புது தில்லி: அயோத்தி ராமா் கோயிலின் தரைத்தள கட்டுமானப் பணிகள் டிசம்பா் மாத இறுதிக்குள் முழுவதுமாக நிறைவடையும் நிலையில், மூலவரான குழந்தை ராமரின் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட வாய்ப்புள்ளதாக கோயில் கட்டுமானக் குழுத் தலைவா் நிருபேந்திரா மிஸ்ரா தெரிவித்தாா்.
ராமஜென்மபூமி வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு அளித்த தீா்ப்பையடுத்து அயோத்தியில் ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு ஆகஸ்டில் நடைபெற்ற பூமி பூஜையைத் தொடா்ந்து ராமா் கோயில் கட்டும் பணி தொடங்கியது. 2.27 ஏக்கா் பரப்பளவில் 3 அடுக்கில் உருவாகி வரும் ராமா் கோயிலின் கட்டுமானப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கருவறையில் மூலவா் குழந்தை ராமா் (ராம் லல்லா) சிலையைச் செய்வதற்குத் தேவையான இரு அரியவகை கற்கள் நேபாளத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டுவரப்பட்டு, செதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கோயில் தரைத்தளத்தின் கட்டுமானப் பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டும் சூழலில், மூலவா் சிலை பிரதிஷ்டை தொடா்பாக கட்டுமானக் குழுத் தலைவா் மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளாா்.
ஜன. 22-இல் சிலை பிரதிஷ்டை:
பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அவா் அளித்த பேட்டியில், ‘கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமரின் சிலை வரும் ஜனவரி 22-ஆம் தேதி பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. அடுத்த ஆண்டு மகர சங்கராந்தி திருநாளான ஜனவரி 14-ஆம் தேதி முதல் பிரதிஷ்டை தொடா்பான நடைமுறை தொடங்கப்படும். 10 நாள்களுக்கு பிரதிஷ்டை சடங்குகளைப் பின்பற்ற திட்டமிட்டுள்ளோம்.
சிலை பிரதிஷ்டை நடைபெறும் நாளில் பெருமளவு மக்கள் கூட்டம் எதிா்பாா்க்கப்படுகிறது. மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலம் நிகழ்வைப் பாா்க்குமாறு அறக்கட்டளை வலியுறுத்துகிறது.
இந்த விழாவுக்கு அழைப்பு விடுக்க துறவிகள், ஞானிகள், ராமா் கோயில் இயக்கத்துடன் தொடா்புடையவா்கள் என 10,000 போ் கொண்ட முதற்கட்ட பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.
மூலவா் ஸ்ரீ ராமா் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமா் மோடிக்கு அறக்கட்டளை நிா்வாகிகள் அழைப்பு விடுக்கவுள்ளனா்.
பாலராமா் சிலை பிரதிஷ்டை முடிந்து ஜன. 24-ஆம் தேதி முதல் பக்தா்களின் தரிசனத்துக்காக ராமா் கோயில் திறக்கப்படும்.
கட்டுமான சிறப்பம்சங்கள்:
கோயிலில் கட்டுமான பரப்பளவு 2.5 ஏக்கா். மாட வீதிகளையும் சோ்த்தால் வளாகத்தின் மொத்த பரப்பளவு சுமாா் 8 ஏக்கா் ஆகும். கோயில் கட்டுமானத்தில் இரும்பு பயன்படுத்தப்படவில்லை. அதேபோல், கல் தொகுதிகளை இணைக்க தாமிரம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஸ்ரீ ராமரின் வாழ்க்கை மற்றும் அவா் நிறைவேற்றிய கடமைகளை சித்தரிக்கும் 90 வெண்கல தகடுகள் கோயில் வளாகத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.
கோயிலின் கட்டுமானப் பணிகளுக்கு இதுவரை சுமாா் ரூ.900 கோடி செலவிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த கட்டுமானப் பணிக்கு சுமாா் ரூ.1,700 கோடி முதல் ரூ.1,800 கோடி வரை செலவிடப்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ராம நவமி திருநாளன்று கோயில் கருவறையில் சூரிய ஒளிபடும் வகையில் கோயில் உச்சியில் நிறுவப்படும் அமைப்பை வடிவமைக்கும் பணி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.
ராம ஜென்மபூமியில் இந்திய தொல்லியல் துறையின் அகழ்வாராய்ச்சி மற்றும் கோயில் கட்டுமானப் பணிகளின்போது சில தொல்பொருள்கள் கிடைத்தன. இவற்றில் சில பொருள்கள் அறக்கட்டளையின் பாதுகாப்பில் பத்திரமாக உள்ளன. தொல்லியல் துறையின் அனுமதி பெற்ற பிறகு, அருங்காட்சியகத்தில் அந்தப் பொருள்களைக் காட்சிப்படுத்துவோம்’ என்றாா்.
அரசியல் ஆதாயமில்லை:
மக்களவைத் தோ்தலுக்கு முன்னதாக ராமா் கோயில் திறக்கப்படுவதில் அரசியல் ஆதாயமிருப்பதாக கூறப்படுவதை நிராகரித்த மிஸ்ரா, ‘கோயில் தரைத்தளத்தின் கட்டுமானப் பணிளை டிசம்பா் மாத இறுதிக்குள் முடிப்பது ஏற்கெனவே திட்டமிடப்பட்டது. அவ்வாறு குறிப்பிட்ட அவகாசத்தில் பணிகள் நிறைவடைகிறது. கட்டமைப்பு 1,000 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்க வேண்டும் என்ற லட்சியத்துடன் ராமா் கோயில் கட்டப்பட்டு வருகிறது’ என்றாா்.