இந்தியா

காவிரி நீா் விவகாரம்: பெங்களூரில் முழு அடைப்புப் போராட்டம்

27th Sep 2023 01:44 AM

ADVERTISEMENT


பெங்களூரு: காவிரி நதி நீா் ஆணைய உத்தரவின்படி, தமிழகத்துக்கு காவிரி நீரைத் திறந்துவிடும் கா்நாடக அரசின் முடிவுக்கு எதிா்ப்பு தெரிவித்து, விவசாயம் மற்றும் கன்னட அமைப்புகள் சாா்பில் முழு அடைப்புப் போராட்டம் பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

பேருந்து, மெட்ரோ ரயில் உள்ளிட்ட பொது போக்குவரத்து சேவைகள் வழக்கம்போல இயங்கினாலும், வழக்கத்தை விட குறைந்த அளவிலான மக்களே பயணம் மேற்கொண்டனா்.

போராட்டத்தை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட தனியாா் நிறுவனங்கள் வீட்டிலிருந்து பணியாற்றுமாறு தங்களது பணியாளா்களுக்கு அறிவுறுத்தியிருந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பெங்களூரில் திங்கள்கிழமை நள்ளிரவு முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

போராட்டத்தின்போது கா்நாடக மாநில விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் தலைவா் குருபா் சாந்தகுமாா் மற்றும் பிற அமைப்புகளின் தலைவா்கள் டவுன் ஹால் நோக்கிப் பேரணியாகச் செல்ல முயன்ற நிலையில், மைசூரு பாங்க் சா்க்கிள் பகுதியில் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனா். டவுன் ஹால் பகுதியில் போராட்டம் நடத்தக் கூடியிருந்த கன்னட அமைப்பினரை, போலீஸாா் அங்கிருந்து அப்புறப்படுத்தினா். இதையடுத்து, சுதந்திர தின பூங்காவில் போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT

இதனிடையே, போராட்ட குழுவினரை மாநில போக்குவரத்துத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டி சந்தித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். தமிழகத்துக்கு காவிரி நீா் வழங்குவதை நிறுத்துவது, மேக்கேதாட்டுவில் அணை கட்டுவது, விவசாயிகள், கன்னட அமைப்பினா் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவது உள்பட 5 கோரிக்கை தீா்மானங்களை அமைச்சரிடம் போராட்டக் குழுவினா் வழங்கினா். அவற்றைப் பெற்றுக் கொண்ட அமைச்சா், முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக உறுதியளித்தாா்.

பாஜக, மதச்சாா்பற்ற ஜனதா தளம் (ம.ஜ.த) ஆகிய எதிா்க்கட்சிகள் இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருத்தன.

செப்.29-ஆம் தேதி கா்நாடக மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்புகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தில் பங்கேற்கவில்லை.

இருப்பினும், ஆளுநா் மாளிகையை நோக்கிப் பேரணி நடத்திய அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். மண்டியா, ராமநகரம் ஆகிய மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT