில்லை.

ஏன் படித்தவர்களேகூட, ஓ அப்படியா, உடல் வெப்பநிலை குறைந்து தாழ்வெப்பநிலை ஏற்படுமா என்றுகூட கேட்கலாம். ஆச்சரியம் அடையலாம். பெரும்பாலும், முதியவர்களுக்குத்தான் தாழ்வெப்பநிலை பாதிப்பு ஏற்படும். (95 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கும் குறைவாக அல்லது 35 டிகிரி செல்ஷியஸுக்கும் குறைவாக). அவர்களின் உடலில் ஏற்படும் பல்வேறு மாறுதல்கள் மற்றும் பாதிப்பினால், வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள முடியாமல் அவர்களது உடல் சிரமப்படும். சில சமயங்களில், தாழ்வெப்பநிலை காரணமாக மரணம்கூட ஏற்படலாம்.

உடல் வெப்பநிலை மையம்

நமது உடலின் வெப்பநிலை சீராக இருக்க உடலில் பல்வேறு மாறுதல்கள், வினைகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டே இருக்கும். எல்லாவற்றுக்கும் நடுநாயகமாக இருந்து இந்தச் செயல்களை தலைமையேற்று ஒழுங்குபடுத்துவது, மூளையின் ஒரு பகுதியாக ஹைப்போதலாமஸ் என்ற பகுதியில் உள்ள உடல் வெப்பநிலை மையமாகும்.

உடல் வெப்பநிலை மிகவும் அதிகரித்தாலும், மிகவும் குறைந்தாலும், அதுகுறித்த சமிக்ஞை ஹைப்போதலாமஸ் பகுதியை அடைந்து செய்தி பரிமாறப்படுகிறது. உடல் வெப்பநிலை மையத்தில் உள்ள வெப்பநிலை உணரிகள் (Temperature Sensors), தற்போதைய உடல் வெப்பநிலையை அறிந்து, அந்த வெப்பநிலைக்கு ஏற்ப உடலின் இயக்கங்களுக்குப் பல்வேறு செய்திகளை அனுப்புகின்றன. இதன்மூலம், அதிகப்படியான வெப்பநிலையில் இருந்தும் அல்லது குறைவான வெப்பநிலையில் இருந்தும் உடல் வெப்பநிலையானது சீரான நிலைக்குக் கொண்டுவரப்படுகிறது. இதற்காக, உடல் தசைகள், உறுப்புகள், சுரப்பிகள் மற்றும் நரம்பு மண்டலத்துக்கு கட்டளைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

உடல் வெப்பநிலை அதிகரித்தால்…

உடல் வெப்பநிலை அதிகரிக்கிறது என்றால், அதைக் குறைத்து சீரான வெப்பநிலைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகள் உடலுக்குள் தொடங்கிவிடுகின்றன. எப்படி?

* நரம்பு மண்டலமும் சுரப்பிகளும் தூண்டப்பட்டு, தோல் மூலம் அதிக அளவு வியர்வை வெளியேற்றப்படுகிறது. (கோடைக்காலத்தில் வியர்வை அதிகரிப்பதற்கு இதுதான் காரணம்). இந்த வியர்வைத் துளிகள் ஆவியாகி உடலைவிட்டு வெளியேறும்போது, உடல் குளிர்ச்சி அடைகிறது. அதன்மூலம் உடல் வெப்பநிலை குறைகிறது.

* தோலுக்கு அடியில் உள்ள ரத்தநாளங்கள் தூண்டப்பட்டு அவை விரிவடைகின்றன. (Vaso-Dilation). இதனால், தோல் பகுதியில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதால், அதிகரித்த உடல் வெப்பநிலையானது கதிர்வீச்சு முறையில் வெளியேற்றப்பட்டு (Heat radiation) உடல் வெப்பநிலை குறைகிறது.

உடல் வெப்பநிலை குறைந்தால்…

உடல் வெப்பநிலை குறையும்போது, ஹைபோதலாமஸ் தூண்டப்பட்டு, உடலின் வெப்பநிலையை அதிகரிக்க, உடல் உறுப்புகளுக்கு கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. இதன்மூலம், உடல் வெப்பநிலை சீராக்கப்படுகிறது. எப்படி?

* தோலில் உள்ள ரத்த நாளங்கள் சுருங்கி (Vaso-Contriction), தோலுக்குச் செல்லும் ரத்த ஓட்டம் குறைக்கப்படுகிறது. இதன்மூலம், தோல் மூலமாக வெப்பம் வெளியேறாமல் தடுக்கப்படுகிறது.

* தைராய்டு எனப்படும் கேடயச் சுரப்பி தூண்டப்படும். இதன்மூலம், அதன் சுரப்பு நீரான தைராய்டு ஹார்மோன் அளவு அதிகரித்து, உடலில் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். இதன்மூலம், உடல் வெப்பநிலை அதிகரிக்கும்.

* உடல் தசைகளில் சுருக்கமும், நடுக்கமும் (Muscle shivering) அதிகரிக்கும். இதன்மூலமும் உடல் வெப்பநிலை அதிகரிக்கும்.

இப்படி, உடல் வெப்பநிலை அதிகரித்தாலும், குறைந்தாலும் அதை கட்டுப்படுத்தி, உடல் வெப்பநிலையை சீராக்கும் முயற்சிகளில் ஹைபோதலாமஸ் ஈடுபடும்.

வெப்பநிலை ஏற்றத்தாழ்வுக்கு காரணம் என்ன?

ஒருவரின் உடல் வெப்பநிலை அதிகரிக்கவோ, குறைவதற்கோ, பல்வேறு உடல்ரீதியான காரணங்கள் மட்டுமல்லாமல், வெளிப்புற காரணங்களும் இருக்கின்றன.

வெப்பநிலை அதிகரிக்க…

உடல் வெப்பநிலை அதிகரிக்க, காய்ச்சல் முக்கியமாகக் காரணமாக இருப்பதுடன், உடற்பயிற்சி, அஜீரணம் (வளர்சிதை மாற்றம் அதிகரித்தல்) போன்ற காரணங்களும் இருக்கின்றன. வெளிப்புற சீதோஷ்ண நிலையும் முக்கியக் காரணம்.

வெப்பநிலை குறைய…

உடல் வெப்பநிலை குறைய, உடல்ரீதியான காரணங்கள் மட்டுமல்லாமல், வெளிப்புற காரணங்களும் உள்ளன. உடலில் தைராய்டு சுரப்பு குறைபாடு (வளர்சிதை மாற்றம் குறைதல்), அதிக மருந்துகள் எடுத்துக்கொள்வதால் மூளை, நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள், அளவுக்கு அதிகமான மது, போதைப் பொருள்கள் போன்றவற்றாலும் உடல் வெப்பநிலை குறையலாம்.

இப்படி, பல்வேறு நடவடிக்கைகள் மூலம் உடல் தானாகவே உடல் வெப்பநிலையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயன்றாலும், சில சமயங்களில் அது எல்லை மீறிப்போய், உடல் பாதிப்புக்கு ஆளாக வாய்ப்புகள் உள்ளன.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com