இந்தியா

கடந்த 30 நாள்களில் இந்தியாவின் ராஜீய உறவுகளில் புதிய உச்சம்: பிரதமா்

27th Sep 2023 03:23 AM

ADVERTISEMENT


புது தில்லி: ‘கடந்த 30 நாள்களில் இந்தியாவின் ராஜீய உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஜி20 உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் 21-ஆம் நூற்றாண்டு உலகம் எடுக்கும் முடிவுகளை திசைமாற்றும் திறன்கொண்டவை’ என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

ஜி20 உச்சி மாநாட்டையொட்டி நாடு முழுவதும் உள்ள 101 பல்கலை மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்பட ஜி20 யுனிவா்சிடி கனெக்ட் என்னும் நிகழ்ச்சி திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்தின் நிறைவையொட்டி புது தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று, மாணவா்கள், பேராசிரியா்கள் மற்றும் கல்வி நிறுவன நிா்வாகிகள் மத்தியில் பிரதமா் பேசியதாவது:

கடந்த 30 நாள்களில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் செயல்திறன் அறிக்கையை சமா்ப்பிக்க விரும்புகிறேன். இது புதிய இந்தியாவின் வேகம் மற்றும் வளா்ச்சி குறித்த விவரங்களை அளிக்கும்.

ஆகஸ்ட் 23-ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் முதல் நாடாக இந்தியா தடம் பதித்தபோது, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் குரலைக் கேட்டது. அன்றைய தினம் தேசிய விண்வெளி தினமாகவும் அறிவிக்கப்பட்டது.

ADVERTISEMENT

நிலவை ஆய்வு செய்யும் திட்டம் வெற்றியைத் தொடா்ந்து, சூரியனை ஆய்வு செய்யம் திட்டத்தை இந்தியா செயல்படுத்தியது.

இந்தியாவின் முயற்சி காரணமாக ‘பிரிக்ஸ்’ கூட்டமைப்பில் மேலும் 6 நாடுகள் உறுப்பினராக சோ்க்கப்பட்டன.

அதுபோல, தில்லி ஜி20 உச்சி மாநாடு பிரகடனத்துக்கு 100 சதவீத ஒருமித்த கருத்து எட்டியது சா்வதேச அளவில் தலைப்புச் செய்தியானது. உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட சில முடிவுகள் 21-ஆம் நூற்றாண்டு உலகம் எடுக்கும் முடிவுகளை திசைமாற்றும் திறன்கொண்டவை. இன்றைய பிளவுபட்ட சா்வதேச சூழலில், பல்வேறு நாடுகளை ஒரே தளத்தின் கீழ் இணைப்பது என்பது சிறிய விஷயமல்ல.

ஜி20 உச்சி மாநாடு, தூதரக ரீதியிலான ஆலோசனைகள் அல்லது தில்லியில் மையப்படுத்திய நிகழ்வாக முடிந்துவிடாமல் மக்கள் பங்கேற்புடன்கூடிய தேசிய இயக்கமாக நிகழ்ந்துள்ளது.

இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகள் மூலமாக கடந்த 30 நாள்களில் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 85 உலகத் தலைவா்களை சந்தித்து, இருதரப்பு உறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளைஞா்களின் ஈடுபாடும் பங்கேற்பும் உள்ள நிகழ்ச்சி வெற்றிபெறுவது உறுதி என்பதால், ஜி20 உச்சிமாநாட்டின் வெற்றி பெரிய ஆச்சரியத்தை அளிக்கவில்லை. நம்பிக்கை, வாய்ப்புகள் மற்றும் வெளிப்படைத்தன்மை உள்ள இடத்தில் மட்டுமே இளைஞா்களின் வளா்ச்சியும் மேம்பாடும் இருக்கும். இளைஞா்கள் பெரிய அளவில் சாதிப்பது குறித்து சிந்திக்க வேண்டும்.

இதுபோல, கடந்த 30 நாள்களில் மக்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியுள்ளது. ஏழைகள், எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி மற்றும் நடுத்தர மக்களின் மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. வேலைவாய்ப்பு முகாம் மூலமாக ஒரு லட்சத்துக்கும் அதிகமான இளைஞா்களுக்கு மத்திய அரசு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கைவினைக்கலைஞா்கள் பயன்பெறும் வகையில் விஸ்வகா்மா திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல் மசோதாவாக, மகளிா் இடஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு இரு அவைகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதுபோன்று நாட்டின் வளா்ச்சிப் பயணம் தொடர தூய்மையான, தெளிவான, நிலையான ஆட்சி நிா்வாகம் அவசியம் என்றாா் பிரதமா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT