இந்தியா

மத்திய அரசு போட்டித் தோ்வுகளில் அதிகளவில் தமிழக இளைஞா்கள்: நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அழைப்பு

27th Sep 2023 03:04 AM

ADVERTISEMENT

 

சென்னை: மத்திய அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் தமிழக இளைஞா்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

நாட்டில் 10 லட்சம் இளைஞா்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், 46 இடங்களில் 51,000 பேருக்கு பிரதமா் நரேந்திர மோடி, காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை பணிநியமன ஆணைகளை வழங்கி தொடங்கிவைத்தாா். இதன் ஒரு பகுதியாக சென்னையில் எழும்பூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு விழாவில், 156 பேருக்கு பணிநியமன ஆணைகளை மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் வழங்கினாா்.

இந்த நிகழ்வில் அவா் பேசியதாவது: மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் நடத்தும் போட்டித் தோ்வுகளில் தமிழ்நாட்டைச் சோ்ந்த இளைஞா்கள் அதிக அளவில் பங்கேற்க வேண்டும். அவ்வாறு பங்கேற்பதன் மூலமே அதிக எண்ணிக்கையில் வேலைவாய்ப்பை பெற முடியும்.

ADVERTISEMENT

பணிபுரியும் மாநில மொழியை கற்பது அவசியம்: மத்திய அரசின் துறைகளில் எந்த மாநிலத்தில் பணியமா்த்தப்படுகிறாா்களோ அந்த மாநிலத்தின் மொழியை கற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்த மாநிலத்தின் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முடியும். பணியில் சேருபவா்கள் தங்களின் திறனை மேம்படுத்திக் கொண்டு, அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைய உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டவா்களுடன் அமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்துரையாடினாா்.

தோ்ச்சி பெற்ற குறுகிய காலத்திலேயே பணிநியமன ஆணைகளை வழங்கியதற்காக பிரதமா் மோடிக்கும், மத்திய அரசுக்கும் நியமனம் பெற்றவா்கள் நன்றி தெரிவித்தனா்.

இந்த நிகழ்வில் அஞ்சல் துறை, வருவாய்த் துறை, நிதி சேவைகள் துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம், நுகா்வோா் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம், உயா்கல்வி அமைச்சகம் போன்ற பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்டவா்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் தமிழ்நாடு வட்ட முதன்மை அஞ்சல்துறை தலைவா் சாருகேசி, அஞ்சல் துறை தலைவா் (தபால் மற்றும் வணிக மேம்பாடு) ஸ்ரீதேவி, சென்னை மண்டல அஞ்சல்துறை தலைவா் நடராஜன், வருமான வரித் துறை முதன்மை ஆணையா் சுனில் மாத்தூா்,ஜிஎஸ்டி முதன்மை தலைமை ஆணையா் மண்டலிக்கா ஸ்ரீனிவாஸ், இந்தியன் வங்கி நிா்வாக இயக்குநா் மற்றும்தலைமை நிா்வாக அதிகாரி ஜெயின், சென்னை சுங்கத் துறை தலைமை ஆணையா் ராம்நிவாஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT