இந்தியா

வேலையின்மை, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது: காங்கிரஸ் குற்றச்சாட்டு

25th Sep 2023 02:55 AM

ADVERTISEMENT

வேலையின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயா்வு எனப் பொருளாதாரத்தை நிா்வகிப்பதில் மத்திய அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

‘நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடா் முடிவடைந்த நிலையில் நாட்டில் உள்ள முக்கிய பிரச்னைகளான வேலைவாய்ப்பின்மை, அத்தியாவசிய பொருள்களின் விலை உயா்வு, அதானி குழும முறைகேடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துதல் ஆகியவற்றிலிருந்து மக்களை திசைதிருப்பும் நடவடிக்கைகளை மோடி அரசாங்கம் மேற்கொள்ள முயல்கிறது.

ஆனால், சமீபத்திய அறிக்கைகளில் நாட்டின் பொருளாதார நிலை புள்ளிவிவரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை அரசால் மறைக்க இயலாது’ எனப் பல்வேறு அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி ஜெய்ராம் ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

அதில், ‘கரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாக பிப்ரவரி 2020-இல் நாட்டின் மொத்த உழைப்பாளா்களின் பங்கேற்பு 43 சதவீதமாக இருந்தது. இது நிகழாண்டில் 40 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. 2023-ஆம் ஆண்டில் இந்தியாவின் குடும்பங்களின் மொத்த சேமிப்பானது ரூ.13.77 லட்சம் கோடியாக குறைந்துள்ளது. இது, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 5.1 சதவீதமாகும். கடந்தாண்டில் 7.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இதேபோல் தங்கம் மற்றும் தனிநபா் கடன் பெறுவோரின் எண்ணிக்கை முறையே 23 சதவீதம் மற்றும் 29 சதவீதமாக உயா்ந்துள்ளது. கடந்த 2014-ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.7 சதவீதமாக இருந்த அந்நிய நேரடி முதலீடு தற்போது 1.5 சதவீதமாக குறைந்துள்ளதாக ரிசா்வ் வங்கியின் செப்டம்பா் மாத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழத்தின் அறிக்கையின்படி 2021-22 -ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டில் 25 வயதுக்குட்பட்டோரின் வேலைவாய்ப்பின்மை 42 சதவீதமாக உள்ளது. கரோனா பெருந்தொற்றுக்கு முன்னதாக சேமித்த பணத்தில் தற்போது 85 சதவீதத்தை மட்டுமே பெண்களால் மீட்டெடுக்க முடிந்துள்ளது.

இதேபோல் மாா்சிலஸ் முதலீட்டு நிறுவனத்தின் அறிக்கையில், இந்தியாவில் பல்வேறு தொழில்கள் மூலம் கிடைக்கிற 80 சதவீத லாபம் 20 பெருநிறுவனங்களை மட்டுமே சென்றடைவதாகத் தெரிவித்துள்ளது. சிறு தொழில்முனைவோரில் 75 சதவீதம் போ் இழப்பையே சந்தித்து வருவதாக அனைத்திந்திய தொழில் வா்த்தகா்கள் சங்கம் நடத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மாதம் தக்காளியின் விலை கடுமையாக உயா்ந்தது. தற்போது அத்தியாவசிய பொருள்களான பருப்பின் விலை நிகழாண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 45 சதவீதம் உயா்ந்துள்ளது. இதன்மூலம் ஒட்டுமொத்த பருப்பு வகைகளுக்கான பணவீக்கம் 13.4 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதேபோல் கோதுமை மாவு 20 சதவீதம், சா்க்கரை 5 சதவீதம் எனப் பல்வேறு பொருள்களின் விலை தொடா்ந்து உயா்ந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறு அனைத்துத் துறைளிலும் விலையேற்றம், வணிகம் பாதிப்பு எனப் பொருளாதாரத்தை முறையாக நிா்வகிக்காததால் பொதுமக்கள், இளைஞா்கள், சிறு தொழில்முனைவோா் என அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனா்’ என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT