28. கார்கி வாசக்னவி

வாசக்னு ரிஷி தன் மனைவியின் அருகே அமர்ந்தார். அவளின் மலர்ந்த முகத்தையும் அடிவயிற்றில் பதிந்துள்ள கைகளையும் பார்த்தவாறே ‘இன்று என்ன செய்தி வைத்திருக்கிறாய் எனக்கு?’ என்றார்.
28. கார்கி வாசக்னவி

எது பூமியில் இருந்துகொண்டு பூமியினுள் உறைகிறதோ

எதை பூமி அறிந்து கொள்ளவில்லையோ

எதற்குப் பூமி உடலாகிறதோ

எது பூமியின் உள் நின்று அதனை ஆள்கிறதோ

அதுவே ஆத்மா.

அந்தர்யாமியான அது அழிவற்றது’

வாசக்னு ரிஷி தன் மனைவியின் அருகே அமர்ந்தார். அவளின் மலர்ந்த முகத்தையும் அடிவயிற்றில் பதிந்துள்ள கைகளையும் பார்த்தவாறே ‘இன்று என்ன செய்தி வைத்திருக்கிறாய் எனக்கு?’ என்றார்.

‘பாருங்கள் இன்று நம் மகன் என்னை எட்டு முறை உதைத்து விட்டான். இன்றென்னவோ துள்ளாட்டம் அதிகமாகத்தான் இருக்கிறது’

‘மகனா? குழந்தை மகளாகவும் இருக்கக் கூடுமே தேவி’

‘எனக்கென்னவோ மகளாக இருந்தாலும் ஆண் மகனைப் போன்றுதான் இருப்பாள் என்று படுகிறது’. 

‘ஓ! அப்படியா ரிஷி பத்தினியாகியதால் உனக்கு ஞான திருஷ்டியில் தோன்றிவிட்டது போலிருக்கிறது’ என்று சொல்லிச் சிரித்தபடி அவள் வயிற்றில் தன் கையை வைத்து ஆதுரமாகத் தடவிக் கொடுத்தார் வாசக்னு. ‘ஆம் இன்று அசைவுகள் அதிகமாகத்தான் இருக்கின்றன. நாளை பிரம்ம முகூர்தத்தில் குழந்தை பிறந்துவிடும் எனத் தோன்றுகிறது’ என்றார்.

அவள் பதற்றத்துடனும் மகிழ்ச்சியுடனும் படபடத்து அவரை அணைத்தவாறே படுத்துக் கொண்டாள். நன்றாக உறங்கிவிட்டாள் என்பதை அறிந்த வாசக்னு குடிலின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தார். வானில் ஒளிரும் நட்சத்திரங்களையும், அதன் நடுவே வெள்ளித் தட்டாக ஜொலித்துக் கொண்டிருக்கும் முழு நிலவையும் பார்த்துக் கொண்டிருந்தார். மனதினுள் ‘நாளை பௌர்ணமி இன்றே முழு நிலவு காட்சி அளிக்கிறது. இல்லை அது இன்னும் முழு நிலவாக இல்லை. நாளையின் வளர்ச்சி இன்னும் மீதம் இருக்கிறதே என்று எண்ண ஓட்டம் போய்க்கொண்டிருந்த போதே தன் மனைவியின் வயிற்றைத் தடவிய தன் விரல்களைப் பார்த்தார்.

பெண் குழந்தைதான், நாளை இம்முழு நிலவைப் போல ஜொலிக்கப் போகும் அற்புதக் குழந்தை. ஆனால் இன்றைய நிலவின் சிறு வளர்ச்சிக் குறை போல அழகு எனும் அம்சம் இல்லாத குழந்தை. தன் மனைவியின் உள்ளுணர்வின் படி பெண்ணாக இருந்தாலும் ஆண் வாரிசு போல பேர் சொல்லும் குழந்தை. மனைவியின் வயிற்றைத் தடவி குழந்தையை ஸ்பரிசித்த போது அதன் குறுகிய நெற்றி, குச்சி போன்ற கால்கள், சற்றே வளைந்திருந்த உடல் என உணர்ந்தார். சக முனிகுமாரிகளின் அழகோடு ஒப்பிட நேர்ந்தால் தன் மனைவி இதை எப்படி எடுத்துக் கொள்வாள். உண்டானது முதலே மிகவும் ஆசையாக ஒவ்வொரு நாளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள் தனக்கான மகவை.

அவரது நெடிய யோசனையை கலைத்துப் போட்டது மனைவியிடமிருந்து வந்த பிரசவ வலிக் குரல். குடிலுள் பெண்கள் சூழ்ந்திருக்க அவர் இன்னமும் மறையாதிருக்கும் நிலவைப் பார்த்தபடியே நின்றார். குழந்தை அழும் சப்தமும் உடனிருக்கும் பெண்களின் சத்தமும் அவரது காதுகளை அடைந்தது. அவர்களின் சலசலப்பு அத்தனை மகிழ்வானதாக இல்லை என்பது தெரிந்தது. இதை அவர் ஏற்கனவே எதிர்பார்த்ததுதானே.

குழந்தையை கையில் ஏந்தி வந்து அவரிடம் ஆசிகளுக்காக காண்பித்தனர் பெண்கள். குழந்தையின் சிரசில் கை வைத்த வாசக்னு கண்களை மூடி ஆழமாக மூச்சிழுத்து ‘அறிவுச்சுடராக இருப்பாய். ஞான மார்க்கத்தில் இம்முழு நிலவை ஒத்து விளங்குவாய் மகளே’ என்று கூறினார். எப்போதும் பெண் சிசுக்களுக்கு இவ்வாறு ஆசி வழங்கப்படுவதில்லை. ‘சௌபாக்கியவதி பவ’ என்று வாழ்த்தித்தான் வழக்கம். அப்பெண்களுக்கே அது ஆச்சரியமாக இருந்தது.

அவளுக்கு தன் முன்னோரின் பெயரைக் கொண்டு கார்கி என்று பெயரிட்டார் வாசக்னு. வேதங்களையே அதன் மொழியறிவாகப் புகட்டினார். அக்குழந்தை சொற்காட்டில் புகுந்து விளையாடியது. வேதக் கோர்வைகளை, சந்தங்களை, ஸ்மிருதிக்களை குறைவான பருவத்திலேயே கற்றுத் தேறியது. அழகற்று இருப்பது அதற்கு வரமாகிப் போனது. அழகிருந்தால் அதைப் பேணுவதிலேயே, மேலும் மேலும் அழகுபடுத்துவதிலேயே அவள் நேரம் மனமும் சென்றிருக்கும். அதன் எதற்கான அவசியமும் இன்றி ஞானப் பேரொளியில் மூழ்கி எழவே பிறந்த பிறப்பாக விளங்கினாள் சிறுமி.

சொல்திகழத் தொடங்கிய இளநாவால் வேதங்களை கற்று ஓதத் தொடங்கினாள் கார்கி. அவளுக்கு நிகராக வேதங்களை ஓதுவதில் யாரும் இல்லை எனும் அளவுக்கு தன்னிகரற்று விளங்கினாள். தன் பன்னிரண்டாம் அகவையிலேயே ஜனக மன்னனின் வேதச் சொல்லாய்வுக்கு அவள் வந்த பொழுது அத்தனை விழிகளும் அவளையே நோக்கின. சாதாரண பெண்ணிடத்தில் ஏற்படும் எந்த மாற்றங்களும் அத்தனை விழிகள் அவள் உடல் தொட்டுப் போனதில் அவளுக்கு ஏற்படவேயில்லை.

ஜனகரின் அவையில் முதலில் அவள் குரல் எழுந்தபோது அதிலிருந்த தூய ஒலி பிறரை அமைதியடையச் செய்தது. வேதம் தனக்குரிய மானுடக்குரலை தெரிவு செய்துவிட்டது போன்றே தோன்றியது. அவையாடலில் மெல்ல மெல்ல அனைவரும் சொல்லடங்கி ஆசிரியர் முன் மாணவர்கள் போல் ஆயினர். கார்கி விதேக நாட்டின் வேதச் செழுமையின் உச்சம் என்று சூதர்களால் பாடப்பட்டாள். அவள் காலடியில் அமர தென்னக நாடுகளில் இருந்தெல்லாம் நெடுநாட்கள் நடந்து வந்தணைந்தனர் வேதவிழைவோர்.

உபநிஷதங்களிலேயே மிகப் பெரியதான பிரகதாரண்யக உபநிஷதம் சுக்ல யஜுர்வேதத்தின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. பிரகதாரண்யகம் என்ற சொல்லின் பொருள் பெருங்காடு என்பதாகும். யாக்ஞவல்கிய மகரிஷியின் உபதேசங்களே இந்த உபநிஷதத்தின் பெரும்பகுதியாக உள்ளன. அவரே பிரம்ம ஞானி என்று போற்றப்படுபவரும் ஆவார்.

ஜனக மன்னர் அவை கூடலில் ஒரு முறை யார் முழுமையான பிரம்ம ஞானம் பெற்றவரோ அவருக்கு தன் கோசாலையில் இருந்து ஆயிரம் பசுக்களை பரிசளிப்பதாக அறிவித்தார். அவையின் சொல்லாடலில் அனைத்துக் கேள்விகளுக்கும் திருப்தி அளிக்கும் விதமாக பதில் கூறி அனைவரின் வாயையும் அடைத்துவிட்டார் யாக்ஞவல்கியர். தானே பிரம்ம ஞானி என்று சொல்லி ஆயிரம் பசுக்களை தன் ஆசிரமத்திற்கு ஓட்டிச் செல்லும்படி தன் சீடர்களுக்கு கட்டளையிட்டார்.

ஆனால் அதற்கு முன் அந்த மாநாட்டில் யக்ஞவல்கியரைத் தன் கேள்விக் கணைகளால் கார்கி துளைத்தெடுத்தாள். ஆன்மாவுக்கான அடிப்படை தொடர்பாக பல்வேறு கேள்விகளை கார்கி கேட்டாள்.

கார்க்கி: யாஞ்யவல்கியரே! இந்த பூமியில் உள்ள அனைத்து வஸ்துக்களும் தண்ணீரினால் ஒரு துணி நெய்யப்படுவதைப் போல் இணைந்து நெய்யும் பாவு போன்று (பாவு-குறுக்கு நூலாக) காணப்படுகின்றன. அப்படி என்றால் தண்ணீர் எதனால் இணைந்து காணப்படுகின்றது?

யாஞ்யவல்கியர்: காற்றால்.

கார்க்கி: அப்படியென்றால், காற்று எதனால் இணைந்து காணப்படுகின்றது?

யாஞ்யவல்கியர்: ஆகாய உலகங்களினால்.

கார்க்கி: ஆகாய உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: கந்தர்வ உலகங்களினால்.

கார்க்கி: கந்தர்வ உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: சூரிய உலகங்களினால்.

கார்க்கி: சூரிய உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: சந்திர உலகங்களினால்.

கார்க்கி: சந்திர உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: நட்சத்திர உலகங்களினால்.

கார்க்கி: நட்சத்திர உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: தேவர் உலகங்களினால்.

கார்க்கி: தேவர் உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: இந்திர உலகங்களினால்.

கார்க்கி: இந்திர உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: பிரஜாபதியின் உலகங்களினால்.

கார்க்கி: பிரஜாபதியின் உலகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

யாஞ்யவல்கியர்: பிரம்மலோகங்களினால்.

கார்க்கி: அப்படியென்றால் பிரம்ம லோகங்கள் எவைகளினால் இணைந்து காணப்படுகின்றன?

ஒரு நிலையில், அனைத்துக்கும் தொடக்கமான பிரம்மம் குறித்து கார்கி கேள்வி எழுப்பிய போது, கோபமடைந்த யாக்ஞவல்கியர், ‘இதற்கு மேல் கேள்வி கேட்காதே, உன் தலையே விழுந்துவிடும்’ என்று கார்கியின் வாயை அடைத்துவிட்டார். பின் அரசவையினரை நோக்கி கூறினாள்: ‘மரியாதைக்குரிய பிராமணர்களே, நான் அவரிடம் இரண்டு கேள்விகள் கேட்கப் போகிறேன். அவற்றுக்கு அவர் விடையளித்தார் என்றால், உங்களில் யாரும் பிரம்மத்தைப் பற்றிய எந்த விவாதத்திலும் அவரைத் தோற்கடிக்க முடியாது என்றாள்.

யாக்ஞவல்கியர்: கேள் கார்கி.

அவள் கூறினாள்: யாக்ஞவல்கியரே, காசியையோ விதேகத்தையோ சேர்ந்த வீரமகன், தனது வில்லை இழுத்து நாண்பூட்டி, எதிரிகளைக் கொல்லும் இரண்டு கூரிய அம்புகளைக் கையிலேந்தி போர் செய்ய எழுவது போல, இந்த இரு கேள்விகளுடன் உங்களுக்கெதிரில் எழுகிறேன். இவற்றுக்கு விடையளியுங்கள்.

யாக்ஞவல்கியர்: கேள் கார்கி.

அவள் கூறினாள்: யாக்ஞவல்கியரே, வானுக்கும் மேலுள்ளது, பூமிக்கும் கீழுள்ளது அது. வானுக்கும் பூமிக்கும் இடையிலுள்ளது அது என்பர். கடந்தவையும் நிகழ்பவையும், வருபவையும் ஊடும் பாவும் போல விரவியுள்ளது அதில். அது எது என்று எனக்குக் கூறுங்கள்.

யாக்ஞவல்கியர்: வானுக்கும் மேலுள்ளதும், பூமிக்கும் கீழுள்ளதும், வானுக்கும் பூமிக்கும் இடையிலுள்ளதும், கடந்தவையும் நிகழ்பவையும், வருபவையும் ஊடும் பாவும் போல விரவியுள்ளதும் ஆகாசம் (வெளி).

அவள் கூறினாள்: உம்மை வணங்குகிறேன் யாக்ஞவல்கியரே. எனக்கு விடை சொல்லிவிட்டீர்கள். இதோ இன்னொன்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

யாக்ஞவல்கியர்: கேள் கார்கி.

அவள் கூறினாள்: அப்போது, அந்த ஆகாசம் ஊடும் பாவும் போல விரவியுள்ளது எதில்?

யாக்ஞவல்கியர்: கார்கி, பிராமணர்கள் அதை ‘அழிவற்றது’ (அக்ஷரம்) என்று அழைக்கிறார்கள். அது தூலமானதல்ல, துகளுமல்ல. நீளமானதல்ல, குறுகியதுமல்ல. செந்தீயல்ல, நீருமல்ல. நிழலற்றது, இருளற்றது, வளியற்றது, வெளியற்றது (அனாகாசம்), பற்றற்றது, ரசமற்றது, மணமற்றது, விழியற்றது, செவியற்றது, வாக்கற்றது, மனமற்றது, ஒளியற்றது, மூச்சற்றது, முகமற்றது, அளவற்றது, உள்ளும் வெளியும் அற்றது. அது எதையும் உண்பதில்லை. எதுவும் அதை உண்பதில்லை.

அந்த அழிவற்றதன் ஆணையால், கார்கி, நிலவும் ஞாயிறும் நிலைபிறழாது நிற்கின்றன. அந்த அழிவற்றதன் ஆணையால், கார்கி, வானமும் பூமியும் நிலைபிறழாது நிற்கின்றன. அந்த அழிவற்றதன் ஆணையால், கார்கி, நிமிஷங்களும் முகூர்த்தங்களும் நாட்களும் அரைமாதங்களும் மாதங்களும் பருவங்களும் வருடங்களும் நிலைபிறழாது நிற்கின்றன. அந்த அழிவற்றதன் ஆணையால், கார்கி, வெண்மலையினின்று சில நதிகள் கிழக்காக ஓடுகின்றன, சில மேற்காக ஓடுகின்றன, மற்றவை வேறு திசைகளில் ஓடுகின்றன. அந்த அழிவற்றதன் ஆணையால், கார்கி, மனிதர் தானம் தருவோரைப் புகழ்கின்றனர். தேவர்கள் வேண்டுவோரையும், பித்ருக்கள் பலிச்சோற்றையும் தொடர்கின்றனர்.

கார்கி, அந்த அழிவற்றதை அறிந்திடாமல், இவ்வுலகில் அவி தருவோன், வேள்வி செய்வோன், ஆயிரம் ஆண்டுகள் தவம் புரிவோனின் செயல்களுக்கு இறுதி இங்கேயே. அந்த அழிவற்றதை அறிந்திடாமல் இவ்வுலகை விட்டுச் செல்பவன் தளைப்பட்டவன். அந்த அழிவற்றதை அறிந்து இவ்வுலகை விட்டுச் செல்வோன், அவனே பிரம்மத்தை அறிந்தவன், பிராமணன்.

கார்கி,  அந்த அழிவற்ற பொருள் காணப்படாதது, ஆனால் காண்பது. கேட்கப் படாதது, ஆனால் கேட்பது. உணரப் படாதது, ஆனால் உணர்வது. அறியப்படாதது, ஆனால் அறிவது. வேறெதுவுமல்ல, அதுவே காண்கிறது. வேறெதுவுமல்ல, அதுவே கேட்கிறது. வேறெதுவுமல்ல, அதுவே உணர்கிறது. வேறெதுவுமல்ல, அதுவே அறிகிறது. அந்த அழிவற்றதில், கார்கி, ஆகாசம் ஊடும் பாவும் போல விரவியுள்ளது.

பிறகு கார்கி வாசக்னவி அமைதியாக அமர்ந்தாள். பெண் எனும் தளையைக் களைந்து ஆடவர் சபையில் மெய்ஞானத் தேடலில், விவாதங்களில் பங்கு பெற்றவள் கார்கி. அம்புகள் போன்ற தொடர் கேள்விகளால் யாஞ்சவல்கியரை துளைக்கும் தைரியமும் தன் ஞானத்தின் மீதான தன்னம்பிக்கையும் கொண்டிருந்தாள். அதே சமையம் உண்மையை ஒப்புக் கொள்ளும் பக்குவமும் அடுத்தவர் வெற்றியை ஏற்று வணங்கும் கம்பீரமும் கொண்டவள். ஞானத்தைப் பற்றிய அவளது கேள்விகளுக்கு பதிலளித்துக்க் கொண்டே வந்த யாஞ்சவல்கியர் ஒரு கட்டத்துக்கு மேல் அவளிடம் ‘வரம்பு மீறி கேள்விகளைக் கேட்க வேண்டாம் கார்கி. இதற்கு மேல் ஒரு கேள்வி கேட்டாயானால் உன் தலை சுக்கு நூறாக உடைந்து விடும்’ என்றார். அதாவது உணர்வால் அறியப்பட வேண்டிய கடவுள் அம்சத்தை (ப்ரம்ம ஞானத்தை) குறித்து அதிகம் கேள்விகள் கேட்டு விவாதப் பொருளாக்கக் கூடாது’ என்ற அர்த்தத்தில் கூறியதை அவள் மிகச் சரியாகப் புரிந்து கொண்டாள்.  அதிலிருந்த நியாயத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டம் செய்யாமல் சபையில் அமைதி காத்தாள்.

தனக்கென ஆசிரமத்தை உருவாக்கிக் கொண்டு அதில் பால் பேதமின்றி ஞானத்தை அனைவருக்கும் கற்பித்தவள் அவள். குறிப்பாக பெண்களுக்கு கல்வியும் ஞானமும் மிக அவசியம் என்பதை வாழும் உதாரணமாகத் திகழ்ந்து, அதையே போதித்து பெண் கல்வியை மேம்படுத்தியவள். தன்னுடைய சிறந்த மாணவியான சுலபையை (மைத்ரேயி) அவளின் விருப்பப்படியே யாஞ்சவல்கியரை மணம் முடிக்க உதவினாள்.

வேதங்களில் சிறந்த இயற்கை தத்துவ ஞானியாக கார்கி போற்றப் பட்டிருக்கிறாள். பிறப்பின் தொடக்கம் பற்றி ‘கார்கி சம்ஹிதை’என்ற நூலை அவள் எழுதியதாகவும், அவளுக்கும் யாக்ஞவல்கியருக்கும் இடையே நடந்த யோகத்தைப் பற்றிய விவாதம் ‘யோகயஜ்னவல்கிய சம்ஹிதை’என்ற பெயரிலும் பதிவாகியுள்ளது. ஜனகரின் அரசவை நவரத்தினங்களில் ஒருவராகவும் மதிக்கப்பட்டவள் கார்கி.

இசைக்கலாம்…

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com