இந்தியா

ராம்நாத் கோயங்கா இலக்கிய விருது பெற்ற பெருமாள் முருகன், அனிருத், தேவிகா ரெகே!

25th Sep 2023 03:58 PM

ADVERTISEMENT

 

‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (டிஎன்ஐஇ) குழுமம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் இலக்கிய விருதினை முதன்முதலாகப் பெற்றிருக்கிறார் தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகன். 

‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ (டிஎன்ஐஇ) குழுமம் சாா்பில் புவனேசுவரத்தில் ஒடிஸா இலக்கியத் திருவிழா 2 நாள்கள் நடைபெற்றது.

இந்த விழாவில், சுதந்திரப் போராட்ட வீரரும், இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை நிறுவனருமான ராம்நாத் கோயங்கா நினைவாக ‘ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான்’ விருது அறிமுகம் செய்யப்பட்டது.

ADVERTISEMENT

இந்த விருது தமிழ் இலக்கியத்துக்கான பெரும் பங்களிப்புக்காக எழுத்தாளர்  பெருமாள் முருகனுக்கு வழங்கப்பட்டது. 

மேலும் சிறந்த அபுனைவுக்காக எழுத்தாளர் அனிருத் கனிஷெட்டிக்கும் புனைவுக்காக தேவிகா ரெகேவுக்கும் விருது மற்றும் தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. 

பெருமாள் முருகன்

எழுத்தாளர் பெருமாள் முருகன், எல்லைகளைக் கடந்து பலரது இதயங்களைத் தொட்டு தமிழ் இலக்கிய வரலாற்றில் அவரது பெயர் என்றென்றும் பொறிக்கப்படும் அளவிற்கு ஒரு மரபை உருவாக்கியுள்ளார். 

2014ல் பெருமாள் முருகனின் 'பூக்குழி' நாவல் வெளியாகி அதன் கதை உலகத்தையே தகிக்க வைத்தது. 

மதிப்புமிக்க சர்வதேச புக்கர் பரிசுப் பட்டியலில் சேர்க்கப்பட்ட முதல் தமிழ் நாவல் என்ற சாதனையை இந்த நாவல் பெற்றது. இது பெருமாள் முருகனின் கதைசொல்லலுக்கு உலகளாவிய சான்றாகும்.

ஆனால் பெருமாள் முருகனின் இலக்கியப் பயணம் அவ்வளவு சுமுகமாக இல்லை. 2015 ஆம் ஆண்டில், அவரது 'மாதொருபாகன்' நாவல் வெளியானபோது பல இன்னல்களை எதிர்கொண்டார். 

இதையும் படிக்க | பெருமாள் முருகனுக்கு ராம்நாத் கோயங்கா சாகித்திய சம்மான் விருது! 

குழந்தை இல்லாத ஒரு பெண்ணின் கதையை கொங்கு வட்டாரத்திலுள்ள  ஊரில் நடப்பதாக ஒரு கதையை அவர் துணிந்து அந்த நாவலின் மூலம் உலகத்துக்கு வெளிச்சம் போட்டுக் காட்டினார். வரலாற்று உண்மைகளைக் கொண்ட கதை எனினும் தங்கள் ஊரையும் ஊர் பெண்களையும் அவமானப்படுத்தியாக பெருமாள் முருகன் மீது உள்ளூர் மக்களே எதிர்ப்பைக் காட்டினர். 

தொடர் எதிர்ப்புகளால் அவர் தனது ஆசிரியர் பணியைக் கைவிட்டு வேறு ஊருக்குச் செல்ல முடிவெடுத்தார். தனது புத்தங்களை எரித்துவிடுமாறு வாசகர்களிடம் தெரிவித்ததுடன் 'எழுத்தாளர் பெருமாள் முருகன் இறந்துவிட்டார்' என்று தைரியமாக அறிவித்தார். 

ஆனால் 2016 ஜூலை மாதம், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

மேலும் அர்த்தநாரி, ஆலவாயன், பூனாச்சி அல்லது ஒரு வெள்ளாட்டின் கதை, 'கூளமாதாரி' உள்ளிட்ட அவரது பல நாவல்களும் பல சிறுகதைத் தொகுப்புகளும் கவிதைத் தொகுப்புகளும் புகழ்பெற்றவை. 

அவரது பல நூல்கள் தற்போது ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் அதிகளவில் மொழி பெயர்க்கப்பட்டு வருகிறது. 

அனிருத் கனிஷெட்டி

அனிருத் கனிசெட்டி தனது 28 வயதில் தென்னிந்தியாவின் வரலாறு உள்ளிட்ட பல விஷயங்களைப் பற்றிய தனது ஆழ்ந்த நுண்ணறிவு மூலம் மக்களின் இதயங்களையும் மனதையும் கவர்ந்துள்ளார்.

ஒடிஸி மொழியில் அவரது முதல் தலைசிறந்த படைப்பு 'லார்ட்ஸ் ஆஃப் தி டெக்கான்: சாளுக்கியர்கள் முதல் சோழர்கள் வரை' (Lords of the Deccan: Southern India from Chalukyas to Cholas). இந்த புத்தகம் வாசகர்களிடையே பரவலான பாராட்டைப் பெற்றுள்ளது. சாகித்ய அகாதெமியின் யுவ புரஸ்கார் விருதினையும் பெற்றது. 

இதையும் படிக்க | 'இலக்கியத்தின் வல்லமையை நம்பிய ராம்நாத் கோயங்காஜி'

இவரது இந்த புத்தகம் ஓடிடி தளத்தில் வெப் சீரிஸாகவும் வெளியாகவுள்ளது. பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ராணா டகுபதி, அனிருத்தின் திறமையை திரையில் கொண்டுவரவிருக்கிறார். 

இவர், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல பத்திரிகைகளில் கட்டுரைகளை எழுதியுள்ளார். 

தேவிகா ரெகே

'குவாட்டர்லைஃப்' (Quarterlife) என்ற தனது முதல் நாவல் மூலமாக 2023 ஆம் ஆண்டின் இலக்கிய நட்சத்திரமாகியுள்ளார் தேவிகா ரெகே. 

இவரது முதல் நாவலின் முதிர்ச்சி வாசகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. மனிதர்களின் ஆழ்மனம் குறித்த அனுபவிக்க எழுத்தாளர்களின் படைப்புகள் இந்த புத்தகத்தில் எதிரொலிக்கிறது. 

தார்மிக ரீதியாகவும் அதற்கு அப்பாற்பட்டும் சிக்கலான தருணங்களில், மனிதர்களின் ஆழ்மனதைப் பற்றி தெளிவாக ஆழமாக எடுத்துரைத்திருக்கிறார். 

புணேவில் பிறந்த தேவிகா ரெகே, கல்விக்காக அமெரிக்கா சென்றாலும் நாட்டின் மாற்றத்திற்காக இந்தியா திரும்பினார்.

தனது முதல் நாவலின் மூலம், வாசகர்களுக்கு ஒரு இலக்கிய பொக்கிஷத்தை வழங்கியதுடன் மட்டுமின்றித் தனிப்பட்ட போராட்டங்கள் மற்றும் அரசியல் அலைகளிலும் அவர் சிக்கி மீண்டிருக்கிறார். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT