8. ஆர்டிபிஎம்எஸ் இன்றி ஓரணுவும் அசையாது!

ரா உளவு அமைப்பு அதிகாரியாக கமல்ஹாசன் நடித்திருந்த விக்ரம் என்னும் படத்தின் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் பலருக்கு கம்ப்யூட்டர் அறிமுகமானது. படத்தின் திரைக்கதை, வசனத்தை சுஜாதா எழுதியிருந்தார்.

ஆர்டிபிஎம்எஸ் தந்த கொடையில் முக்கியமானது, டேட்டா ஒருங்கிணைப்பு (data integrity). அதென்ன ஒருங்கிணைப்பு? நாம் அளிக்கும் தகவல்களை சீராக்கி, ஓரளவு சரிபார்த்து, அவற்றுக்கு இடையேயான உறவுகளை உறுதிசெய்து, சற்றே மேம்படுத்தி பதிவு செய்துகொள்ளும் நடைமுறைதான் அது. இதனால், டேட்டாபேஸ் சிஸ்டத்தில் டூப்ளிகேட் டேட்டாவுக்கு வாய்ப்பில்லாமல் போனது. ஒவ்வொரு முறை டேட்டாவை அனுப்பும்போதும், அது ஏற்கெனவே இருக்கிறதா என்பதை சரிபார்க்காவிட்டால், தேவையில்லாமல் திரும்பத் திரும்ப பதிவு செய்யவேண்டி இருக்கும். RDBMS வந்த பின்னர், சம்பந்தப்பட்ட டேட்டா ஏற்கெனவே இருக்கிறது என்பதை சொல்லிவிடும். இல்லாவிட்டால், மறுபேச்சு பேசாமல் வாங்கி வைத்துக்கொள்ளும். எந்தவொரு டேபிளாக இருந்தாலும், ஒரே வரிசை (row) மீண்டும் வருவதற்கு வாய்ப்பில்லை. இதைத்தான் entity integrity என்பார்கள்.

அடுத்து, வரம்புகளை விதிக்கும் domain integrity. ஒவ்வொரு பத்தியிலும் (column) குறிப்பிட்ட டேட்டாவை மட்டுமே அனுமதிக்க வேண்டும். எல்லாவற்றையும் அனுமதிக்க முடியாது என்பதை கட் அண்ட் ரைட்டா சொல்லிவிடுவது. உதாரணமாக, வயது என்னும் பத்தியில் இலக்கங்கள் (number) மட்டுமே இருக்க வேண்டும். எழுத்தில் (text) இருக்கவே முடியாது. ஆகவே, இலக்கங்கள் மட்டுமே பெறும்படி சம்பந்தப்பட்ட பத்தி அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.

நாட்களைக் குறிப்பிடும்போது அதற்கே உரிய வடிவத்தில் தந்ததாக வேண்டும். ஆரம்பக் கட்டத்திலேயே டேட்டா ஓரளவு சரிபார்க்கப்படுவதற்கு இந்த வசதிதான் காரணமாக இருக்கிறது. தேதி என்றால் அதில் நாள், மாதம், ஆண்டு இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. சிலர், மாதத்துக்குப் பதிலாக நாளையும், நாளுக்குப் பதிலாக மாதத்தையும் போட்டு குழப்புவார்கள். ஒரு சிலர், திருமண தேதிக்குப் பதிலாக பிறந்த தேதியைக்கூட தந்துவிடுவார்கள்!

அடுத்து, referential integrity. குறிப்பிட்ட டேட்டாவைப் பற்றி வேறு ஏதாவது இடங்களில் சுட்டியிருப்பார்கள். இதனால் ஒட்டுமொத்த வரிசையை (row) நீக்கமுடியாது. நீக்கினால், சம்பந்தப்பட்ட விஷயங்களும் அழிந்துவிடும் என்பதால், நீக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது. உதாரணத்துக்கு பாலினம் என்பது கட்டாயம் கொடுக்கப்பட்டிருக்கும். அதை அடிப்படையாக வைத்து மிஸ்டர் என்றோ, மிஸ் என்றோ வருமாறு புரோக்கிராம் லாஜிக் எழுதியிருப்பார்கள். பாலினம் உள்ள பத்தியை நீக்கும்போது, அதை சார்ந்து மிஸ்டர் / மிஸ் இருப்பதால், நீக்குவதற்கு அனுமதியில்லை. இவை தவிர, user defined integrity என்னும் வகையும் உண்டு. மேற்குறிப்பிட்ட வகைகளில் அடங்காமல் ஒரு சில நிறுவனங்களுக்கென்று கட்டுப்பாடுகள், குறைந்தபட்ச தகுதிகளை சரிபார்க்கலாம். அவையெல்லாம், சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் விதிகள் மற்றும் அதன் நடைமுறைகளைப் பொறுத்தவை.

இத்தகைய ஒருங்கிணைவுகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தி, டேட்டாபேஸை முற்றிலும் எளிமையானதாக உருவாக்குவதுதான் டேட்டாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர்களின் பணி. ஒரே டேட்டா ஒன்றுக்கும் மேற்பட்ட அளவில் குவிக்கப்படுவதைத் தவிர்ப்பதும், சேமிக்கப்படும் டேட்டா குவியலுக்கு இடையே தொடர்பு ஏற்படுத்தி, ஒன்றையொன்று சார்ந்து இருப்பதை உறுதி செய்வதும்தான் இவர்களின் முக்கியமான வேலை. இதை database normalization என்பார்கள். ஒரு சிறந்த டேட்டாபேஸை உருவாக்கிட, நார்மலைசேஷன் தரும் பல்வேறு பரிந்துரைகளை நம்முடைய தேவைக்கேற்ப பயன்டுத்திக்கொள்ள வேண்டும். பெரும்பாலான நிறுவனங்களில் இவை பின்பற்றப்படுவதில்லை. காரணம், டி.பி.ஏ.வுக்கான அதிகாரங்கள் குறைவு. டேட்டாபேஸ் சிஸ்டத்தை எப்படி சிறப்பான முறையில் வடிவமைப்பது? அதன்மூலமாக நேரம், உழைப்பு, சேமிக்கும் இடம் போன்றவற்றை எப்படி சிக்கனமாகக் கையாள்வது? இதெல்லாம் டி.பி.ஏ.வின் வேலை. சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் நிர்வாகத் தலைமை கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அவர்களைப் பொறுத்தவரை டெலிவரிதான் முக்கியமே தவிர, வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமுமில்லை.

சரி, ஒரு சில அடிப்படை கேள்விகளுக்கு வருவோம். எதெல்லாம் RDBMS டேட்டாபேஸ்? கோட் அளித்த 13 விதிகள், SQL, ACID குணாதிசயங்கள்.. இவை மூன்றும் இருக்கிறதா? இருந்தால், அவையெல்லாம் RDBMSதான். கோட் முன்மொழிந்த ரிலேஷனல் டேட்டாஸ் மாடல், எழுபதுகளில் இறுதியில் மிகப்பிரபலமாகியது. சைபேஸ், மைக்ரோசாப்ட் எஸ்கியூல் சர்வர், இன்போர்மிஸ், மைஎஸ்கியூல், டிபி2 என ஏராளமான டேட்டாபேஸ் சிஸ்டம் அறிமுகம் செய்யப்பட்டன. இவையெல்லாம் அடிப்படையில் கோட் முன்வைத்த மூன்று விஷயங்களைப் பின்பற்றின. ஆனால், செயல்படும் விதம், வேகம், திறன் போன்றவற்றில் வேறுபட்டிருந்த காரணத்தால் வெவ்வேறு காரணங்களுக்காக பயன்படுத்தப்பட்டன.

எண்பதுகளில் RDBMS டேட்டாபேஸ், தொழில்நுட்பத்தில் உச்சியில் இருந்தது. அப்போதெல்லாம் ஆர்டிபிஎம்எஸ் இன்றி ஓரணுவும் அசையாது! அடுத்த உச்சத்தையும் அதுதான் ஆரம்பித்து வைத்தது. கிளையண்ட் சர்வர் கம்ப்யூட்டிங் என்னும் தொழில்நுட்பம், டேட்டாபேஸ் மாடல்களை அடுத்தகட்டத்துக்கு எடுத்துச் சென்றது. ஐபிஎம் & மைக்ரோசாப்ட் நிறுவனங்களுக்கு இடையேயான போட்டிதான், கிளையண்ட் சர்வர் தொழில்நுட்பம் வேகமெடுக்கக் காரணமாக இருந்தது என்பதை மறுக்க முடியாது.

மினி கம்ப்யூட்டர் என்பார்கள். குட்டி மெயின்பிரேம் கம்ப்யூட்டர்தான் அது. பச்சை கலர் டெர்மினல் கண்ணை சிமிட்டியது என்று சுஜாதா தன்னுடைய கதைகளில் நிறைய எழுதியிருப்பார். ரா உளவு அமைப்பு அதிகாரியாக கமல்ஹாசன் நடித்திருந்த விக்ரம் என்னும் படத்தின் மூலமாகத்தான் தமிழ்நாட்டில் பலருக்கு கம்ப்யூட்டர் அறிமுகமானது. படத்தின் திரைக்கதை, வசனத்தை சுஜாதா எழுதியிருந்தார். கமலுடன் சலாமியா தேசத்துக்கு வரும் சயின்டிஸ்ட் லிஸி, கம்ப்யூட்டர் இன்ஜினீயராகவும் இருப்பார். லிஸி வரும் பல காட்சிகளில் மெகா சைஸ் கம்ப்யூட்டர் இடம்பெறும்.

மினி கம்ப்யூட்டர் என்பது ஐபிஎம் வெளியிட்ட பிசி மாடல். பச்சை அல்லது கருப்பு திரை வழியாக மட்டுமே கம்ப்யூட்டருடன் தொடர்புகொள்ள முடியும். அந்த நேரத்தில், வரைகலை வடிவமான கிராஃபிக்கல் யூஸர் இண்டர்ஃபேஸில் (GUI) மைக்ரோசாப்ட், அத்துறையில் ஏராளமான விஷயங்களைச் சாதித்திருந்தது. கிளையண்ட் சர்வர் மாடல் மைக்ரோசாப்டுக்கும், ஐபிஎம்முக்கும் கைகொடுத்தது.

மைக்ரோசாப்ட் விண்டோஸ், முகப்பு கம்ப்யூட்டராக இருக்கும். இதில் பிரசெண்டேஷன் லாஜிக், கோடு அனைத்தும் இருக்கும். அதாவது செயல்முறைகள் (stored procedures) அனைத்தும் மைக்ரோசாப்ட் வசமிருக்கும். தேவைப்பட்டால் மட்டும் டேட்டாபேஸை தொடர்புகொள்ளும். ஐபிஎம் டேட்டாபேஸ் தனியாக வைக்கப்பட்டிருக்கும். அங்கேயும் சில செயல்முறைகள் இயங்கிக்கொண்டிருக்கும். அவை டேட்டாபேஸ் சிஸ்டத்துக்கு மட்டும் உரியவை. சுருக்கமாகச் சொன்னால், மைக்ரோசாப்டை ஐபிஎம் சார்ந்திருக்காது. ஆனால், ஐபிஎம்மை மைக்ரோசாப்ட் சார்ந்து இருக்கும்.

ஒரு வங்கியின் வாடிக்கையாளர் கணக்கில் வரவு, பற்று, கடன் நிலுவை போன்ற அடிப்படை விஷயங்கள் மட்டும் ஐபிஎம் டேட்டாபேஸில் இருக்கும். இனி எத்தனை மாதங்களுக்கு கடன் நிலுவையில் இருக்கும், எவ்வளவு தொகை கட்டப்பட வேண்டும், கட்டாவிட்டால் அபராதம் எவ்வளவு, குறைந்தபட்ச கட்டணமாக எவ்வளவு செலுத்த வேண்டும் என்பதையெல்லாம் மைக்ரோசாப்ட் விண்டோஸ் கணக்கிட்டு வாடிக்கையாளர்களுக்குச் சொல்லிவிடும்.

காலப்போக்கில், வங்கிகளுக்கு வாடிக்கையாளர்கள் அதிகமானார்கள். பணப் பரிவர்த்தனைகளும் அதிகமாயின. இவற்றையெல்லாம் தங்கு தடையில்லாமல் செய்துமுடிக்க கிளையண்ட் சர்வர் தொழில்நுட்பதான் பெரிய அளவில் கைகொடுத்தது. SQL மூலமாக ஐபிஎம் டேட்டாபேஸில் இருந்த டேட்டாவை எடுத்து, தன்னுடைய மைக்ரோசாப்ட் இயங்குதளத்தில் செயல்முறைகளை இயக்குவது வழக்கமாகியது. மில்லினியம் பிறப்பதற்கு முன்பு வந்த மிகப்பெரிய தொழில்நுட்பமாக, கிளையண்ட் சர்வர் தொழில்நுட்பத்தைக் குறிப்பிடலாம்.

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com