மணிப்பூரில் காணாமல் போன மாணவர்களின் உடல்கள் புகைப்படங்களாக வெளியாகியுள்ள நிலையில், குற்றங்கள் தொடர அனுமதிக்கப்படுவதற்கு மத்திய அரசு வெட்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
மணிப்பூரில் கடந்த நான்கு மாதங்களாக இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. தற்போது நிலைமை ஓரளவு கட்டுக்குள் வந்துள்ள நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் காணாமல் போன பிஜாம் ஹெம்ஜித்(20), ஹிஜாம் லிந்தோயிங்கம்பி(17) ஆகிய இரு மாணவர்கள் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணைக் கைதியாகப் பிடித்துவைத்திருப்பது போன்றும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
படிக்க: அடுத்த 3 மணி நேரத்தில் 28 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி எக்ஸில் கூறியது,
இக்கலவரத்தால் அதிகம் பாதிக்கப்படுவது குழந்தைகள்தான். அவர்களைப் பாதுகாக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வது நமது கடமை. மணிப்பூரில் நடக்கும் கொடூரமான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கு மத்திய அரசு வெட்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.