23. மிகையுலகம்

பார்க்கவே ரொம்ப கஷ்டமாக உள்ளது. ஒருவகையான ரகசிய, உளவியல் ரீதியான பாலியல் வன்முறையை இவ்வகை விளம்பரங்கள் செய்கின்றன. சமூக அக்கறை உள்ளவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டிய விஷயம் இது.
23. மிகையுலகம்

தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் எல்லா நடிக, நடிகையருடனும் சேர்ந்து நம்ம சரவணா ஸ்டோர்ஸ் சின்ன அண்ணாச்சி ஆடிப்பாடி மகிழ்ந்தார். ‘‘கோடான கோடி டிசைன்களில் தங்க நகைகள்’’ என்று ஒரு விளம்பரத்தில் கூறுகிறார். ‘கோடான கோடி’ என்றால் தமிழில் என்ன பொருள் என்று அவருக்குத் தெரியுமா என்று எனக்குத் தெரியவில்லை. சரவணா ஸ்டோரில் கிடைக்கும் நகைகளின் பெருமைகளைப் பற்றி நடிகைகள் ஹன்சிகாவும் தமன்னாவும் பேசுகிறார்கள். ஷாப்பிங் அனுபவம் என்று ஒரு ஆண் குரல் கேட்கிறது. Uncomparable என்று தமன்னா கூறுகிறார். Uncomparable என்று ஒரு ஆங்கிலச் சொல் கிடையாது. அது incomparable. அதைத்தான் அவர் தவறாக Uncomparable என்று கூறுகிறார். போகட்டும் தமன்னாவின் ஆங்கிலத்தை மன்னித்துவிடலாம்.

அண்ணாச்சியைத் தொடர்ந்து இப்போது ஆச்சி மசாலா ஐசக் அவர்களும் களத்தில் இறங்கி அசத்துகிறார். கோட் மாதிரியான வெள்ளைச் சட்டை, வேஷ்டி, முடிவில் கருப்புக் கோட்டு, நீலக்கோட்டு என்று தோன்றும் அவர், ‘‘என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்’’ என்று உச்சஸ்தாயியில் பாடுகிறார். கர்நாடக சங்கீதம் எப்போது, யாரிடம், எங்கே கற்றுக்கொண்டார் என்று தெரியவில்லை.

பாடலில் ‘‘நம் உடல்நலனைக் காக்கும் ஆச்சி மிளகா அழகா’’ என்று எதுமை மோனை வேறு. புற்றுநோய்க்கு மருந்தாக ஆச்சி மஞ்சளும், சர்க்கரை நோய்க்கு மருந்தாக ஆச்சி தனியாவும் பயன்படும் என்ற முக்கியமான தகவலும் அப்பாடலில் கொடுக்கப்படுகிறது. ரொம்ப சந்தோஷப்பட வேண்டிய விஷயம்.

பட்டுப் போல மென்மையாய் ஆச்சி தனியா..

சர்க்கரை நோயை இது விரட்டும் தனியா..

என்ற பாடல் வரிகள் நம் கவனத்துக்கு உரியவை. சர்க்கரை நோய்க்குத் தீர்வே கிடையாது, அதைக் கட்டுப்படுத்தி மட்டுமே வைக்கமுடியும் என்று காலம் காலமாக ஆங்கில மருத்துவத் துறை மனப்பாடம் செய்து ஒப்பித்துக்கொண்டு பிழைக்கும் தொழில் செய்துகொண்டிருக்கும்போது, நீரிழிவை ஒரேயடியாக ஆச்சி தனியா விரட்டிவிடும் என்பது மிகுந்த நம்பிக்கை தருகிறது. லட்சக்கணக்கான சர்க்கரை நோயாளிகள் நிச்சயம் இந்த விளம்பரத்தால் பயனடைவார்கள். விளம்பரத்தின் முடிவில், முகத்தை ‘மாஸ்க்’ போட்டு மூடிய பெண் ‘விஞ்ஞானிகள்’ ஆச்சி மஞ்சளையும், தனியாவையும் ஒரு ஸ்டூல் மேல் உட்கார்ந்து மைக்ராஸ்கோப் வைத்து ஆராய்ச்சி செய்கிறார்கள்.

ஏன் அவர்கள் ‘மாஸ்க்’ போட்டுக்கொள்கிறார்கள்? உலகப் புகழ்பெற்ற விஞ்ஞானிகளான ஐன்ஸ்டீன், தாமஸ் ஆல்வா எடிசன், மேரி க்யூரி போன்றவர்கள்கூட ‘மாஸ்க்’ அணிந்துகொண்டிருக்கும் ஒரு நிழல்படம்கூட இல்லை. ஏன்? அவர்கள் அப்படி வேலை செய்யவில்லையா? அப்படியானா கிருமிகளின் பாதிப்புகளுக்கு அவர்கள் உள்ளாகி இருப்பார்களே!

கிருமி என்றதும் நினைவுக்கு வருகிறது. கிருமிகளிலிருந்து பாதுகாக்கத்தான் ஆச்சி மசாலா விஞ்ஞானிகளும் ‘மாஸ்க்’ அணிந்துள்ளார்கள் என்றால், இது அவர்களும் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம்தான். கிருமிகளின் சைஸ் என்ன தெரியுமா? ஒரு குண்டூசியின் முனையில் பல ஆயிரம் கிருமிகள் கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்துகொள்ளலாம். அதுவே வைரஸாக இருந்தால், பல லட்சம் வைரஸ்கள் உட்காரலாம். ஏனெனில், அவை அவ்வளவு குட்டி! எலக்ட்ரான் மைக்ராஸ்கோப் வழியாகக்கூட வைரஸைப் பார்க்க முடியாது. இதை நான் ஏற்கெனவே ‘நலம் நலமறிய ஆவல்’ கட்டுரைத் தொடரில் கூறியுள்ளேன். இந்த லட்சணத்தில், கிருமிகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ள ஒரு முகமூடியா? சபாஷ். அந்த முகமூடியின் ஓட்டைகள் வழியாக லட்சக்கணக்கான கிருமிகள் உள்ளே போகலாம் என்பது ஆச்சி மசாலா விஞ்ஞானிகளுக்குத் தெரியாதோ?! இது கவனிக்க வேண்டிய விஷயம்.

ஒரு சிறுமி. பதிமூன்று வயதிருக்கலாம். டைட்டான ஒரு பேண்ட் மற்றும் பனியன் போட்டிருக்கிறாள். ஒரு சோப்பை வாங்கிக்கொண்டு ஸ்கூட்டர் சகிதமாய் நிற்கும் அம்மாவிடம் வருகிறாள்.

வாங்கிட்டியா – அம்மா கேட்கிறாள்.

ஹான், புது ஹமாம், 100 பர்சண்ட் ப்யூர் நீம் ஆயில்? – மகள் கேட்கிறாள்.

உட்காரு – என்று சொல்லிவிட்டு மகள் ஏறுமுன் ஸ்கூட்டரை ஓட்டிக்கொண்டு போகிறாள் அம்மா. ‘அம்மா’ என்று கத்திக்கொண்டே மகள் பின்னால் ஓடிவருகிறாள். ‘‘சடுகுடு, சடுகுடு, அச்சமில்ல, அச்சமில்ல ஓடு’’ என்று ஒரு பாடல் பின்புலத்தில் ஒலிக்கிறது. ஓரிடத்தில் அம்மாவின் ஸ்கூட்டர் நிற்பது கண்டு மீண்டும் அதை நெருங்குகிறாள் மகள். மீண்டும் அம்மா ஸ்கூட்டரில் ஓட்டமெடுக்கிறாள். மீண்டும் மகள் தூசி படர்ந்த தெரு, சேறு மாதிரியான தண்ணீர் இவற்றையெல்லாம் தாண்டி ஓடுகிறாள். கடைசியில் அம்மா நிற்கிறாள். இளைக்க இளைக்க வந்து நிற்கும் மகள், ‘ஏம்மா, இப்டி லூசு மாதிரி போயிட்டே’ என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவுமே கேட்காமல் நிற்கிறாள், ஓடிவந்த வியர்வை தூசியுடன். அப்போது அவளிடம் ஹமாம் சோப்பைக் காட்டி, அம்மா சொல்கிறாள்.

‘‘100 பர்சண்ட் ப்யூர் நீம் ஆயில். வேர்வையோ தூசியோ இது உன் சருமத்தைப் பாதுகாக்கும். யாராவது உன்னை வம்புக்கு இழுத்தாங்கன்னா ஓடு, குதி, துரத்து, ஆனா அவங்கள சும்மாவிடாதே’’ என்று வசனம் சொல்கிறாள்.

யாரையாவது நாம் வம்புக்கு இழுக்கு முன் அவர்கள் ஹமாம் சோப்புப் போட்டுக் குளித்திருக்கிறார்களா என்று உறுதி செய்துகொள்வது நல்லது. ஏனெனில், அவர்கள் ஹமாம் பாதுகாப்பில் இருக்கிறார்கள்.

‘‘புதிய ஹமாமில் உள்ள 100 பர்சண்ட் நீம் ஆயில் பரிசுத்தமாக்கும் உங்கள் சருமத்தை, மிகச்சிறந்த ஹமாம் பாதுகாப்புடன். ஹமாம், தைரியமா வெளியே போங்க’’ என்று ஒரு ஆண் குரல் பின்புலத்தில் ஒலிக்கிறது.

ஆறு வயது சிறுமிகளையெல்லாம் காமுகர்கள் தின்று, கொன்றுபோடுகின்ற கேவலமான ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். பொள்ளாச்சிப் பொறுக்கிகள் நாடெங்கும் மலிந்துவிட்டார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில், எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் ஒரு ஹமாம் சோப்பை வாங்கிக் கொடுத்துவிட்டால், பாலியல் வன்முறைப் பிரச்னை ஏற்படாமல் தடுத்துவிடலாம் அல்லவா? அரசு இதைப்பற்றி யோசிப்பது நல்லது. ஹமாம் பாதுகாப்புப் பெற்றவர்களின் ஓட்டும் அதிக எண்ணிக்கையில் கிடைக்குமல்லவா?

அதிருக்கட்டும், யாராவது வம்புக்கு இழுத்தாங்கன்னா ஏன் ஓட வேண்டும்? அது தோல்வியின் அடையாளமல்லவா? ஆனால், ஹமாம் சோப்புப் போட்டுக் குளித்துவிட்டு நீங்கள் வந்துவிட்டால், வம்புக்கு இழுப்பவர்களை எதிர்க்கும் துணிச்சல் உங்களுக்கு வந்துவிடும் என்று சொல்லாமல் சொல்கிறது விளம்பரம். பெண்கள் மீது இழைக்கப்படும் வன்முறைகளுக்கு எதிராக வழக்கு, நீதிமன்றம், தண்டனை எதுவுமே தேவையில்லாமல் செய்துவிடுகிறது இந்த சோப்பு. இதைப் போட்டுக் குளித்துவிட்டுச் சென்றால் போதும். அப்படியொரு பாதுகாப்பை, குறிப்பாக கற்புக்கு, கொடுக்கிறது இந்த சோப்பு. இதைப்பற்றி நமது அரசு யோசிப்பது நல்லது.

ஹமாமின் மிகச் சமீபத்திய விளம்பரத்தில் அதே பெண் குழந்தை மீண்டும் ஓடி வருகிறாள். இப்போது கொஞ்சம் வளர்ந்திருக்கிறாள். பருவமடைந்த மாதிரியான தோற்றம். ஆனால் பருவமடையாதபோது ஜீன்ஸ் பேண்ட் போட்டு முழுக்காலையும் மறைத்திருந்தவள், இப்போது அரை நிஜார் போட்டுக்கொண்டு தொடைகள் தெரிய ஓடி வருகிறாள். மலர்ந்துகொண்டிருக்கும் மகளின் மார்பகங்களும் இடம் வலமாக அசைந்தாடுவதையும் விளம்பரம் காட்டுகிறது. பார்க்கவே ரொம்ப கஷ்டமாக உள்ளது. ஒருவகையான ரகசிய, உளவியல் ரீதியான பாலியல் வன்முறையை இவ்வகை விளம்பரங்கள் செய்கின்றன. சமூக அக்கறை உள்ளவர்கள் ஆழமாக யோசிக்க வேண்டிய விஷயம் இது.

ஒருமுறை என் நண்பர் ஒருவர் எனக்கு அலைபேசி, ‘உடனே ஜான்ஸன் அன் ஜான்ஸன் விளம்பரத்தைப் பாரும். உம் கவிதையை பயன்படுத்தியிருக்கிறார்கள். ஒரு கேஸ் போட்டால் பல லட்சம் கிடைக்கும்’ என்றார். நானும் பார்த்தேன். ‘குழந்தை பிறக்கும்போது தாயும் பிறக்கிறாள்’ என்று சொன்னார்கள். அது என் கவிதைதான்.

குழந்தை பிறக்கும்போது

பிறக்கிறாள்

அம்மா

என்று நான் எழுதியிருந்தேன். என் ‘‘நதியின் கால்கள்’’ கவிதைத் தொகுப்பில் அது உள்ளது. ஆனால் நான் வழக்கு எதுவும் போடவில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அந்த விளம்பரம் வருவதில்லை. குழந்தை வளர்ந்துவிட்டிருக்கும்.

கோல்கேட் வேத்சக்தி என்ற பேஸ்ட் விளம்பரத்தில், ‘‘டேஸ்ட் பேலன்ஸ் பண்ணி இருக்காங்க. ரொம்ப பிடிச்சிருக்கு’’ என்று ஒரு இளம்பெண் கூறுகிறாள், தோளைக் குலுக்கிக்கொண்டே. சாப்பிட்டுப் பார்த்திருப்பாள் போலும். அவளது இரண்டு தோள்பட்டைகளின் மேல் பக்கமும் இரண்டு சிறிய வட்ட ஓட்டைகள். அவ்வோட்டைகள் வழியாக அவளது தோள்/ல் கொஞ்சம் தெரிகிறது. முட்டிக்கு முட்டி பிஞ்சுபோன, அல்லது பிய்க்கப்பட்ட ஜீன்ஸ்களை அணிவது பெண்களுக்கும் ஆண்களுக்குமான ஃபேஷனாக இப்போது மாறிவிட்டது. ஒரு சின்ன ஓட்டை துணியில் இருந்தால்கூட அதோடு வெளியில் போக வெட்கப்பட்ட காலம் மலையேறிவிட்டது. இப்போது வெட்கமில்லாமல் பிய்க்கப்பட்ட ஆடைகளை, ஒழுங்கான ஆடைகளைவிட அதிகம் விலைகொடுத்து வாங்கி போட்டுக்கொல்கிறார்கள், சாரி, கொள்கிறார்கள். உடலை மறைக்க ஆடை அணிந்த காலம் போய், உடலைக் காட்ட ஆடை அணியும் காலம் வந்துவிட்டது! ஆள் பாதி, ஆடை பாதி என்பது இப்போதுதான் சரி!

‘‘வேதமும் விக்நானமும் (அந்த அம்மா அப்படித்தான் உச்சரிக்கிறது) ரெண்டும் கலந்திருக்கிறதுனால, அது டபுள் பெனிஃபிட்டா எனக்குத் தெரிஞ்சிச்சு’’ என்று ஒரு அம்மா சொல்கிறார். இப்போது வரும் விளம்பரங்களில் ஜோதிகா வருகிறார். அவர் ‘விஞ்ஞானம்’ என்று சரியாக உச்சரிக்கிறார். அல்லது உச்சரிப்பதாக ஒலிக்கிறது. ‘டபுள் பெனிஃபிட்’ மாதிரி அது ‘டப்பிங் பெனிஃபிட்’-ஆக இருக்கலாம்!

அதுசரி, ஒரு பேஸ்ட்டுக்குள் விஞ்ஞானம் இருக்கிறது என்பது சரி. ஆனால் வேதத்தை எப்படி பேஸ்ட்டுக்குள் வைத்தார்கள்? எந்த வேதம்? ரிக், யஜுர், சாமம், அதர்வணம், பைபிள், குர்’ஆன், ஜென் அவஸ்தா – இதில் எது? அப்படியே ஏதாவதொரு வேதத்தை உள்ளே வைத்திருந்தாலும், பல் துலக்கிவிட்டு, வாயைக் கொப்புளிக்கும்போது, விஞ்ஞானத்தோடு சேர்த்து வேதத்தையும் அல்லவா வாஷ்பேசினுக்குள் துப்பவேண்டி வரும்? இது வேதத்துக்கு நாம் செய்யும் அவமரியாதை அல்லவா? இதுபற்றி ஏன் அவர்கள் யோசிக்கவில்லை?!

ஒரு இளைஞர். ஒரு ஆப்பிளைக் கடிக்கிறார். உடனே ‘ஆ’ என்று வாயைப் பிடித்துக்கொள்கிறார். அந்தக் கணமே எங்கிருந்தோ கண்ணாடிக் கதவுகளை உடைத்துக்கொண்டு அல்லது ஃபிரிஜ்ஜுக்குள்ளிருந்து ஒரு பெண்ணும் அவரது பின்னால் சில இளைஞர்களும் வருகின்றனர். அந்தப் பெண் வந்து அந்த இளைஞரிடம், ‘‘உங்கள் ஈறுகளில் பிரச்னையா? ம், கிருமிகள். உங்கள் டூத்பேஸ்ட்ல உப்பிருக்கா?’’ என்று கேட்கிறார்.

‘‘டூத் பேஸ்ட்ல உப்பா?’’ என்று அந்த இளைஞர் கேட்கிறார். ‘‘ஆம், கோல்கேட் ஆக்டிவ் சால்ட்ல உப்பிருக்கு. கோல்கேட். டெண்டிஸ்ட்டுகள் பரிந்துரைக்கும் நம்பர் ஒன் ப்ராண்ட்’* என்ற சப்தத்துடன் விளம்பரம் முடிகிறது. அதிருக்கட்டும், உள்ளே வருவதற்கு அந்த அம்மா ஏன் கண்ணாடிக்கதவை உடைத்துக்கொண்டு வர வேண்டும்?

1980-களில் உப்பு, கரி இவற்றுக்கு எதிராக இருந்த கோல்கேட் விளம்பரம், இப்போது அவற்றுக்கு ஆதரவாக இருப்பதற்கு என்ன காரணம்? விளம்பரதாரர்களுக்கு விஞ்ஞான அறிவு வளர்ந்துவிட்டதா? அல்லது அவற்றைப் பார்க்கும் நமக்கு அறிவு குறைந்துவிட்டதா?

உங்க டூத் பேஸ்ட்ல உப்பிருக்கா என்று கேட்பது இருக்கட்டும், ஒருமுறை கோல்கேட் பயன்படுத்தினால் ஒன்பது முறை சிகரெட் குடித்த மாதிரி நிகோட்டின் வயிற்றுக்குள் போகிறது என்று விஞ்ஞானம் கூறுகிறதே, அந்த உண்மையைச் சொல்ல துப்பிருக்கா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com