17. தம்மபதம் - 4

பிறப்பு என்றால் தொடக்கம் என்றும், இறப்பு என்றால் முடிவு என்றும் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பிறப்பு என்பது உள்ளே வரும் கதவு; இறப்பு என்பது வெளியே போகும் கதவு
17. தம்மபதம் - 4

வாடி வதங்கி உதிரும் நிலையில் உள்ள இலையைப் போல நீங்கள் உள்ளீர்கள். யமனின் அறிவிப்பாளர்கள் உங்கள் அருகில் உள்ளனர். இறுதிப் புறப்பாட்டின் வழிக்கதவின் வாசலில் நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள். ஆனால், பயணத்துக்கான முன்னேற்பாட்டுப் பொருள்கள் எதுவுமே இல்லாமல் இருக்கிறீர்கள். வழியில் ஓய்வெடுக்கும் இடமோ வாய்ப்போ இல்லை.

- அத்தியாயம் 18 அசுத்தம். பொன்மொழி 235, 237

முன்னேற்பாடுகள்! ஆஹா, இந்த உலகை விட்டு உடலால் நாம் பிரிந்து போகும் முன், அந்தப் பயணத்துக்கான முன்னேற்பாடுகள் செய்துகொள்ள வேண்டியுள்ளது என்பதுதான் எல்லா மதங்களின் அறிவுரையும். ஆனால், கடவுளையோ மதத்தையோ பற்றி எதுவுமே பேசாத, அல்லது பேசியதாகச் சொல்லப்படாத புத்தர், இம்மை முடித்து மறுமையின் பயணத்துக்கான முன்னேற்பாடுகள் பற்றிப் பேசுகிறார்!

அந்தக் காலத்தில், நீண்ட பயணம் செல்ல வேண்டுமென்றால், கட்டு சோற்று மூட்டை கொண்டுசெல்வார்கள். நீண்ட பயணம் என்றில்லை. சிறுதூர உல்லாசப் பயணமாக இருந்தாலும் சரி. நான் ஆம்பூரில் பணி புரிந்துகொண்டிருந்த காலகட்டத்தில், அங்கிருந்து ஒரு மணி நேர தூரத்தில் இருக்கும் ஏழைகளின் ஊட்டியான ஏலகிரி மலைப்பிரதேசத்துக்கு அவ்வப்போது போய் வருவோம். இப்போது அதுவும் பணக்காரர்களின் ஊட்டி ஆகிக்கொண்டிருப்பது வேறு விஷயம்.

அங்கே போகும்போது, வீட்டில் இருந்து கட்டி சோறு கட்டி எடுத்துக்கொண்டு செல்வோம். அங்கே போய், ஏரியோரத்தில் அமர்ந்து அந்தக் குளிர்ந்த நீரைக் குடித்துக்கொண்டு, முட்டையும் கட்டிச் சோறும் சாப்பிட்டால், அடடா அற்புதமாக இருக்கும்! சாப்பிட்டுப் பார்த்த நாக்குகளுக்கு நான் சொல்லும் சுவை தெரியும்! குறுகியகால பயணமாக இருந்தால்கூட, முன்னேற்பாடுகளோடு செல்வதுதான் நமக்கு வழக்கம்.

ஆனால், இறுதிப் பயணத்துக்கான எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமலே நாம் இருந்துவிடுகிறோம்! எவ்வளவு வினோதம்! அதைத்தான் புத்தர் சுட்டிக்காட்டுகிறார். வழியில் ஓய்வெடுக்கவெல்லாம் முடியாது என்றும் கூறுகிறார்! செத்தால்தான் சுடுகாடு தெரியும் என்று சொல்வார்கள். ஆனால், புத்தரைப் போன்ற ஞானிகளுக்கு, சாகாமலே சாகும் கலை தெரிந்திருக்கிறது! போய்விட்டு வந்த மாதிரியல்லவா சொல்கிறார்!

அப்படியானால், என்ன மாதிரியான முன்னேற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும்? அதற்கான குறிப்பையும் புத்தர் கொடுத்துவிடுகிறார். இந்த அத்தியாயத்தின் தலைப்பு ‘அசுத்தங்கள்’. அதுதான் குறிப்பு. அசுத்தங்களை நீக்கிக்கொள்வதுதான் முன்னேற்பாடு. அப்படி என்ன அசுத்தங்கள் நம்மிடம் உள்ளன?

காமினி, காஞ்சனை என்று அவற்றை பரமஹம்சர் குறிப்பிடுகிறார். அவர் பேசும்போது, அடிக்கடி காமினி, காஞ்சனை கூடாதென்று சொல்வார். பெண்ணாசை, மண்ணாசை என்று அவற்றை வைத்துக்கொள்ளலாம். இதில் பொன்னாசையும் சேர்ந்துவிடுகிறது. இரண்டாகச் சொன்னாலும் அவை இரண்டு மட்டுமல்ல. காமம் மற்றும் பொருள்களின் மீதான ஆசை என்றும் சொல்லலாம்.

இன்று காமம் தலை விரித்து ஆடிக்கொண்டுள்ளது நமக்கு நன்றாகவே தெரியும். பல ஆயிரம் கோடிகளை கடனாகப் பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லும் முதலைகள், அவர்களை தப்பிக்கவிடும் தருதலைகள் என்று, பொருளாசையும் தொடர்ந்துகொண்டுள்ளது. ‘எட்டு எட்டா மனுஷ வாழ்வ பிரிச்சுக்கோ’ அப்படீன்னு ஒரு ரஜினி பாடல் உண்டு. ‘எட்டுவழிச் சாலையாக’ என்று அந்தப் பாடலைப் புரிந்துகொண்டுவிட்டார்களோ என்று தோன்றும் அளவுக்கு இன்று காரியங்கள் நடந்துகொண்டுள்ளன! பேராசை, கோபம், பயம், எல்லாமும் அசுத்தம்தான் என்று பல இடங்களில் தம்மபதம் வெளிப்படையாகவே கூறுகிறது.

கோபம் என்று சொன்ன பிறகு, அது தொடர்பான ஒரு ஜென் கதை நினைவுக்கு வருகிறது. ஒரு ஜென் குருவிடம் ஒரு சீடன் வந்து, ‘குருவே, எனக்கு அடிக்கடி பயங்கரமாக கோபம் வருகிறது. அதை கட்டுப்படுத்தவே முடியவில்லை. என்ன செய்வது?’ என்று கேட்டான்.

‘அப்படியா, எங்கே அந்த கோபத்தைக் கொஞ்சம் இப்போது காட்டு’ என்றார் குரு.

‘அப்படிச் செய்ய முடியாது குருவே. அதுவாகவே திடீரென்று வரும். அப்போதுதான் காட்ட முடியும்’ என்றான்.

‘அப்படியானால், அது உன்னுடையதல்ல. உன்னுடையதாக ஒரு விஷயம் இருக்குமானால், நீ எப்போது வேண்டுமானாலும் அதை எடுத்துக்காட்டி இருக்கலாமே!’ என்றார்!

அதன்பிறகு கோபம் வரும்போதெல்லாம் அவன், ‘இது என்னுடையதல்ல, எனக்குச் சொந்தமானதல்ல’ என்று குரு சொன்னதை நினைத்துக்கொள்வான். அந்தக்கணமே, அக்கோபம் அவனை விட்டு அகன்று போய்விடும் என்கிறது அந்த அழகான ஜென் கதை.

எவ்வளவு அற்புதமான உண்மை எவ்வளவு எளிமையாகச் சொல்லப்பட்டுள்ளது! நமக்குச் சொந்தம் இல்லாத எதுவும், நம்மோடு நிரந்தரமாக இருக்க முடியாது. எதுவும் நம்முடையதல்ல. ஆனால், அவற்றின் மீதுதான் நமக்கு ஈடுபாடு. அவையே ‘அசுத்தங்கள்’ என்று சொல்லப்படுகின்றன.

நீ இறந்துபோகும்போது உன்னைவிட்டு எதெல்லாம் போகிறதோ அதெல்லாம் நீயல்ல என்கிறார், நவீன குரு எக்ஹார்ட் டாலி. நாமல்லாதவற்றின் மீதான விருப்பங்களை, ஒட்டுதலை விட்டு விலகும் பயிற்சிதான் ஞானத்துக்கான வழியாகும். அதைத்தான் புத்தர்,

‘அசுத்தங்களெல்லாம் போய்விட்ட பிறகு, குற்றங்களில் இருந்து நீ விடுதலை பெறுகிறாய். பின்பு, மீண்டும் பிறப்பு இறப்பு என்ற வட்டத்துக்குள் வரமாட்டாய்’

என்று, பொன்மொழி 238 மூலம் கூறுகிறார். இதுவும் மிக முக்கியமான தகவல். மறுபிறப்பு பற்றி பல மதங்கள் பேசுகின்றன. அந்த விஷயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த மாதிரி, புத்தரும் பரமஹம்சரும் பேசியுள்ளனர். மன அசுத்தங்களில் இருந்து நீங்கிவிட்டால் மறுபிறப்பு இல்லை என்று புத்தர் சொல்வதாக இந்தப் பொன்மொழியைப் புரிந்துகொள்ளலாம்.

‘வெந்த நெல் மீண்டும் முளைக்காது’ என்று வெகு அழகாகச் சொல்கிறார் பரமஹம்சர். ஒரு மனிதன் ஞானமடைதல் என்பது ஒரு நெல்மணி வெந்துபோவதைப் போன்றது. வெந்த நெல்லை மீண்டும் மண்ணுக்குள் யாரும் விதைக்கமாட்டார்கள். ஏனெனில், அது முளைக்காது. ஞானம் பெற்ற ஒரு மனிதனுக்கு மறுபிறவி தேவையில்லை. ஏனெனில், பிறவிப்பயனை அவன் முதல் முறையே அடைந்துவிட்டான் என்று பொருள். பகவத் கீதையிலும், அத்தியாயம் நான்கு, ஸ்லோகம் 9-ல் இதே கருத்து சொல்லப்படுகிறது.

பிறப்பு என்றால் தொடக்கம் என்றும், இறப்பு என்றால் முடிவு என்றும் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் பிறப்பு என்பது உள்ளே வரும் கதவு; இறப்பு என்பது வெளியே போகும் கதவு என்று அழகாகக் கூறுகிறார், புத்த துறவியான திச் நாட் ஹன்.

சிரிக்கும் புத்தரைப் பற்றி நமக்குத் தெரியும். குண்டாக உருண்டையாக சிரிக்கும் அந்தச் சிலையைப் பார்த்திருக்காதவர்கள் அரிது. அவர் உண்மையில் ஒரு ஜென் ஞானியாம். அவர் எப்போதும் சிரித்துக்கொண்டே இருப்பாராம். ஒரு மூட்டையில், குழந்தைகளுக்கான பண்டங்களை வைத்துக்கொண்டு, சிரித்துக்கொண்டே ஊர் ஊராகச் சுற்றி, குழந்தைகளைக் கண்டால் நிறுத்தி, அதில் உள்ள பொருள்களில் சிலவற்றை எடுத்துக் கொடுத்துவிட்டு, பின் அடுத்த ஊர் நோக்கிச் செல்வாராம்.

என்ன இவர் சிரித்துக்கொண்டே இருக்கிறார், கொஞ்சம்கூட முகத்தில் ‘சீரியஸ்னஸ்’ இல்லையே, இவர் எப்படி ஜென் ஞானியாக இருக்க முடியும் என்று சந்தேகப்பட்ட ஒரு துறவி, வழியில் அவரை நிறுத்தி, ‘ஜென் என்றால் என்ன?’ என்று கேட்டாராம்.

சிரிக்கும் புத்தர் வழக்கம்போலச் சிரித்துவிட்டு, தன் மூட்டையைக் கொஞ்ச நேரம் கீழே இறக்கி வைத்துவிட்டு, அவரைப் பார்த்துச் சிரித்துவிட்டு மீண்டும் மூட்டையைத் தூக்கிக்கொண்டு சென்றாராம். கேள்வி கேட்டவருக்கான பதில் கிடைத்துவிட்டது. உங்களுக்கு விளங்கிவிட்டதா?

ஜென் என்றால் இறக்கி வைத்தல். எதை? சுமைகளை; கசடுகளை; கழிவுகளை; அச்சங்களை; ஆத்திரங்களை; அவமானங்களை; அசுத்தங்களை – இப்படி எதிர்மறையான எல்லாவற்றையும். பின் விடுபட்ட மனநிலையுடன், அவற்றில் ஒட்டாத மனநிலையுடன் மீண்டும் காரியமாற்றக் கிளம்பிவிடுதல். இந்தச் சுமை இறக்கத்தைப் பற்றித்தான், பரமஹம்சர் காமினி, காஞ்சனையில் இருந்து விடுபடுதல் என்றும், அசுத்தங்களை அகற்றுதல் என்று புத்தரும் சொல்கின்றனர். இப்படிச் செய்பவர்களுக்கான முடிவு, முடிவற்ற சுதந்திரமாகும். பிறப்பற்ற நிரந்தர ஆனந்தமாகும். அதைத்தான் ‘நிர்வாணா’ என்று பௌத்தம் குறிக்கிறது. நிர்வாணமாக அலைவதைப் பற்றியல்ல! அதைத்தான் ‘முமுக்தா’ என்று பரமஹம்சர் குறிப்பிடுகிறார்.

மேலே சொன்ன தம்மபதத்தின் பொன்மொழியை சூஃபித்துவத்தின் சாரம் என்றே சொல்லிவிடலாம். சூஃபிப்பாதைகள் பல உள்ளன. ஆனால், எல்லாப் பாதைகளின் நோக்கமும் ஒன்றுதான். தன்னை அறிதல். அல்லது இறைவனை அறிதல். கவனிக்க வேண்டும், இறைவனைப் புரிதல் அல்ல; அறிதல். விவாதம் செய்து இறைவனின் இருப்பைப் புரிந்துகொள்ள முடியாது. God is not an argument. God is an experience என்று ஓஷோ அழகாகச் சொன்னார். அப்படிப்பட்ட அனுபவத்தை ஒரு மனிதன் பெற வேண்டுமானால், அவன் முதலில் தன் உள்ளத்தைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதை ‘தஸ்கியத்துன் நஃப்ஸ்’ என்றும், ‘தத்தஹீருல் கல்ப்’ என்றும் சூஃபித்துவம் குறிப்பிடுகிறது.

எல்லா தியானங்களும் பயிற்சிகளும், நாம் அல்லாத ஒன்றை உருவாக்குவதற்காக அல்ல. நமக்குள் இருக்கின்ற குப்பைகளை வெளியேற்றுவதற்காகத்தான். அவற்றைத்தான் அசுத்தங்கள் என்று புத்தர் குறிப்பிடுகிறார். அந்தக் குப்பைகளெல்லாம் வெளியேறிய பிறகு, அவற்றுக்குக் கீழே கிடக்கும் மாணிக்கம் ஒளிவிட ஆரம்பிக்கும்! இதுதான் எல்லா ஆன்மிகப் பாதைகளின் நோக்கமாகும். ஆங்கிலத்தில்கூட, மனிதனை அழகாக human being என்று குறிப்பிடுகின்றனர். அவர்கள் தெரிந்து சொன்னார்களா தெரியாமலே சொன்னார்களா என்று தெரியவில்லை! ஆனால், அதற்குள் ஒரு அழகான குறிப்பு உள்ளது. ஏனெனில், இல்லாத ஒன்றாக ஆகிவிடுவது நமக்குச் சாத்தியமில்லை. அதனால்தான், நாமெல்லாம் human being, human becoming அல்ல!

நாம் எதை அறிந்துகொள்ள விரும்புகிறோமோ அது நமக்குள்ளேயேதான் இருக்கிறது. நீங்கள் எங்கே இருந்தாலும் இறைவன் உங்களோடு இருக்கிறான் என்றும் (அத்தியாயம் 57: வசனம் 4), மனிதனின் பிடரியில் உள்ள உயிர் நரம்பைவிட சமீபமாக இறைவன் இருக்கிறான் என்றும் (அத்தியாயம் 50: வசனம் 16) திருக்குர்’ஆன் கூறுகிறது.

நீ போகுமிடமெல்லாம் இறைவன் உன்னோடு இருக்கிறார் என்று புனித பைபிளின் ஜோஷுவா (01:09) கூறுகிறது. இது திருமறையின் 57:04 வசனத்தோடு பொருந்தி வருவதைக் கவனிக்கலாம்.

அதிருக்கட்டும், அசுத்தங்கள் என்று ஒரு லிஸ்ட் பார்த்தோமல்லவா, அது முடிவான ஒன்றா என்றால் இல்லை. முதல் பார்வையில் நல்ல விஷயங்களாகத் தோன்றுபவைகூட அசுத்தங்களாக இருக்கும் சாத்தியம் உண்டு. அதிகமாகப் பேசுவது, அதிகமாக உண்பது, அதிகமாக உறங்குவது எல்லாம் ஆன்மிகத்தில் அசுத்தமாகத்தான் கருதப்படுகிறது. எந்த ஞானியும் தன் சீடரை, ‘நீ வயிறுமுட்ட உண்பாயாக’ என்று ஆசீர்வதித்ததில்லை. அனுமதித்ததும் இல்லை.

13-14-ம் நூற்றாண்டில், டெல்லியில் வாழ்ந்த ஒரு மாபெரும் ஞானி வள்ளல் ஹஸ்ரத் நிஜாமுத்தீன் அவ்லியா. அவர் தன் வாழ்நாள் முழுவதும் நோன்பு பிடித்தார்! அவருடைய இடத்தில், மன்னர்களால் தரப்பட்ட லட்சக்கணக்கான பணத்தையும் பொருளையும் ஒரு பைசாகூட தனக்காக எடுத்துகொள்ளாமல் ஏழைகளுக்கு அன்றே கொடுத்துவிடுவார். லங்கர்கானா என்று அழைக்கப்பட்ட அவருடைய இடத்தில், ஒருநாளைக்குக் குறைந்தது ஆயிரம் ஏழைகளுக்கு உணவும், பணம் பொருள்களும் தரப்பட்டன.

அப்படி வாழ்ந்த அந்த மகான், ஒருநாள் நோன்பு திறக்க அமர்ந்தபோது, சில ரொட்டித்துண்டுகளின் துகள்கள் மட்டுமே இருந்தன. அதை அவர் தட்டில் வைத்தார்கள். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு ஏழை, அவர் சாப்பிட்டுவிட்டு மிச்சம் வைத்திருப்பதாக நினைத்து, அவற்றைப் பொறுக்கி சாப்பிட்டுவிட்டுச் சென்றார். இரண்டு நாள்களாகப் பட்டினி கிடந்து மூன்றாவது நாளும் உண்ணுவதற்கு ஏதும் இல்லாமல் போனபோது, அந்த மகான் என்ன சொன்னார் தெரியுமா?

‘நாம் இறைவன் மீது வைத்திருக்கும் பக்தியில் ஏதோ குறை இருப்பதாக உணர்கிறேன். அதனால்தான் நீ இன்னும் கொஞ்சம் பட்டினி கிட என்று இறைவன் இன்றும் நோன்பு திறக்க உணவு தரவில்லை’ என்றார்!

உண்பதைப் பற்றி பகவத் கீதையின் ஆறாவது அத்தியாயத்தின் 16-வது ஸ்லோகம் என்ன சொல்கிறது தெரியுமா?

நாத்யஷ்னதஷ்த்து யோகோஸ்தி நஜய் காந்தம் அனஷ்னதன

நஜாத்தி ஸ்வப்ன ஷீலஸ்யா ஜாக்ரதோ நய்வ சார்ஜுனா

அதிகமாக உண்பவனுக்கும் உண்ணாமலே இருப்பவனுக்கும்

அதிகமாக உறங்குபவனுக்கும் உறங்காமலே இருப்பவனுக்கும்

யோகம் (ஞானம்) சித்திக்காது அர்ஜுனா!

மறுசோறு உண்டு...

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com