சனிக்கிழமை 21 செப்டம்பர் 2019

12. டெங்கு காய்ச்சல் 3 - பாதிப்புகளும் அறிகுறிகளும்..

By பேரா. டாக்டர் முத்துச் செல்லக் குமார்| Published: 01st August 2018 12:00 AM

 

டெங்கு வைரஸை பரப்பும் கொசுக்கள் பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டோம். அடுத்து, டெங்கு காய்ச்சலை உருவாக்கும் டெங்கு வைரஸ் குறித்து தெரிந்துகொள்ளலாம்.

ஒரு காலத்தில், இந்த டெங்கு வைரஸ் கொசுக்களால் விலங்குகளுக்கு மட்டும் பரவிக்கொண்டிருந்தது. தற்சமயம், மனிதர்களுக்கும் பரவி நோயை ஏற்படுத்தக்கூடியதாக மாறிவிட்டது.

டெங்கு வைரஸ் வகைகள்

இந்த வைரஸ், ஃப்ளாவி வைரஸ் (FLAVI VIRUS) என்ற இனத்தைச் சேர்ந்தது. இது, 40 முதல் 60 நானோ மீட்டர் அளவுடையதாக இருக்கும். இந்த வைரஸ் ஒழுங்கற்ற கோள வடிவில் காணப்படும். இதில், ஒரு ஆர்என்ஏ சுருள் இருக்கும். இதைச் சுற்றி கொழுப்பால் ஆன உறை இருக்கும். அதன் வெளிப்புறத்தை ஒரு சவ்வு மூடியிருக்கும். இந்த வைரஸில் பல்வேறு புரதப் பொருள்களும் இருக்கும். இவற்றில் முக்கியமானவை, சி புரதம், எம் புரதம், மற்றும் ஈ புரதம். இவை இல்லாமல், மேலும் 7 சிறு வகை புரதங்களும் இந்த வெளி உறையில் இருக்கும். (NS1, NS2a, NS2b, NS3, NS4a, NS4b, மற்றும் NS5).

இந்த வைரஸில் நான்கு முக்கியப் பிரிவுகள் இருக்கின்றன. இவை முறையே, டெங்கு 1 வைரஸ், டெங்கு 2 வைரஸ், டெங்கு 3 வைரஸ், டெங்கு 4 வைரஸ் (Sero Types) என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஒவ்வொரு வைரஸ் வகையிலும் உட்பிரிவுகள் (Geno Types) உள்ளன. இவை ஒவ்வொன்றிலும் மரபணு மூலக்கூறுகளில் மாறுதல்கள் இருக்கும். எனவே, மொத்தமாகப் பார்க்கும்போது, 47 வகையான டெங்கு வைரஸ் பிரிவுகள் (47 strains of Dengue virus) இருப்பது தெரியவரும்.

வைரஸ் எப்படிப் பெருகுகிறது?

கொசுக்கள் கடிக்கும்போது, நமது ரத்தநாளத்தில் இந்த வைரஸ் உட்புகுந்துவிடும். இதன் வெளிப்புறத்தில் உள்ள உறை புரதமான ஈ புரதம்தான் மனித செல்லோடு (ரத்த வெள்ளையணு) ஒட்டிக்கொள்ள உதவும். அதன்பிறகு, செல்லுக்குள் நுழையும் வைரஸ், மனித செல்களில் உள்ள நியூக்ளியஸை பயன்படுத்தி, வைரஸ் உற்பத்திக்குத் தேவையான ஆர்என்ஏ-வாக மாற்றி, அவற்றில் இருந்து புதிய வைரஸ் உருவாக வழி செய்யும். இதனால், ஒவ்வொரு செல்லில் இருந்தும் புதிய வைரஸ்கள் உருவாகி, அருகில் உள்ள செல்களையும் பாதித்து, பெருமளவு பெருகிவிடும்.

மனித உடலுக்குள் வைரஸ் எப்படிப் பரவும்?

டெங்கு காய்ச்சல் ஏடிஸ் வகை பெண் கொசுக்களால்தான் பெரும்பாலும் பரவும் என்றாலும், சில வேளைகளில் டெங்கு பாதித்தவரிடம் இருந்து பெறும் ரத்தம் (ரத்த தானம்) மூலமாகவும் பரவலாம். அதேபோல, கர்ப்பிணிக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால், கர்ப்பப்பையில் வளரும் சிசுவும் டெங்குவால் பாதிக்கப்படலாம். ஆனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரிடம் இருந்து நேரடியாக மற்றொரு நபருக்கு டெங்கு காய்ச்சல் பரவுவது கிடையாது.

ரத்த தானத்தைப் போலவே, உறுப்பு தானம் செய்யும்போதும், உறுப்பு தானம் தருபவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால், அவரிடம் இருந்து பெறப்படும் உறுப்பு மூலமாகவும், உறுப்பு தானம் பெறுபவருக்கு அபூர்வமாக டெங்கு காய்ச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

தமிழகத்தில் முதல் நான்கு வகை டெங்கு வைரஸ் வகைகளுமே காணப்பட்டாலும், டெங்கு வைரஸ் 1 (DENV 1) மற்றும் டெங்கு 2 (DENV 2) வகைகள்தான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பது தெரியவந்துள்ளது. டெங்கு வைரஸ் 4 (DENV 1) வகை மிகவும் அபூர்வமாகத்தான் காய்ச்சலை ஏற்படுத்துகிறது.

கொசு கடித்து வைரஸ் உடலில் நுழைந்து பெருகி, அடுத்த 2 முதல் 7 நாள்களுக்குள் தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும். சிலருக்கு இது மாறுபடலாம். பெரும்பாலும், 3 முதல் 14 நாள்களுக்குள் தொந்தரவுகள் வந்துவிடும்.

நோய் அறிகுறிகள்

முதல் இரண்டு தினங்களுக்கு நோயாளிகளுக்கு உடல் சோர்வு, தலைவலி ஆகிய தொந்தரவுகள் இருக்கும். சிலருக்கு ஃப்ளூ காய்ச்சல் போன்ற தொந்தரவுகளுடன் டெங்கு காய்ச்சல் ஏற்படலாம். அதனைத் தொடர்ந்து காய்ச்சல் ஏற்படும். காய்ச்சல் தொடர்ந்து பல நாள்கள் இருக்கும். 103 டிகிரி முதல் 104 டிகிரி வரைகூட உயரலாம். மேலும், நோயாளிகளுக்கு குமட்டல், வாந்தி ஆகிய தொந்தரவுகளும் ஏற்படும்.

வயிற்று வலி, வயிற்றோட்டமும் ஏற்படலாம். தாங்க முடியாத உடல் வலி, மூட்டு வலி, தசை வலி ஆகிய பாதிப்புகள் ஏற்படும். தோலில் சில சிவப்பு நிறத் தடிப்புகள் (Rash) தோன்றலாம். கண்ணின் பின்பகுதியில் அதிக வலி ஏற்படலாம். இவ்வாறு தோன்றும் காய்ச்சல் 2 முதல் 7 நாள்கள் வரை நீடிக்கும்.

கவனம்

டெங்கு வைரஸ் உள்புகுந்து டெங்கு பாதிப்பு ஏற்பட்டவர்களில் பலருக்கு மேற்கூறிய எந்தவிதத் தொந்தரவுகளும் இல்லாமல்கூட இருக்கும். (Asymptomatic). குறிப்பாக, குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஆரம்பத்தில் நோய் அறிகுறி தெரியாமல்கூட இருக்கலாம். எனவே, டெங்கு பாதிப்புள்ள இடங்களில் வசிக்கும் குழந்தைகள், சிறுவர்களை மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வர வேண்டும்.

பெரும்பாலானோருக்கு மூன்று நாட்களுக்குள் காய்ச்சல் குறைந்துவிடும். எனவே, காய்ச்சல் முடிந்தது என்று எண்ணிவிடக் கூடாது. முதல் வாரத்தில் 4, 5, 6-வது நாள்களில் சிலருக்கு ரத்தக்கசிவு பாதிப்பு, உடலில் நீர் கோர்த்தல் பாதிப்புகள் ஏற்படும். இதன் காரணமாக, மலம் கருப்பாகப் போகும். குடல் பகுதிகளில் ஏற்படும் ரத்தக்கசிவால் ரத்த வாந்தி, மூக்கில் ரத்தம் வடிதல், பல் - ஈறு பகுதிகளில் ரத்தம் கசிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். மேலும், ரத்தநாள நுண்ணிய தந்துகிக் குழாய்களில் பிளாஸ்மா வெளியேறுவதால் (Pleural Effusion) நுரையீரல் உறைக்கு இடையே நீர் தங்கும். வயிற்றுப் பகுதிகளில் நீர் தங்கும் (Ascites).

ரத்தக் கசிவுகளாலும், நீர்க் கசிவுகளாலும் நோயாளியின் ரத்த அழுத்தம் குறைந்து தாழ்நிலையை அடைந்துவிடும். (Hypotension). நோயாளி, டெங்கு அதிர்ச்சி பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

எனவேதான், டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நபரை குறைந்தது ஒரு வாரம் வரை கவனமாகக் கண்காணிக்க வேண்டும். இந்த மேற்கூறிய பாதிப்புகள் எல்லாம், டெங்கு ரத்தக் கசிவு பாதிப்பு (Dengue hemorrhagic Fever), மற்றும் டெங்கு அதிர்ச்சி பாதிப்பு (Dengue Shock Syndrome) ஏற்பட்டுவிட்டது என்பதற்கான அறிகுறிகளாகும்.

(தொடரும்)

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : டெங்கு காய்ச்சல் டெங்கு வைரஸ் ஃப்ளாவி வைரஸ் கொசுக்கள் ரத்த தானம் blood donation flavi virus virus dengue fever mosquito

More from the section

21. மேற்கு நைல் வைரஸ் காய்ச்சல்
20. ஜப்பானிய மூளைக்காய்ச்சல்
19. கிரிமியன் - காங்கோ குருதிக்கசிவுக் காய்ச்சல்
18. ஜிகா வைரஸ் காய்ச்சல்
மஞ்சள் காய்ச்சல் (Yellow Fever)