இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் தலைவர் எஸ்.சோமநாத் இன்று சந்திரயான்-3 குறித்து தெரிவிக்கையில், பிரக்யான் ரோவர் எதிர்பார்த்ததை செய்துள்ளதாகவும், தற்போதைய உறக்க நிலையிலிருந்து எழுந்திருக்கத் தவறினாலும் அது ஒரு பிரச்சினையாக இருக்காது என்றார்.
குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சோம்நாத் கோயிலுக்கு சென்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் எக்ஸ்ரே போலாரிமீட்டர் செயற்கைக்கோள் ஏவுவதற்கு விண்வெளி நிறுவனம் தயாராகி வருகிறது.
தற்போது நிலவில் உறக்க நிலையில் உள்ள பிரக்யான் ரோவர் நிலை குறித்து இஸ்ரோ தலைவர் தெரிவிக்கையில், நிலவில் நிலவும் கடுமையான வானிலை காரணமாக அதன் மின்னணு சாதனங்கள் சேதமடையவில்லை என்றால் அது விழித்து கொள்ளும், ஏனெனில் இரவில் நிலவில் வெப்பநிலையானது மைனஸ் 200 டிகிரி செல்சியஸ் கீழ் உள்ளது என்றார்.
நிலவில் பகல் தொடங்கிய பிறகு சூரிய சக்தி மூலம் லேண்டரும், ரோவரும் மின்சக்தியை உற்பத்தி செய்து மீண்டும் விழித்தெழ வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேலையில் லேண்டர் விக்ரம் மற்றும் ரோவர் பிரக்யான் ஆகியவற்றுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டதாகவும், ஆனால் எந்த சமிக்ஞைகளும் கிடைக்கவில்லை என்றார்.
வரவிருக்கும் திட்டங்கள் குறித்து தெரிவித்த சோமநாத், இஸ்ரோ இப்போது எக்ஸ்ரே போலாரிமீட்டர் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த தயாராகி வருகிறது. இது பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்படும் என்றார். இந்த செயற்கைக்கோளானது கருந்துளைகள், நெபுலாக்கள் மற்றும் பல்சர்கள் குறித்து ஆய்வு செய்யும் என்றார்.
மேலும் இன்சாட்-3டிஎஸ் என்ற பருவநிலை செயற்கைக்கோள் டிசம்பரில் விண்ணில் ஏவப்படும் என்றார் சோமநாத்.