பொடேலி: என் பெயரில் வீடு இல்லை, ஆனால் நாட்டில் பல மகள்களின் பெயரில் சொந்தமாக வீடு இருக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறினார்.
கோடிக்கணக்கான, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட, பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் தற்போது, மத்திய அரசின் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளால் லட்சாதிபதிகளாக மாறியிருக்கிறார்கள் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | 15 நாள்களில் 500 சாலைகள்: சாதிக்குமா சென்னை மாநகராட்சி?
குஜராத் மாநிலத்துக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார்.
பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கும் பொடேலி நகரில் ரூ.5,000 கோடி மதிப்பிலான நலத்திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, இன்று குறிப்பிட்ட நேரத்தை உங்களுடன் செலவிட்டேன், ஏழை மக்கள் சந்திக்கும் பிரச்னைகளை நான் அறிந்துள்ளேன், அவற்றை சரி செய்யும் முயற்சிகளை தொடர்ந்து செய்து வருகிறேன்.
நாடு முழுவதும் சுமார் 4 ஆயிரம் கோடி வீடுகளை மத்திய அரசு கட்டிக்கொடுத்திருப்பது குறித்து இன்று நான் மிகவும் திருப்தியாக உணர்கிறேன். ஏழை மக்களின் வீடுகள் என்பது வெறும் எண்கள் அல்ல எங்களுக்கு. ஏழை மக்கள், அவர்களுக்கான வீட்டை மரியாதையுடன் கட்டிக்கொள்ள உதவி செய்வதே மத்திய அரசின் கடமை.
இதையும் படிக்க.. காலாண்டு விடுமுறை: பள்ளிகள் திறப்பு தேதி அறிவிப்பு
எந்த தரகர்களும் இல்லாமல், ஏழைகளுக்கு நேரடியாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. லட்சக்கணக்கான வீடுகள் பெண்கள் பெயரில் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.
எனது பெயரில் வீடு இல்லை. எனினும், எனது அரசு நாட்டின் லட்சோப லட்ச மகள்களின் பெயர்களில் சொந்தமாக வீடுகளை கட்டிக்கொடுத்திருக்கிறது என்று பிரதமர் மோடி உருக்கமாகக் கூறினார்.