இந்தியா

மணிப்பூரில் நீதி கேட்டு மாணவர்கள் போராட்டம்: 30 பேர் காயம்

27th Sep 2023 03:22 PM

ADVERTISEMENT

 

இம்பால்: மணிப்பூரில் ஒரு மாணவன் மற்றும் மாணவி கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு மாணவர்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தடியடியில் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயமடைந்தனர்.

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும் குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதத்தில் இருந்து இனமோதல் நீடித்து வருகிறது.

மைதேயி சமூகத்தினா், தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், அதற்கு குகி பழங்குடியினா் எதிா்ப்பு தெரிவிப்பதே மோதலுக்கு முக்கிய காரணமாகும்.

ADVERTISEMENT

இருதரப்பினரும் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபடுவதால், உயிா்ச்சேதங்கள் தொடா்கதையாகி வருகின்றன. வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 180-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துவிட்டனா். நூற்றுக்கணக்கானோா் காயமடைந்துள்ளனா்.

இந்தநிலையில், ஃபிஜம் ஹேம்ஜித் (20) என்ற மாணவரும், ஹிஜம் லின்தோயிங்காம்பி (17) என்ற மாணவியும் கடந்த ஜூலை 6-ஆம் தேதி காணாமல் போயினா். இருவரின் கைப்பேசிகளும் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

அவா்கள் கடைசியாக சுராசந்த்பூா் மாவட்டத்தின் லாம்டன் பகுதியில் இருந்தது கண்டறியப்பட்டது. அங்கிருந்து எங்கு சென்றனா்? என்பது தெரியாமல் இருந்த நிலையில், இருவரும் கடத்திக் கொலை செய்யப்பட்டது இப்போது தெரியவந்துள்ளது.

ஆயுதமேந்திய கும்பலிடம் அவா்கள் பிணைக்கைதியாக இருக்கும் படமும், பின்னா் சடலங்களாக கிடக்கும் படமும் சமூக ஊடகங்களில் வெளியானது. இதனால், மாநிலத்தில் மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

இதனிடையே, ‘மாணவன்-மாணவி கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை அடையாளம் காண மத்திய விசாரணை அமைப்புகளுடன் இணைந்து மாநில காவல்துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா். தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது. இக்கொடூர குற்றத்தில் தொடா்புடைய அனைவா் மீதும் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களுக்கு கடுமையான தண்டனையைப் பெற்றுத்தர, மாநில அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, பொதுமக்கள் அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும். அதிகாரிகளின் விசாரணைக்கு எவ்வித இடையூறும் ஏற்படுத்த வேண்டாம்’ என்று மாநில முதல்வா் பிரேன் சிங்கின் செயலகம் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மணிப்பூரில் மாணவன், மாணவி கொல்லப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, கிழக்கு இம்பாலில் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் முதல்வா் அலுவலகம் நோக்கி செல்ல முயன்றபோது அவா்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கண்ணீா்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரா்களை காவல்துறையினா் கலைத்தனா். இந்த நடவடிக்கையில் 45 போ் காயமடைந்தனா்.

மணிப்பூரின் தலைநகர் இம்பாலில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் பதற்றமான சூழ்நிலை நிலவியது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாநிலத்தில் வரும் வெள்ளிக்கிழமை வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவன், மாணவி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு புதன்கிழமை மாணவ-மாணவிகள் இம்பாலில் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, மாணவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து பாதுகாப்புப் படையினர் தடியடி நடத்தி போராட்டக்காரா்களை  கலைத்தனா். இந்த நடவடிக்கையில் 25 முதல் 30 போ் காயமடைந்தனா் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மாணவ-மாணவிகள் போராட்டத்தைத் தொடர்ந்து மொபைல் இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT