பாரதம் எனும் நான்….

1960-களில் ஒரு சம்பவம். அவர் ஒரு துடிப்பான காந்தியவாதி. அவரது வழக்கம் போலவே ரயிலில் மூன்றாவது வகுப்பில் சென்றுகொண்டிருக்கிறார். அந்தப் பெட்டியில் நல்ல கூட்டம். அவரைச் சுற்றி குழுவாக ஒரு பத்துப் பன்னிர


 
1960-களில் ஒரு சம்பவம். அவர் ஒரு துடிப்பான காந்தியவாதி. அவரது வழக்கம் போலவே ரயிலில் மூன்றாவது வகுப்பில் சென்றுகொண்டிருக்கிறார். அந்தப் பெட்டியில் நல்ல கூட்டம். அவரைச் சுற்றி குழுவாக ஒரு பத்துப் பன்னிரெண்டு பேர் அமர்ந்திருக்கிறார்கள். வடஇந்திய கிராமத்து மக்கள்.
 


‘எங்கே சென்றுவருகிறீர்கள்?’
‘லக்னௌவைச் சுற்றிப் பல்வேறு கிராமங்களிலிருந்து வருகிறோம். ராமேஸ்வரம் கன்யாகுமரி என தென்னிந்திய தீர்த்தயாத்திரை’
‘முதன்முதலாக தென்னிந்தியா வருகிறீர்கள் இல்லையா?’
‘ஆமாம்’
‘மெட்ராஸ்பட்டினம் பார்த்தீர்களா’
‘இல்லைங்க’
‘பெங்களூர் - நந்தவனங்களின் நகரம்?’
‘இல்லைங்க. நாங்க தீர்த்தயாத்திரை வந்தோம். ராமேஸ்வரத்துல சிவனையும் கன்யாகுமரியில சக்தியையும் கும்பிட்டுட்டு போறோங்க. அப்படியே காசி, ஹரித்துவாரெல்லாம் போயிட்டு கிராமத்துக்குப் போயிடுவோம்’
‘ஹரித்துவாருக்குன்னா டெல்லி வழியாத்தானே போவீங்க?’
‘ஆமாங்க’
‘டெல்லியில் இறங்குவீங்களா? நம்ம சுதந்தர இந்தியாவோட தலைநகரில்லையா?’
‘டெல்லியில் டிரெயின் மாறுவோம். ஆனா சுத்தியெல்லாம் பாக்கிறதில்லீங்க. நேரே ஹரித்துவார்தான்’
‘சரி நீங்களெல்லாம் ஒரே சாதியா?’
‘இல்லீங்க வெவ்வேறு சாதி. ஆனா, ஒரே கிராமம். தீர்த்தயாத்திரை போறப்ப சாதி கிடையாதுங்க’
*
நம் காந்திய இளைஞருக்கு ஒரு விஷயம் புலப்படுகிறது. அவர் வாழ்கிற இந்தியாவைத் தாண்டிய ஒரு பாரதம் இருக்கிறது. இதை உணர்கிறார் அவர். அவர்தான் தரம்பால். இந்திய வரலாற்றில் நாம் மறந்துவிட்ட, காலனியத்தால் மறைக்கப்பட்ட பரிமாணங்களை நமக்குத் தேடி எடுத்துக் கொடுத்த மாற்று வரலாற்றாசிரியர். ஆராய்ச்சியாளர்.  இந்த மூன்றாம் வகுப்பு ரயில் பயணத்தில் அந்த தீர்த்த யாத்திரீகர்களிடம் அவர் நடத்திய ஐந்து மணி நேர உரையாடலில், அவர் உண்மையான பாரதத்தை தரிசனம் செய்தார்.


அந்தப் பாரதம் உயிர்த்துடிப்புடன் பிரம்மாண்டமான ஒரு இயக்கம். இந்தியாவை யார் ஆண்டாலும் இந்தப் பாரதம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அதன் இயக்கத்துக்குப் பாதிப்பு ஏற்படும்போது இந்தியாவை ஆள்பவர் யாராக இருந்தாலும், அந்த ஆட்சியை அது தூக்கியெறியும் வலு கொண்டது.  இந்தத் தேசத்தின் ஒவ்வொரு உண்மையான விடுதலை இயக்கமும், இயக்கத் தலைவரும் அது குரு கோவிந்த் சிங்கோ, சத்ரபதி சிவாஜியோ, 1857 எழுச்சியோ, மகாத்மா காந்தியோ இந்தப் பாரதத்தின் சக்தியைத்தான் பயன்படுத்தினர்.
உலகமெங்கும் பண்பாடுகளும் சமயங்களும் புனித யாத்திரைகளை உருவாக்கியுள்ளன. மெக்காவுக்கு, ஜெருசலேமுக்கு, வாட்டிகனுக்கு எனப் புனித யாத்திரைகள் உள்ளன. இஸ்லாமில் ஹஜ் புனிதக் கடமைகளில் ஒன்று. பாரதப் பண்பாட்டிலோ, தீர்த்த யாத்திரைகள் எனும் கோட்பாடு இன்னும் ஆழமாக்கப்பட்டு பரந்துபட்டு உள்ளது.  அது ஒரு வரலாற்று உயிர்சக்தியின் இயக்கம். தீர்த்த யாத்திரைகளால் உருவாகிய தேசம் இது. சேரன் செங்குட்டுவன், சோழ தேச பத்தினித் தெய்வத்துக்கு சிலை செய்ய இமயத்தின் கல்லை எடுத்து வந்தான். சரயு நதிக் கரை இளவரசனான ராமனோ, தென்னிந்திய கிழக்குக் கடற்கரையின் ராமேஸ்வரத்து மண்ணை எடுத்து இமயம் உறை சிவனுக்கு லிங்கம் செய்தான்.


 
ஒவ்வொரு ஆடிப்பெருக்கின்போதும், எப்படி அண்டை மாநில மக்கள் இணைந்து காவிரி அன்னையை வழிபடுகிறார்கள் எனும் புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகும். எந்த மக்கள் அரசியல்வாதிகளால் தூண்டப்பட்டு காவிரி நீருக்காக வன்முறைகளில் ஈடுபட்டார்களோ, அதே மக்கள் அதே காவிரி அன்னையை இணைந்து வழிபடுகிறார்கள். நம் அரசியல் ஏற்படுத்தும் பிளவுகளைத் தாண்டி பாரதப் பண்பாடு மக்களைப் பிணைக்கிறது.
 


விடுதலை வீரர் சாவர்க்கருக்கும், மகாத்மா காந்திக்கும் பல கோட்பாடுகளில் ஒற்றுமை கிடையாது. முன்னவர், ஆயுதப் புரட்சியை நம்பியவர். காந்தியோ, அகிம்சா மூர்த்தி. ஆனால், ஒரு விஷயத்தில் இருவருமே ஒன்றாக இருந்தார்கள். அது, பாரதத்தின் பண்பாட்டு ஒற்றுமை. பாரதமென்பது ‘ஒப்பந்த நாடல்ல. அது உயிர்த் துடிப்புள்ள ஒரு தேசம்’ என்கிறார் சாவர்க்கர். மகாத்மா காந்தி அவரது புகழ்பெற்ற கொள்கைப் பிரகடன நூலான ‘ஹிந்த் ஸ்வராஜ்’-ல் கூறுகிறார் -
 
நாம் ஒரே தேசிய சமுதாயமாக இருந்ததனால், நமக்குள் வேறுபாடுகளே இருக்கவில்லை என்று சொல்ல நான் விரும்பவில்லை. ஆனால், நம் பெரியவர்கள், கால்நடையாகவோ மாட்டு வண்டிகளிலோ இந்தியா முழுவதும் தீர்த்த யாத்திரை செய்திருக்கிறார்கள்.  ஒருவர் மொழியை இன்னொருவர் கற்றுக்கொண்டார்கள். அவர்களுக்குள் வேறுபாடு என்பது இல்லை. தெற்கில் சேது பந்தமும் (ராமேஸ்வரமும்), கிழக்கு திசையில் ஜகந்நாத க்ஷேத்திரமும், வடக்கில் ஹரித்துவாரமும் யாத்திரைத் தலங்களாக அமைப்பதற்கு முன்யோசனையுடன் கூடிய நம் முன்னோர்களுக்கு நோக்கம் எதுவாக இருந்திருக்கும் என நினைக்கிறீர்கள்? அவர்கள் முட்டாள்களல்ல என்பதை நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள். கடவுளை வழிபடுபவர்கள் வீட்டில் இருந்தபடியே வழிபட்டுக்கொள்ளலாம் என்பதை அவர்கள் அறிவார்கள். …இந்தியாவைப் பிரிக்கமுடியாத ஒரே நிலப்பரப்பாக இயற்கை அமைத்திருக்கிறது என்பதையும் அவர்கள் கண்டார்கள். எனவே, இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் புண்ணிய க்ஷேத்திரங்களை அமைத்தார்கள். இதன்மூலம், உலகின் வேறெங்கும் கண்டிராத வகையில் ஒன்றுபட்ட தேசிய உணர்ச்சியை மக்கள் உள்ளங்களில் எழுப்பினார்கள்.


காந்திஜியுடன் கடுமையாக முரண்பட்டவர் பாபா சாகேப் அம்பேத்கர். ஆனால், பாரதத்தின் பண்பாட்டு ஒற்றுமை என்பதை பேசும்போது, வியக்கத்தக்க வகையில் இருவர் மொழியும் ஒன்றாகிவிடுகிறது. இருவர் இதயங்களும் ஒரே லயத்துடன் ஒற்றை அலைவரிசையில் பேசுகின்றன. இது பாபா சாகேப் அம்பேத்கரின் வார்த்தைகள் -
 
இனரீதியாக மக்கள் பல்வேறுபட்டவர்கள். ஆனால், பண்பாட்டு ஒற்றுமையே ஒருமையின் அடித்தளம். இப்பார்வையில் நோக்கும்போது நான் சொல்வேன் - இந்திய தீபகற்பத்துக்கு இணையாகப் பண்பாட்டு ஒற்றுமை கொண்ட பிறிதொரு நாடு இல்லைவே இல்லை.  இந்தத் தேசத்துக்கு நிலவியல் அடிப்படையிலான ஒற்றுமை மட்டுமல்ல, அதற்கு மேலாகவும் அதைவிட ஆழமாகவும் ஒரு அடிப்படை ஒற்றுமை இருக்கிறது. ஐயத்துக்கு இடமில்லாத பண்பாட்டு ஒற்றுமை இந்தத் தேசத்தை அதன் ஒரு முனையிலிருந்து மறுமுனைவரை இணைக்கிறது.
பாரதத்தில் பல்வேறு சமயக் கோட்பாட்டாளர்கள் வாழ்கின்றனர். பாரத மண்ணில் முகிழ்த்த சமயங்கள் பல. ஆனால், அவை அனைத்துமே இந்த மண்ணை புண்ணிய பூமியாகவும், எந்தையர் பூமியாகவும் கருதின. சக்தியை வணங்கும் சாக்தர், பாரதமெங்கும் சக்தி பீடங்களை கண்டடைந்து, அவற்றை தீர்த்த யாத்திரை தலங்களாக்கினர். அஸாமில் காமாட்டியாவும் பாரத முடிவில் கன்யாகுமரியும் சக்தி தலங்களே.  அதைப்போலவே, பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள். சிவ நேசர்களுக்குப் பாரதத்தை இணைக்கும் மையங்களாகின்றன. வைணவர்களின் தீர்த்த யாத்திரை தலங்களும் பாரதத்தை இணைக்கும் ஆன்மிக நரம்புகளின் கேந்திரங்களாகின்றன.


 
வடகிழக்காகட்டும், காஷ்மீராகட்டும், இந்த மண்ணின் பிரதேசங்கள் அனைத்துமே இப்பண்பாட்டு ஒற்றுமையை உள்ளார்ந்து உணர்ந்தவையே. அந்தப் பண்பாட்டு ஒற்றுமை மறக்கப்பட்ட காரணத்தினாலேயே, இன்று நாம் காணும் பிரிவினைவாதப் போக்குகள் தலைதூக்குகின்றன. பல நேரங்களில், நம் அரசியல்வாதிகளின் குறுகிய வாக்குவங்கி அரசியலே இந்த ஒற்றுமையைச் சீண்டிப்பார்த்து, நம்மை நமக்கே வலிமையிழக்க வைக்கிறது. தாம் அமர்ந்திருக்கும் மரக்கிளையை தானே வெட்டும் ‘புத்திசாலித்தனம்’ இது.


காஷ்மீரை எடுத்துக்கொள்வோம். காஷ்மீர் பிரிவினைவாதிகள் ‘காஷ்மீரியாத்’ என்கிறார்கள். அதென்ன காஷ்மீரியாத்? காஷ்மீர் என்பதே கச்சிய க்ஷேத்திரம் என்பதன் மருவுதான். அங்கே செழித்து வளர்ந்த பண்பாடு, நமக்கு அபிநவ குப்தரை அளித்தது. பாரதமெங்கும் பாரம்பரிய கலைவடிவங்களின் அடிப்படையாக அமையும் கோட்பாடுகள் நமக்கு காஷ்மீரத்திலிருந்து வந்தவையே. 13-ம் நூற்றாண்டு சாசனம் ஒன்று, தமிழ்நாட்டு திருத்தலமான திருவானைக்கா கோவிலில் கிடைத்துள்ளது -


வீர சோமேஸ்வரதேவர்க்கு யாண்டு 21-வது… அபர பக்ஷத்து தசமியும் செவ்வாய் கிழமையும் பெற்ற சதயத்து நாள் காஷ்மீர தேசத்து சௌபாண யது வம்சத்து ஜாஜாலதேவன் பார்யை இவனையே முதுகண்ணாக உடைய ஜாகல தேவிக்கு… திருவானைக்கா திருப்பதித் திருநாவலூர் நம்பியேன் நில விலை பிரமாண இசைவு திட்டு புன்செய் நிலம் அறுநூறு குழிக்கு அதனோடு நற்காசு 3000…
 
ஹொய்சால அரசன் வீர சோமேஸ்வரன் ஆண்ட காலத்தில், காஷ்மீரத்தில் இருந்து ஒரு பெண் தமிழ்நாட்டில் திருவானைக்கா வந்து சிவன் கோவிலுக்கு தானம் செய்திருக்கிறாள். இன்று காஷ்மீர் செல்வது என்பது ஒரு ஆபத்தான பயணம். ஆனால், இன்றைக்கும் காஷ்மீர் செல்ல மக்கள் முன்வருகிறார்கள். பயங்கரவாதிகளும் அரசியல் காழ்ப்புணர்ச்சிகளும் இல்லாத காஷ்மீர்வாசிகள் அவர்களுக்கு உதவுகிறார்கள் – ஆத்மலிங்கமான அமர்நாத லிங்கத்தை தரிசிக்க அவர்கள் வருகிறார்கள்.
ஆடி அமாவாசையில் இணையும் அண்டை மாநிலங்களும் அமர்நாத் தீர்த்த யாத்திரையும், நம் தேசப் பிரச்னைகளைத் தீர்க்க நமக்கிருக்கும் பண்பாட்டுப் பாரத வழிமுறைகள். அவற்றை நாம் சென்றடைய வேண்டும்.
அதற்கு மற்றொரு பிரம்மாண்டமான தரிசனத்தையும் நம் பண்பாடு நமக்கு அளித்துள்ளது.


சித்தர்களின் பாடல்களின் வரிகள் ஆத்திரமானவையாகத் தோற்றமளிக்கும். அவற்றில் ஒரு சீற்றம் இருக்கும். ஆனால், அவற்றில் பொதிந்திருக்கும் பொருட்கள் பல தளங்களில் பரிணமிக்க வல்லவை. கோவில் குளங்களுக்கு போகிறாயா? ஏன் போகிறாய்? அவையெல்லாம் உன் அகத்தில் இருக்கின்றன என்கிறார் ஒரு சித்தர். இது புரியாமல் அலைகிறாயா மடையா என்கிறார்.
’கோவிலாவதேதடா குளங்களாவதேதடா,
கோவிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே’
என சொல்கிற சித்தர் வாக்கியம், நம்மவர் பலருக்கு, சித்தர்கள் தீர்த்த யாத்திரைக்கு எதிரானவர்கள் எனும் எண்ணத்தை உருவாக்கிவிட்டது. சிந்தித்துப் பார்த்தால், இதுவும் ஒரு பொதுவான பாரத சிந்தனை மரபு என்பது புரியும்.
 
சுக்ல யஜுர் வேதத்தைச் சார்ந்தது ஜாபாலோபநிஷத்து. அது வாரணாசியை விளக்குகிறது -
அந்த ‘வரணா’ எது, அந்த ‘நாசி’ எது என்றால், இந்திரியங்களெல்லாம் செய்யும் பாவங்களை (வாரயதி) தடுக்கிறது என்பதால், அது ‘வரணா’ ஆகிறது. நாசம் செய்வதால் அது ‘நாசி’ ஆகிறது. அதனுடைய ஸ்தானம் எதுவென்றால், புருவங்களும் நாசியும் கூடும் இடம் எதுவோ அது.


இதனை, ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் அறிஞர் ‘அண்ணா’ விளக்குகிறார் -
விசுவநாதன் உறையும் காசிக்ஷேத்திரம், வாராணஸீ என்றும் அவிமுக்தம் என்றும் கூறப்படும். அது எல்லாப் பாவங்களையும் போக்கும் க்ஷேத்திரம். அது நமது புருவ மத்தியில் உள்ளதாக அறிந்து தியானிக்க வேண்டும். அதுதான் ஞானிகளின் ஸந்தியாவந்தனம்.


சிதம்பர தல புராணத்திலும் இதேபோல நம் தேசத்தின் நில வரைவியல் நம் உடலின் ஆன்மிக இயக்கத்துடன் இணைக்கப்படுகிறது. நம் உடலில் இடகலை, பிங்கலை சுழுமுனை ஆகிய நாடிகள் முதன்மையானவை. இவை யோக தந்திர சாத்திரங்களில் முக்கியமாகப் பேசப்படுபவை. இமயத்துடன் பிங்கலை நாடியும், இலங்கைக்கு நேராக இடகலையும்,  சுழுமுனை சிதம்பரத்துடனும் இணைக்கப்படுகின்றன. அதைப்போலவே, மானுடர் மூச்சு விடுவதை நம் பாரம்பரிய நோக்கில் ஒரு நாளைக்கு 21,600 முறை நடப்பதாகக் கருதினர். இவை 600 முறை மூலாதாரத்தில் நிலைபெறும் கணபதிக்கும், 6000 முறை சுவாதிஷ்டானத்தில் நிலைபெறும் பிரம்மனுக்கும், 6000 முறை மணிபூரகத்தில் நிலைபெறும் விஷ்ணுவுக்கும், 6000 முறை அனாகதத்தில் நிலைபெறும் ருத்ரனுக்கும், 1000 முறை விசுத்தியில் ஜீவாத்மாவுக்கும், 1000 முறை ஆக்ஞா சக்கரத்தில் பரமாத்மாவுக்கும். பின்னர் 1000 முறை சகஸ்ராரத்தில் விளங்கும் குருவாகிய சிவபெருமானுக்கும் எனக் கூறுகின்றனர். சிதம்பரத்தின் கூரையும் 21,600 பொன் ஓடுகளால் வேயப்பட்டதாகும்.
 
இவையெல்லாம் நவீன அறிவியலின்படி சரியா தவறா என்பதல்ல விஷயம். இவ்வாறு தனிமனித உடலியக்கத்துக்கும் ஆன்மிக இயக்கத்துக்கும், பாரதத்தின் திருத்தலங்களுக்கும் தொடர்ந்து ஒரு பிணைப்பை நம் பண்பாடு உருவாக்கிக்கொண்டே இருந்திருக்கிறது. பாரதமெங்கும் தீர்த்த யாத்திரை செல்லும் ஒருவர், தன்னுடலில் தன் அகத்திலும் சஞ்சாரிக்கிறார். பாரதத்தை தன் உடலாக உடலுள் உள்ள அக இயக்கங்களாக உணர்கிறார்.
சரி, இப்படி எல்லாம் நம்முள்ளே என இருந்தால், அது எல்லாவித உலகத் தொடர்பையும் அறுத்துவிடாதா? இல்லை என்பதற்கு, நம்முன் பிரத்யட்ச உதாரண வாழ்க்கைகள் பல உண்டு.


உலகப்பற்று அனைத்தையும் விட்டு துறவியானவர் தாயுமானவ சுவாமிகள். ராமேஸ்வரம் குறித்து இந்திய அகழ்வாராய்ச்சித் துறை வெளியிட்ட நூல் ஒரு சுவாரசியமான விஷயத்தைக் குறிப்பிடுகிறது. அந்நியப் படையெடுப்பால் ராமேஸ்வரம் கோவிலும் தீர்த்த யாத்திரை தலங்களும் ஆபத்துக்குள்ளானபோது, துறவியாகத் திகழ்ந்த தாயுமானவ சுவாமிகள், மதுரை நாயக்க மன்னரிடம் ராமேஸ்வரத்தைக் காப்பாற்ற படைகளை அனுப்புமாறு சொன்னது மட்டுமல்ல, ஒரு படைப் பிரிவுக்குத் தாமே தலைமை தாங்கிச் சென்றார். ராமேஸ்வரம் காப்பாற்றப்பட்டது. தன்னில் தன்னை உணர்ந்து அந்நியமின்மையில் லயித்திருந்த மகானான தாயுமானவர், தேசத்தின் மீதான ஆக்கிரமிப்பை தம் மீதே ஏற்பட்ட ஆக்கிரமிப்பென உணர்ந்திருக்கிறார்.
 
மற்றொருவர், சுவாமி ராமதீர்த்தர்.
பாரத தேசத்தையே தானாக உணர்ந்தவர் அவர். அப்பேருணர்தல் மூலம் அபரிமிதமான அன்பை வெளிப்படுத்திய மகான். பாரதமெங்கும் வலம் வந்து மக்களுக்குப் புத்துணர்ச்சி ஊட்டினார். அதேபோல, தீர்த்த யாத்திரை செய்து பாரதத்தைத் தன்னில் உணர்ந்த மற்றொரு மகானான சுவாமி விவேகானந்தரிடம் அவருக்கு ஏற்பட்ட சந்திப்பு,  கல்லூரி ஆசிரியராக இருந்த இவரை தேசபக்தியில் கரையவைத்தது.


1897-ல், சுவாமி விவேகானந்தர் பஞ்சாபில் உரையாற்றினார். தீர்த்தராம் எனும் பூர்வாசிரம பெயர் கொண்ட சுவாமி ராமதீர்த்தர், லாகூரை விட்டு விவேகானந்தர் செல்லும்போது பாதங்களில் வீழ்ந்து வணங்கி, ஒரு தங்கக் கடிகாரத்தை அளித்து, ‘இந்த எளிய பரிசை ஏற்றுக்கொள்ளுங்கள்’ என்றார். சுவாமி விவேகானந்தர் அவருக்குக் கூறிய பதில் - “இந்தத் தங்கக் கடிகாரத்தை யாரால் மறுக்க இயலும். எனவே, நான் ஏற்றுக்கொள்கிறேன். நீ இதை உனது பையிலேயே வைத்திரு. அதை நான்தான் உபயோகப்படுத்தப்போகிறேன். ஏனெனில், நீயும் நானும் வேறல்ல. நீயும் நானும் ஒரே திருப்பணியைத்தான் செய்துகொண்டிருக்கிறோம்”.


1899-ல், ராமதீர்த்தர் பாரதமெங்கும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார். பின்னர் அவர் எழுதினார் -
 
நான் முழுமையான சம்பூர்ண பாரதமாக என்னை உணர்கிறேன். பாரதம் முழுமையுமே என் உடல். குமரி என் பாதம். ஹிமாலயம் என் சிரசு. என் தலைமுடிகளோ கங்கை.  என் சிரசிலிருந்தே பிரம்மபுத்திராவும் சிந்துவும் உற்பத்தி ஆகின்றன. என் கௌபீனமாக விந்திய மலைத்தொடர். சோழ மண்டலக் கடற்கரை என் வலது கால். மலையாளக் கடற்கரை என் இடது கால். நான் சம்பூர்ண பாரதம். அதன் கிழக்கும் மேற்கும் என் கரங்கள். அவற்றை நீட்டி நான் மானுடம் அனைத்தையும் அணைத்துக்கொள்கிறேன். என் அன்பு பிரபஞ்சம் முழுவதையும் அணைக்கிறது. ஓ, என் உடலாக பாரதமே உள்ளது. அப்போது என் பார்வை முடிவிலி வெளி அனைத்தையும் ஊடுருவுகிறது. என் ஆத்மா அனைத்து ஆத்மாக்களுமாகத் திகழ்கிறது. நான் நடக்கையில் இந்தியாவே நடப்பதை உணர்கிறேன். நான் பேசும்போது பாரதமே பேசுகிறது. நான் சுவாசிக்கையில் பாரதமே சுவாசிக்கிறது. நான் பாரதம். நான் சங்கரன். நான் சிவன். என் தேசபக்தியின் அதிஉச்ச அனுபவம் இதுவே. இதுவே செயல்முறை வேதாந்தம்.  … கிறிஸ்தவர்கள், ஆரியசமாஜிகள், சீக்கியர்கள், பார்ஸிகள், முகமதியர்கள் அனைவருமே, எவருடைய ஊனும் உடலும் எலும்பும் நரம்பும் பாரதத்தின் தானியங்களால் உயிரூட்டமுற்றதோ அவரனைவரும் என் சொந்த சகோதரர். என் இஷ்ட தெய்வமான பாரத தேசத்தின் உப்பு நீங்கள். நான் அனைவரையும் அணைக்கிறேன். எவரையும் மறுக்கிலேன். பூமியெங்கும் அன்பையே பிரவாகிப்பேன். அன்பால் உலகை குளிர்விப்பேன். என்னை எதிர்ப்பவர் எவரையும் என் முழு இதயத்துடன் வரவேற்பேன். ஏனெனில், நான் அன்பையே பிரவாகிப்பவன். அனைத்து சமுதாயங்களும் என் சமுதாயங்கள். அன்பின் பெருவெள்ளம் என்னிலிருந்து வெளிப்படும்போது, அனைத்து சமுதாயங்களும் என் சமுதாயங்கள். அனைத்து சக்தியும் - பெரிதோ சிறிதோ என்னுடையது. ஆஹா! நான் அன்பை பிரவாகிக்கிறேன்.
பாரதம் தீர்த்த யாத்திரைகளால் உருவாகிய தேசம் மட்டுமல்ல. ஒவ்வொரு பாரதவாசியும் அவரவர் தேகத்திலேயே தேசத்தை உணர்ந்து அனுபவிப்பதே, இந்தத் தேசத்தில் பிறந்த ஒவ்வொருவருடைய லட்சியமும். அது உருவாக்கும் அன்பு, சாதி மதங்களை ஏன் தேச எல்லைகளையும் கடந்து உலகை அழிவுகள் அற்றதாக்கும். இன்று நாம் காணும் பிரிவினை வெறுப்பு அனைத்துக்குமான மருந்து இதிலேயே உள்ளது. இதில் மட்டுமே உள்ளது.
அனைவருக்கும் 70-வது சுதந்தர தின நல்வாழ்த்துகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com