வியாழக்கிழமை 21 பிப்ரவரி 2019

29.  யமி வைவஸ்வதி

By ஹேமா பாலாஜி| Published: 05th December 2018 10:00 AM

 

கை நிறைய வளையல்களை அடுக்கி இருந்தாள் யாமினி. தன் பங்குக்கு முத்துக்களும் பவளங்களும் பதித்த சில வளைகளை தன் தோழியின் கைகளில் மேலும் சூட்டி அழகு பார்த்தாள் யமி.  யமியின் கரிய கைகளில் முத்துக்கள் பளீரென்று ஒளிவீசித் தெரிந்தன. தோழி யாமினியின் மேடிட்ட வயிற்றில் வளையல் நிறைந்த கையை ஆட்டிக் காட்டியவாறே 'பாரடா உன் அம்மாவிற்கு நான்கு ஜதை வளையல்களை அடுக்கி இருக்கிறேன். எல்லாம் உனக்காகத்தான். பால் அருந்தும் நேரம் தவிர என் மடியில் தான் நீ தவழ வேண்டும். பார்த்துக் கொள்' என்று கூறிச் சிரித்தாள்.

'அடேயப்பா, குழந்தைக்கான லஞ்சம் மிகவும் குறைவாக இருக்கிறதே! நான்கு ஜதை வளையலுக்கெல்லாம் என் பிள்ளையை நான் தர மாட்டேன்’ என்றான் யாமினியின் கணவன் வீரகேது.

‘நீங்கள் யார் தருவதற்கு பிறந்தவுடன் நான் தூக்கிக் கொண்டு போய்விடுவேனாக்கும். பிள்ளை வேண்டும் பிள்ளை வேண்டும் என என் பின்னால் அலைய போகிறீர்கள்' என்றாள் யமி.

வளைகாப்பு விழாவிற்கு வந்திருந்த யாமினியின் புதிய உறவினர்கள் யமியை பார்த்து அசூயை கொண்டனர். யார் இந்தப் பெண். தொட்டால் ஒட்டிக் கொள்ளும் கருப்பைக் கூட கண்டிருக்கிறோம் இவளை பார்த்தாலே ஒட்டிக் கொள்ளுவதைப் போல இப்படி கருப்பியாக இருக்கிறாளே’ என்றனர்.

யமி – சூரியனின் புத்திரி. சூரியனுக்கும் சம்க்ஞை என்கிற சஞ்சனாவிற்கும் பிறந்த இரட்டையருள் ஒருவள். இவளின் இரட்டை சகோதரன் யமன் ஆவான். இவர்களுக்கு மூத்தவர் மனு. சூரியனும் சஞ்சனாவும் தனித்திருந்த சமயத்தில் சூரிய வெப்பத்தை தாங்க முடியாத சஞ்சனா கண்களை மூடி உடலை இறுக்கிக் கொண்டு விட்டாள். அதனால் கோபம் அடைந்த சூரியன் இக்கூடலில் தோன்றும் பிள்ளைகள் இறுக்கமான மனதினாகவும் இருள் போன்ற நிறத்தை ஒத்தும் இருக்கக் கடவது என்று சபித்து விட்டான். கலவரமடைந்த சஞ்சனா நம் பிள்ளைகளை நீங்களே சபிப்பது தகுமா என கண்ணீர் விட, சாந்தமடைந்த சூரியன்  கவலை கொள்ள வேண்டாம், நம் பிள்ளை தர்ம நிலையில் சிறந்தவனாகவும் அறம் பிறழாதவனுமாக இருப்பான், பெண் பாவங்களை நீக்கி புண்ணியத்தை தருபவளாக சிறப்பாள்’ என்று கூறிச் சென்றான்.

அதன்படியே இவர்களுக்கு மூத்த மகன் மனு மானிடரை படைத்தான், யமன் இறுகிய மனதினனாக அவர்களின் ஆயுட்காலம் முடிந்ததும் உயிர்களை கவர்ந்தான், யமி இரண்டுக்கும் நடுவிலே  வாழ்வைத் தருபவளாக உயிர்களின் தோழியாக இருக்கிறாள். 

யமியின் தோற்றம் தந்தையின் சாபத்தால் கரிய நிறத்தவளாக இருந்துவிட்டது. இருளுக்கும் அவளுக்கும் வித்தியாசமே இல்லாமல் இருந்தது. தான் தோற்றப் பொலிவற்றவளாக இருந்ததால் அவள் யாருடனும் சேராமல் அதிக நேரத்தை தனிமையிலேயே கழித்தாள். மிகச் சிலரே அவளுக்கு மிக நெருங்கியவர்களாக இருந்தனர். அதில் ஒருவள் தான் யாமினி அவளின் பிள்ளைப் பருவத்துத் தோழி. அவளுக்குத் தான் இப்பூச்சூட்டல் வளைகாப்பு வைபவம் எல்லாம். யமியின் தாய் சஞ்சனாவிற்கு தன் மகளுக்கும் இம்மாதிரி திருமணம் வளைகாப்பு சீமந்தம் என்று நடக்காதா என மிகுந்த ஏக்கம். அவளின் கரிய தோற்றத்தால் அவளை மணக்க யாரும் முன் வரவில்லை. கருப்பாக இருந்தாலும் களையானவள் தான் யமி.

யாமினிக்கு பிரசவ வலி வந்துவிட்டதாக யமி அறிந்தாள். ஷண நேரமும் அவளைப் பிரியாது பிரார்த்தனை செய்தவாறே இருந்தாள். பிள்ளையை பூமியில் விழும் முன் தன் கையில் ஏந்திக் கொள்ள ஆவலாக இருந்தாள். ஏனோ அவள் மனம் தவிப்பு கொண்டிருந்தது. இருப்பு கொள்ளாமல் மனம் அலைபாய்ந்த வண்ணமே இருந்தது. வலியில் துடித்துக் கொண்டிருந்த யாமினி ஒரு வழியாக பிள்ளையை பிரசவித்தாள். அழுது கொண்டும் துடித்துக் கொண்டும் வெளிவரும் பச்சிளம் சிசுவை எதிர்பார்த்துக் காத்திருந்த வைத்திய பெண்மணிகளும் யமியும் மூச்சு பேச்சின்றி கட்டை போல் வெளி விழுந்த மகவைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பிள்ளை இறந்தே பிறந்த செய்தி அறிந்து யாமினி மூர்ச்சித்தவள் தான் இரண்டு நாளாகியும் எழுந்திருக்கவில்லை. பூமியில் விழும் முன் அப்பிஞ்சை தன் கையில் ஏந்தக் காத்திருந்த  யமி கட்டை போல் விழுந்த மகவைக் கண்டவுடன் துக்கம் தாளாது அவ்விடத்திலிருந்து ஓடி வந்தாள். வந்தவள் நேரே தன் தந்தையிடம் அழுது கொண்டே புகார் அளித்தாள். இறப்புக்கு அதிபதியாக இருக்கும் தன் அண்ணன் யமனை உடனே கூப்பிட்டு விசாரிக்கச் சொன்னாள்.

தன் மகளின் துக்கத்தை போக்க ஒரே வழி அவளுக்கு வாழ்வியலையும், கர்ம பலன்களையும் புரிய வைத்து தெளிய வைப்பது தான் என்று அறிந்த சூரியனும் யமனை தன் முன்னே வரச் செய்தான்.

அவனைக் கண்டதும் விம்மிக் கொண்டே 'அண்ணா நீ செய்வது நியாயமா? பூமியில் விழும் முன்னே அப்பிஞ்சுக் குழந்தையின் உயிர் குடிக்க உனக்கு எப்படி மனம் வந்தது. அதுவும் அவள் என் உற்ற சினேகிதி. அவளை விட நானல்லவா அதன் வரவை எதிர் நோக்கி காத்திருந்தேன். ஏன் இப்படி கல் நெஞ்சுக்காரனாக மாறினாய். நோய் வந்தவர்களையும் வயதாகி சாவை எதிர் நோக்கி காத்திருப்பவர்களையும் விட்டு விட்டு பச்சை மண் பூமியை தொடுவதற்கு முன்பே ஏன் அண்ணா உயிரைப் பறித்தாய். அதற்கு அவள் குழந்தை உண்டாகாமலே இருந்திருந்தால் இத்தனை பெரிய துக்கம் இருந்திருக்காதே’ என படபடவென துக்கம் தொண்டையை அடைக்கக் கதறினாள்.

சூரியனும் அவனை நோக்கி 'யமா சொல் உன் தங்கையின் துயரத்துக்கு பதில் சொல்ல நீ கடமை பட்டிருக்கிறாய். ஏன் இவ்வாறு செய்தாய்?’ என்று தன் பங்கு விளையாட்டைத் துவங்கி வைத்தான்.

எல்லாவற்றையும் குறுக்கே ஏதும் பேசாமல் அமைதியாக கேட்டுக் கொண்ட கால தேவன், தந்தையின் உத்தியை புரிந்து கொண்டான். பின் தன் சகோதரியை மென்மையாக நோக்கி 'அன்பு தங்கையே. இதில் என் தவறு ஒன்றுமில்லையம்மா.  ஒவ்வொருவரும் இப்பூமியில் பிறக்கும் போதே தனது கர்மாவையும் சுமந்து தான் வருகிறார்கள். அவர்களின் பாவங்களைக் கழிக்கும் புண்ணிய பூமிதான் இது. அக்குழந்தையின் ஆயுள் தாயின் கருவரைக் காலம் வரை மட்டும் தான். அக்குடும்பத்தினரின் கர்மா இது. இதை மாற்ற இறைவனாலும் இயலாது பெண்ணே’ என்றான்.

‘அதற்காக காலம் முழுதும் இந்த துக்கத்தை அக்குடும்பம் சுமக்க வேண்டுமா? எத்தனை கொடுமை இது? என்றாள்.

'காலத்திற்கு எல்லாவற்றையும் மாற்றக் கூடிய சக்தி இருக்கிறது யமி. இத்துக்கம் காலப்போக்கில் ஆறிவிடும். அடுத்த உயிர் ஜனிக்கும் போது இத்துக்கம் கரைந்து போயிருக்கும். எல்லாவற்றிற்கும் ஒரு கணக்கு இருக்கிறது. அதன்படிதான் காலச் சக்கரம் சுழல்வதும், விதி வழி வாழ்வு நடப்பதும், துக்கங்கள் வருவதும் பின் கடந்து போவதும்.’

'இதைத் தவிர்க்கவோ இதிலிருந்து விடுபடவோ முடியாதா அண்ணா”

'முற்றாக முடியாது. ஆனால் குறைத்துக் கொள்ளவும், அதை எதிர்கொண்டு அதற்கேற்றாற் போல் மனதிடத்தை வளர்த்துக் கொள்ளவும் முடியும். எவ்வாறு வயிற்று வலியால் அவதிப்படுகிறவன் சூரணத்தை சாப்பிட்டு வலியை குறைத்துக் கொள்கிறானோ, காய்ச்சலின் வேகத்தை கட்டுப்படுத்திக் கொள்கிறானோ அதைப் போல. அனுபவிக்கும் கர்மாவின் தீவிரத்தை குறைத்துக் கொள்ள மட்டுமே முடியும், முற்றிலுமாக விடுபட முடியாது சகோதரி’

யமி எதையோ தீவிரமாக யோசித்த படி நின்றிருந்தாள். அவளை அன்புடன் நோக்கிய சூரிய தேவன், யமி இப்போது புரிந்ததா கர்மத்தின் செயல்களும் அதன் பலன்களும். உன் சகோதரன் கால தேவன் உயிர்களை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டாலும் தர்மம் பிறழாதவன். அதனால் தான் அவனை யம தர்மன் என்றும் அழைக்கிறார்கள். ஒருவரின் கர்ம பலன்களுக்கு ஏற்பவே அவரது ஆயுளும், வாழ்க்கையின் நன்மையும் தீமையும் அமையும். அவர்களின் ஆயுள் முடியும் நேரத்தில் தான் உன் தமையன் அவர்களின் உயிரை எடுப்பான்.

ஒருவரின் பாவங்களை தங்கள் வாழ்நாளிலேயே போக்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும் அண்ணா என்றாள் யமி. அவளின் இளகிய மனது தன் தோழி மட்டுமல்லாமல் மனிதராகப் பிறந்த மானுட பிறப்புகள் படும் அல்லல்களுக்காக வருந்தியது. அதிலிருந்து அவர்களை மீட்கும் வழியை நாடியது.

பாவங்களை குறைத்துக் கொள்ள வேண்டும், ஏற்கனவே ஏற்றியிருக்கும் பாவச் சுமைகளை இறக்கி வைக்க வேண்டுமம்மா என்றான்.

'பாவங்களை குறைத்துக்க் கொள்ளலாம் இனி செய்யாமல் எச்சரிக்கையாக நடந்து கொண்டு. ஆனால் ஏற்கனவே சேர்த்து வைத்துள்ள பாவ மூட்டைகளை எவ்வாறு இறக்கி வைப்பது அண்ணா?’

'முடியும். அதற்கு யாரேனும் அவர்களது பாவங்களை தன்னில் கரைத்துக் கொள்ள சித்தமாக இருக்க வேண்டும். நீரும் நெருப்புமே எதையும் தன்னுள் கரைத்துக் கொள்ளவும் எரிக்கும் சக்தியையும் கொண்டுள்ளது. ஓடும் நீராகவோ எரியும் நெருப்பாகவோ இருந்து அவர்களின் பாவங்களை கரைத்தோ எரித்தோ தன்னுள் வாங்கி அவர்களை அத்தளையிலிருந்து விடுவிக்க வேண்டும். ஆனால் சுயநலமிக்க இந்த உலகத்தில் எவர் மற்றவர்களுடைய பாவங்களை தன்னுள் ஏற்றுக் கொள்வார்கள். அதனால் அவரவர் பாவங்களை அவரவர் அனுபவித்தே வாழ்வினை கடக்க வேண்டும்’ என்ற தர்மத்தை எடுத்துரைத்தான் யம தர்மன்.

சற்றும் யோசிக்காத யமி நான் தயாராக இருக்கிறேன் அண்ணா. நான் நதியாக மாறி இப்பூமியில் உள்ள மானுடர்களின் பாவங்களை என்னுள் கரைத்துக் கொண்டு போக்குகிறேன். எனக்கு ஆசி அளி என்றாள்.

கண்கள் விரிய ஆச்சரியத்துடன் யமியை நோக்கிய யமன், 'சகோதரி நன்றாக யோசித்து தான் சொல்கிறாயா. உனக்கென்று ஒரு வாழ்க்கை வேண்டாமா. இள வயது உனக்கு’ என்றான்.

'இக்கருப்பிக்கு பெரிதாக என்ன வாழ்க்கை இருந்திடப் போகிறது அண்ணா. அநேக நேரம் நான் தனிமையில் தான் கழிக்கிறேன். என்னால் மற்றவருக்கு உபகாரம் உண்டென்றால் மகிழ்வோடு செய்யக் காத்திருக்கிறேன். எனக்கு அனுமதியும் உன் ஆசிகளையும் கொடு அண்ணா’ என திட்டவட்டமாகக் கூறினாள்.

அவ்வாறே தன் சகோதரியை சிரத்தில் கை வைத்து ஆசிகள் வழங்கினான் தர்ம தேவன் 'உன் விருப்பம் அதுவென்றால் அவ்வாறே ஆகுக. நீ யமுனை என்ற பெயர் கொண்டு பூவுலகில் நதியாக மாறுவாய். உன்னில் மூழ்கி எழுபவனின் பாவங்கள் குறைக்கப்படும். பகவானின் அவதாரத்தின் போது அவரின் பாதம் பட்டு நீ புனிதமடைவாய். உன்னில் கரைந்த பாவங்கள் உன்னைச் சேராமல் புன்னிய நதியென நீ போற்றப்படுவாய். மற்ற நதிகளும் உன்னுள் சங்கமித்து தங்களது பாவங்களை போக்கிக் கொள்ளும்’ என மன நெகிழ்ச்சியுடன் தங்கையை கட்டித் தழுவி ஆசிகள் வழங்கினான்.

யமியும் யமுனை என்ற பெயர் கொண்டு பூமியில் பிரவாகமாகப் பாய்கிறாள். கறுப்பி என வெறுக்கப்பட்டவள் மனிதர்களின் பாவங்களையும் மன அழுக்குகளையும் போக்கும் புண்ணிய காரியத்தை செய்கிறாள். பாரத பூமியில் நமது பாவங்களை எல்லாம் தான் எடுத்துக்கொண்டு நம்மை பவித்திரப்படுத்தும் புண்ணிய நதியாகினாள் யமி.

ஸ்ரீமத் பாகவதத்தில் யமுனைக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்குமான தொடர்பு மிக அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது. குட்டி கிருஷ்ணன் இருள் நிரம்பிய சிறைச்சாலையில் தீபச்சுடரென பிறந்து விட்டான். அவனை கம்சனிடமிருந்து காக்கும் பொருட்டு வசுதேவர் குழந்தையை கூடையில் வைத்துக் கொண்டு சிறையிலிருந்து வெளியேறி கோகுலம் நோக்கிப் புறப்படும் வழியில் யமுனை குறுக்கிடுகிறாள். அவளுக்கு பகவானை ஸ்பரிசித்து விட வேண்டும் என்ற ஆசை.

நீரில் இறங்குகிறார் வசுதேவர், யமுனையும் பொங்கி பிரவாகம் எடுத்து தன் மட்டத்தை உயர்த்திக் கொண்டே இருக்கிறாள். வசுதேவரின் கழுத்து வரை நீர் மட்டம் உயர்கிறது. நீர்மட்டம் உயர உயர வசுதேவரும் கண்ணன் இருந்த கூடையை உயர்த்தி உயர்த்தி தலைக்கு மேல் கொண்டு சென்றுவிட்டார். இருந்தாலும் யமுனையின் வேகம் குறையவில்லை. இதை அறிந்த பாலகிருஷ்ணன் 'சரி போ உன் ஆசை இது தானே’ என்று தன் குட்டிப் கால்களை கூடைக்கு வெளியே நீட்டுகிறான். யமுனையும் அவன் பிஞ்சு பாதங்களை ஸ்பரிசிக்கிறாள். அளவில்லாத ஆனந்தம் அவளுக்கு. இதுதான் இதே தான் நான் கேட்டது. என் தவம் இதுதான் என் ஆனந்தம் இது என் பிறப்பின் பயன் இதுதான் எனக் கூத்தாடி, சட்டென்று இரண்டாகப் பிரிந்து வசுதேவருக்கு வழி விடுகிறாள்.

அது மட்டுமா கண்ணன் இருக்கும் இடமெல்லாம் அவன் வளரும் இடமெல்லாம் அவனைக் காண தன் பாதையை மாற்றிக் கொண்டே பாய்கிறாள். கண்ணனின் குழந்தை பருவம் முதல் அவனது கிருஷ்ண லீலைகள் அனைத்தும் யமுனையின் கரையிலேயே நடக்கிறது. எல்லாவற்றையும் கண்டு ரசித்து ஆனந்தமடைந்தாளாம் யமுனை. காளிங்க நர்த்தனம் யமுனையில் தான் நடந்தது. அவளே அதை முதலில் காணும் பேறு பெற்றவள் ஆகிறாள்.

யமுனையின் பெருமையைப் பற்றி பத்ம புராணத்தில் ஒரு கதை வருகிறது.  ஒழுக்கத்தில் சிறந்தவர்களும் மிகுந்த அறிவாளிகளுமான இரு சகோதரர்கள் விதி வசத்தால் தங்கள் ஒழுக்கங்களை மீறி தங்கள் நெறியிலிருந்து பிறழ்ந்து விடுகின்றனர். அவர்களின் விதி முடிந்து யமலோகம் செல்கையில், யமன் மூத்தவனுக்கு நரக வாழ்வையும் இளையவனுக்கு சொர்க வாழ்வையும் அளிக்கிறான். இருவரும் சேர்ந்து தானே பாவங்களைச் செய்தோம். தம்பிக்கு மட்டும் எவ்வாறு சொர்க்கம் கிட்டியது என மூத்தவன் கேட்டான். அதற்கு யமன், அவன் தன் கடைசி சில மாதங்களை யமுனைக் கரையில் கழித்தான். அந்நாட்களில் தினமும் அவன் யமுனையில் நீராடினான். அதனால் அவன் பாவங்கள் அனைத்தில் இருந்தும் விடுபட்டுவிட்டான்’ என்று கூறுகிறான்.

தீபாவளி அமாவாசைக்கு அடுத்த இரண்டாம் தினம் யம துவிதியை என்று அழைக்கப்படுகிறது. அன்று யமன் தன் சகோதரியைப் பார்க்க பூலோகம் வருவதாக ஐதீகம்.அன்றைய தினம் தன் சகோதரர்களுக்கு விருந்தளிப்பவருக்கு சகல சௌபாக்கியமும் கிட்டும் என்ற நம்பிக்கை உண்டு.

தன் நலம் கருதாமல் மற்றவர்களின் பாவத்தைப் போக்கவே யமுனை என்ற நதியாகப் புறப்பட்டவள் யமி. வேதத்தில்  இவளே  முதல் பெண்ணாக கருதப்படுகிறாள். யமி கருமை நிறத்துடன் ஆமையை வாகனமாக கொண்டவளாக சித்தரிக்கப்படுகிறாள். கரிய நிறத்தில் ஓடினாலும் யமுனை மக்களின் வாழ்வில் அவர்கள் பாவங்களைப் போக்கி ஒளி வீசச் செய்கிறாள்.

Tags : ஆன்மிகம் epic ancient woman yamini yami யாமினி யாமி பெண் சாமியார்

More from the section

30. சச்சி பௌலோமி
28. கார்கி வாசக்னவி
27. மைத்ரேயி
26. ஜாபாலா
25. திரிசடை