சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

14. டெங்கு காய்ச்சல் 5 - டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பிற பாதிப்புகள்

By பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்| Published: 22nd August 2018 10:00 AM

 

டெங்கு காய்ச்சலால் ரத்தக்கசிவு பாதிப்பு, தட்டணுக்களின் பாதிப்பு குறித்து முந்தைய அத்தியாயத்தில் விரிவாகப் பார்த்தோம். அவை மட்டுமல்லாமல், வேறு சில பாதிப்புகளும்கூட நோயாளிகளுக்கு ஏற்படலாம். அவற்றில் முக்கியமான சிலவற்றைக் குறித்து இங்கு பார்ப்போம்.

உடலுக்குள் ஏற்படும் உறை பாதிப்பு

ரத்த அணுக்கள், டெங்க வைரஸுக்கு எதிரான தடுப்பாற்றல் புரதங்களால் ஏற்படும் தொடர் ரத்த உறைதலில் ஏற்படும் மாற்றங்களால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், ரத்த உறைதல் காரணமாக உடலில் பல இடங்களில், பல உறுப்புகளில், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டுவிடும். அதேநேரம், ரத்த உறை பொருள்கள் குறைபாடு காரணமாக ரத்தக்கசிவுகளும் ஏற்படும். இது உடலைப் பெரிதும் பாதிக்கும்.

பெரும்பாலும், ரத்தக்கசிவு பாதிப்பு உள்ளவர்களுக்கு இத்தகைய நிலைமை ஏற்படும். இவர்களது ரத்தத்தைப் பரிசோதனை செய்தால், தட்டணுக்கள் உள்பட பல்வேறு ரத்த உறைதலுக்குப் பயன்படும் உறை பொருள்களும்  குறைந்திருக்கும். சில ரத்தம் உறைதல் நேரங்களிலும் மாறுதல்கள் நிகழ்ந்திருக்கும். (Prolongations of aTTT - activated partial Thromboplastin Time, prothrombin Time) இவர்களுக்கு உடலின் பல்வேறு உறுப்புகளிலும் பாதிப்புகள் ஏற்படலாம். சிலருக்கு கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை ஏற்படலாம். (Dengue Viral hepatitis). சிலருக்கு இதயத் தசைகள் பாதிக்கப்படலாம். (Acute Myocarditis) சிலருக்கு மூளை பாதிக்கப்பட்டு மயக்க நிலையை அடையலாம். (Encephalitis).

டெங்கு மூளைக்காய்ச்சல்

கடந்த 2017-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்டவர்களில் சிலருக்கு ரத்தக்கசிவு/அதிர்ச்சிப் பாதிப்புடன் மூளைக்காய்ச்சல் பாதிப்பும் ஏற்பட்டது. இவ்வகை மூளைக்காய்ச்சலை டெங்கு-2 அல்லது டெங்கு-3 வகை வைரஸ்களே பெரிதும் ஏற்படுத்துகின்றன. (Neurotropic Virus).

டெங்கு வைரஸ், மூளையில் உள்ள நரம்புகளை பாதிப்பது அபூர்வமாகவே இருந்தாலும், சில வேளைகளில் பாதிப்பும் ஏற்படலாம். சிலருக்கு இத்தகைய டெங்குவினால் ஏற்படும் மூளைக்காய்ச்சல், ரத்தக்கசிவு பாதிப்புடன் சேர்ந்து ஏற்படலாம், அல்லது தனியாகவும் ஏற்படலாம்.

வைரஸ் நேரடியாகவே மூளை நரம்புகளைப் பாதிக்கலாம். அல்லது, மூளை ரத்தநாளக் கசிவினால் வெளியேறும் ரத்தச் சிவப்பணுக்கள், புரதம், மற்றும் வைரஸை தாக்கிய வெள்ளையணுக்களின் பாதிப்பினால் (DENV Infected Macrophages) டெங்கு மூளைக்காய்ச்சல் ஏற்படலாம்.

இவர்களுக்கு ஆரம்பத்தில் லேசான காய்ச்சல் ஏற்படும். குளிர், நடுக்கம், வாந்தி, தலைவலி, உற்சாகமின்மை ஆகியவை இருக்கும். ரத்த அழுத்தம் குறையும். இவர்களில் சிலருக்கு, மூளையில் பல்வேறு இடங்களில் ரத்தம் கசிந்து மூளை பாதிக்கப்பட்டிருக்கலாம். சிலருக்கு டெங்கு காய்ச்சலால், உடலின் பல்வேறு உறுப்புகளும் பாதிக்கப்பட்டு அதனால் மூளையில் பாதிப்பு ஏற்படலாம். குறிப்பாக, ரத்தக்கசிவு, அதிர்ச்சி பாதிப்பு, கல்லீரல் அழற்சி பாதிப்பு காரணமாக மூளை பாதிக்கப்படலாம். இதனை, டெங்குவின் பாதிப்பினால் ஏற்பட்ட மூளை பாதிப்பு (Dengue Encephalopathy) என்று சொல்வார்கள்.

மிகுவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவர் யார்?

டெங்கு காய்ச்சல் எந்த வயதினரையும் விட்டுவைப்பதில்லை. எல்லா வயதினருக்கும் டெங்கு காய்ச்சல் ஏற்படுமென்றாலும், சிலருக்கு எளிதாக ஏற்படவும், ஏற்பட்டால் அதிகப் பாதிப்பை உண்டாக்கக்கூடியதாகவும் இருக்கிறது. அப்பட்டவர்கள் யார்?

* கர்ப்பிணிகள்

* பிறந்த குழந்தைகள்

* வயதில் முதிர்ந்தவர்கள்

* எய்ட்ஸ் தொற்று ஏற்பட்டவர்கள்

* சர்க்கரை நோய் உள்ளவர்கள்

* நீண்டகால சுவாசப் பிரச்னை/ஆஸ்துமா உள்ளவர்கள்

* உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள்

* ஸ்டீராய்டு மருந்து எடுத்துக்கொள்பவர்கள்

* உறுப்பு தானம் பெற்று உடல் எதிர்ப்பாற்றலுக்கு எதிரான மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள்

* இதய நோயாளிகள் மற்றும் ரத்த உறைதலைத் தடுக்க அவர்கள் பயன்படுத்தும் மருந்துகள்

* ரத்த உறைதல் பாதிப்பு நோய் உள்ளவர்கள்

* இரைப்பை - குடல் புண்கள் உள்ளவர்கள்

* ரத்தச் சிவப்பணு நொதி குறைபாடு உள்ளவர்கள் (G6PD Deficiency)

எச்சரிக்கை மணி

டெங்கு காய்ச்சல் பலருக்கும் ஏற்படும் என்றாலும், சிலருக்கு அது பல்வேறு உடல் பாதிப்புகளையும், மோசமான உறுப்பு பாதிப்புகளையும், ரத்தக்கசிவு பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடுகிறது என்று பார்த்தோம்.

இவ்வாறு இவர்களுக்கு இத்தகைய மோசமான பாதிப்பு ஏற்படுவதற்கு முன் சில எச்சரிக்கை மணியை டெங்கு அடிக்கும். அதைக் கவனித்தாலே, நாம் இன்னும் முன்னெச்சரிக்கையாக இருந்துகொள்ளலாம். அவற்றில் சில -

* மருந்துகளுக்குக் கட்டுப்படாத தொடர் வாந்தி

* நுரையீரல் உறையில் நீர் தங்குதல்

* வயிற்றுப் பகுதியில் நீர் தங்குதல்

* தாங்கமுடியாத வயிற்று வலி

* மாதவிலக்கில் ரத்தம் அதிகம் வெளியேறுதல்

* கை, கால் குளிர்ந்து விரைத்துப்போதல்

* ரத்தம் அழுத்தம் குறைந்துபோதல்

* நாடித்துடிப்பு அதிகரித்தல்

* தட்டணுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துகொண்டேபோதல்

* வெளியேறும் சிறுநீரின் அளவு குறைதல்

* கல்லீரல் வீக்கம்

* படபடப்பு, மூச்சுவிடுவதில் சிரமம்

போன்றவை குறிப்பிடத்தக்கவை.

(தொடரும்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : டெங்கு காய்ச்சல் டெங்கு கொசு வைரஸ் ரத்தக்கசிவு மஞ்சள் காமாலை மூளைக்காய்ச்சல் பாதிப்பு மருத்துவம் dengue dengue fever mosquito treatment

More from the section

21. மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல்
20. ஜப்பானிய மூளைக்காய்ச்சல்
19. கிரிமியன் - காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்
18. ஜிகா வைரஸ் காய்ச்சல்
மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)