தில்லியின் கீர்த்தி நகரில் உள்ள மரச்சாமன்கள் சந்தைக்குச் சென்ற காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அங்கு பணியாற்றும் தச்சுத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
முன்னதாக ராகுல் காந்தி தில்லி ஆசாத்பூர் மண்டியில் பழங்கள் மற்றும் காய்கறி விற்பனையாளர்களை சந்தித்துப் பேசினார். மேலும் சமீபத்தில் ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளிகளுடன் கலந்துரையாடிய ராகுல் இன்று மரச்சாமன்கள் சந்தைக்குச் சென்று அங்கு தச்சர் தொழிலாளிகளுடன் கலந்துரையாடி, அவர்களது பிரச்னைகளைக் கேட்டறிந்தார்.
இதுதொடர்பாக அவர் எக்ஸ் பதிவில்,
தில்லியின் கீர்த்தி நகரில் அமைந்துள்ள ஆசியாவின் மிகப்பெரிய மரச்சாமன்கள் சந்தைக்குச் சென்று, அங்கு தச்சுத் தொழிலாளி சகோதரர்களை சந்தித்தேன்.
கடின உழைப்பாளிகள் மட்டுமின்றி, அவர்கள் அற்புதமான கலைஞர்கள். நீடித்து உழைக்கும் மரச்சாமான்களை அழகாக வடிவமைப்பதிலும் வல்லவர்கள்.
படிக்க: அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி!
தச்சுத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடியது மகிழ்ச்சி. அவர்களின் திறமைகளைப் பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டேன். கற்றுக்கொள்ளவும் முயற்சித்தேன் என்று அவர் பதிவிட்டுள்ளார்.
ராகுல் காந்தி முன்னதாக ஹரியாணாவின் சோனிபட் மாவட்டத்தில் வயல்களில் நெல் நடவு செய்யும் விவசாயிகளை சந்தித்துப் பேசினார். சில தொழிலாளர்களை தன் தாயின் இல்லத்திற்கும் அழைத்துச் சென்றார்.
சில மாதங்களுக்கு முன்பு தில்லியிருந்து சண்டிகருக்கு டிரக்கில் பயணம் செய்து அங்குள்ள ஓட்டுநர்களின் குறைகளையும் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.