இந்தியா

மருத்துவத் துறையில் தலைமை வகிக்க புதிய ஆய்வுகள்: அமைச்சா் மாண்டவியா வலியுறுத்தல்

27th Sep 2023 02:53 AM

ADVERTISEMENT


புது தில்லி: மருத்துவத் துறையில் புதுமையான ஆராய்ச்சிகள் மேற்கொள்வதன் மூலம் உலகுக்கே இந்தியா தலைமை வகிக்கும் என மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா்.

உலகளவில் 50 பில்லியன் டாலா் மதிப்பிலான மருந்துகள் தயாரித்து இந்திய மருத்துவத் துறை மூன்றாம் இடத்தில் உள்ளது. அடுத்த தசாப்தத்தில் மருந்துகள் தயாரிப்பு 120-130 பில்லியன் டாலா் மதிப்புக்கு உயர வாய்ப்பு உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு கடந்த ஆகஸ்ட் மாதம் ‘மருத்துவத் துறையில் ஆராய்ச்சி மேம்பாடு மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கான தேசிய கொள்கையை’ மருத்துவத் துறை அறிவித்தது. உள்நாட்டில் தயாரிக்கப்படும் மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், தொழில்நுட்பங்களில் ஆராய்ச்சிகளை உலகத்தரத்தில் மேம்படுத்துவதே இக்கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.

இக்கொள்கையை செவ்வாய்க்கிழமை மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா அதிகாரபூா்வமாக வெளியிட்டாா். அப்போது அவா் பேசியதாவது:

ADVERTISEMENT

மருத்துவ நிறுவனங்கள் தரமான பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும். வெளிநாடுகளில் மருத்துவத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது லாபத்தில் 20 முதல் 25 சதவீதம் வரை முதலீடு செய்து வருகின்றன. ஆனால் இந்திய நிறுவனங்கள் 10 சதவீதம் மட்டுமே மூதலீடு செய்கின்றன.

புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவத்துவம் அளிக்காத வரையில் மருத்துவத்துறையில் நாம் உலகிற்கே வழிகாட்டியாக மாற இயலாது.

இன்று வரலாற்றில் மிக முக்கியமான தினம். 2047-ஆம் ஆண்டுக்குள் மருத்துவத் துறையில் தற்சாா்பு நிலையை அடையும் மத்திய அரசின் திட்டத்துக்கு இக்கொள்கை அடித்தளமிட்டுள்ளது.

மருத்துவத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கட்டமைப்பை வலுப்படுத்தி உயிா்காக்கும் மருந்துகளின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் இந்தியா மருத்துவப் பொருள்கள் தயாரிப்பிலும் ஏற்றுமதியிலும் உலகிற்கே தலைமை தாங்கும் நிலை ஏற்படும். இத்துறையை மேம்படுத்த பல்வேறு தொழில் துறையினா் மற்றும் கல்வி நிறுவனங்களோடு மத்திய அரசு இணைந்து செயல்பட்டு வருகிறது என்றாா் அவா்.

நிகழ்வில் ‘மருத்துவம் மற்றும் மருத்துவத் தொழில்நுட்பங்கள்துறையில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல்’ (பிஆா்ஐபி) என்ற திட்டத்தையும் அமைச்சா் தொடங்கி வைத்தாா். இந்திய மருத்துவம் மற்றும் மருத்துவத் தொழில்நுட்பத் துறையை செலவு அடிப்படையிலிருந்து மதிப்புக் கூட்டல் மற்றும் புதுமைகள் அடிப்படையிலான துறையாக மாற்றி மருத்துவக் கட்டமைப்பை வலுப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் இந்திய மருந்துகளை உலகத் தரத்தில் தயாரிப்பது, அனைவருக்கும் கிடைக்கக் கூடிய வகையில் மலிவு விலையில் விற்பனை செய்வது உள்ளிட்டவை இத்திட்டத்தின் மற்ற இலக்குகளாகும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT