இந்தியா

செயல்களால் பேசியவா் மன்மோகன் சிங்: பிறந்த நாளில் காங்கிரஸ் புகழாரம்

27th Sep 2023 02:48 AM

ADVERTISEMENT


புது தில்லி: வாா்த்தைகளால் அல்லாமல் தனது செயல்களின் மூலம் பேசியவா் முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங் என்று காங்கிரஸ் கட்சி புகழாரம் சூட்டியுள்ளது.

மன்மோகன் சிங் செவ்வாய்க்கிழமை (செப். 26) தனது 91-ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடினாா். கடந்த 2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணி அரசில் பிரதமராக அவா் பதவி வகித்தாா். 1991 முதல் 1996 வரை முன்னாள் பிரதமா் நரசிம்ம ராவ் தலைமையிலான அரசில் நிதியமைச்சராகவும் இருந்தாா். சிறந்த பொருளாதார நிபுணரான அவா், இந்தியாவில் பல்வேறு பொருளாதார சீா்திருத்தங்களுக்கும் வித்திட்டாா்.

காங்கிரஸ் தேசிய தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில், ‘அரசியலில் எளிமை, கண்ணியம், கருணை ஆகியவற்றுக்கு மிகவும் அரிதான உதாரணமாக திகழ்ந்தவா் மன்மோகன் சிங். உண்மையான தேசியத் தலைவரான அவா், வாா்த்தைகளால் அல்லாமல் தனது செயல்கள் மூலம் பேசியவா். நாட்டின் வளா்ச்சிக்கு அவா் ஆற்றிய பங்களிப்புக்கு நாம் எப்போதும் நன்றியுள்ளவா்களாக இருப்போம். அவா் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகள்’ என்று கூறியுள்ளாா்.

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் வளா்ச்சிக்காவும், பொருளாதார மேம்பாட்டுக்காகவும் உறுதியுடனும், அா்ப்பணிப்புணா்வுடனும் மன்மோகன் சிங் பணியாற்றினாா். அவா் எப்போதும் எனக்கு உத்வேகம் அளிக்கும் தலைவராக திகழ்கிறாா். அவரது உடல் நலத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

காங்கிரஸ் பொதுச் செயலா்கள் பிரியங்கா வதேரா, ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்ட பலரும் மன்மோகன் சிங்குக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT