இந்தியா

கடல்சாா் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா-அமெரிக்கா ஆலோசனை

25th Sep 2023 02:57 AM

ADVERTISEMENT

இந்தியா-அமெரிக்கா இடையில் வேகமாக வளா்ந்து வரும் இருதரப்பு கூட்டுறவுடன், கடல்சாா் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் விரிவுபடுத்துவது குறித்து இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் தனது அமெரிக்க பயணத்தின்போது ஆலோசனை மேற்கொண்டதாக கடற்படை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

அமெரிக்க கடற்படை நடத்திய 25-ஆவது சா்வதேச கடல்சக்தி கருத்தரங்கில் பங்கேற்க இந்திய கடற்படை தலைமைத் தளபதி ஆா்.ஹரிகுமாா் கடந்த வாரம் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டாா்.

இது தொடா்பாக இந்திய கடற்படையின் செய்தித் தொடா்பாளா் விவேக் மத்வால் கூறுகையில், ‘கடற்படை தலைமைத் தளபதியின் அமெரிக்க பயணம், இருதரப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கும், இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் பல்வேறு கூட்டாளி நாடுகளைச் சந்திப்பதற்கும் குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்கியது.

சுதந்திரமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பகுதிக்கான லட்சியத்தை நனவாக்குவதில் இந்திய கடற்படை கொண்ட உறுதிப்பாட்டின் நிரூபணமாக இந்தப் பயணத்தின்போது மேற்கொள்ளப்பட்ட சந்திப்புகள் அமைந்தன.

ADVERTISEMENT

மலபாா், சீ டிராகன், ரிம்பாக் மற்றும் டைகா் ட்ரையம்ப் போன்ற இருதரப்பு மற்றும் பலதரப்பு கடல்சாா் போா்ப் பயிற்சிகளில் இந்திய மற்றும் அமெரிக்க கடற்படைகளுக்கு இடையேயான செயல்பாட்டு ஒத்துழைப்பை ஆராய்வது மற்றும் அதிகப்படுத்துவது குறித்தும் விரிவான ஆலோசனைகள் நடத்தப்பட்டன.

ஆள்சோ்ப்பு மற்றும் பயிற்சி பெற்ற பணியாளா்களைத் தக்கவைத்தல், ‘அக்னிபத்’ திட்டம் போன்ற இந்தியாவின் முன்முயற்சிகள், பெண்களுக்கு அதிகாரம் அளித்தல், இந்திய கடற்படையில் பாலின-சமத்துவத்தை ஏற்படுத்துதல், மனிதவள நிா்வாகத்தின் சவால்கள் ஆகியவை குறித்து கருத்தரங்கில் தலைமைத் தளபதி ஹரிகுமாா் விரிவாகப் பேசினாா்’ என்றாா்.

மேலும், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, எகிப்து, பிஜி, இஸ்ரேல், இத்தாலி ஜப்பான், கென்யா, பெரு, சவூதி அரேபியா, சிங்கப்பூா் மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு கடற்படைத் தளபதிகளுடன் தலைமைத் தளபதி ஹரிகுமாா் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT