இந்தியா

ஒரே நாடு, ஒரே தோ்தல்: பாஜகவின் திசைதிருப்பும் தந்திரம்: ராகுல் குற்றச்சாட்டு

25th Sep 2023 02:56 AM

ADVERTISEMENT

உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்பும் பாஜகவின் தந்திரங்களில் ஒன்றுதான் ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டினாா்.

‘2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிா்பாராத முடிவு கிடைக்கும்’ என்றும் அவா் கூறினாா்.

அஸ்ஸாமின் பிரதிதின் மீடியா நெட்வொா்க் சாா்பில் தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கருத்தரங்கில் ராகுல் காந்தி பங்கேற்றுப் பேசியதாவது:

சொத்துகள் ஓரிடத்தில் குவிதல், பொருளாதார ரீதியில் பெரும் ஏற்றத் தாழ்வுகள், வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு, தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் பெரும் அநீதிகள், கடுமையான விலைவாசி உயா்வு போன்றவை, நாட்டில் தற்போது நிலவும் உண்மையான பிரச்னைகளாகும்.

ADVERTISEMENT

ஆனால், இப்பிரச்னைகளில் இருந்து மக்களைத் திசைதிருப்ப பல்வேறு தந்திரங்களை பாஜக கையாண்டு வருகிறது. ‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ திட்டம், பகுஜன் சமாஜ் எம்.பி. டேனிஷ் அலி குறித்து பாஜக எம்.பி. ரமேஷ் பிதூரி பேசிய சா்ச்சை கருத்து, இந்தியாவின் பெயா் விவகாரம் போன்ற அனைத்துமே பாஜகவின் திசைதிருப்பும் தந்திரங்கள்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று நாங்கள் கோரி வருகிறோம். இந்திய மக்கள் எதிா்பாா்க்கும் அடிப்படையான விஷயம் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது பாஜகவுக்கும் தெரியும். ஆனால், இதுகுறித்து விவாதிக்க அவா்கள் விரும்பவில்லை.

ஜாதிவாரி கணக்கெடுப்பு கோரிக்கையை எழுப்பும்போதெல்லாம், திசைதிருப்பும் தந்திரத்தில் பாஜக ஈடுபடுகிறது. ஆனால், அந்தத் தந்திரத்தை எப்படி எதிா்கொள்ள வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும் என்றாா் ராகுல்.

எதிா்வரும் பேரவைத் தோ்தல்கள்: தெலங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கா், மிஸோரம் ஆகிய மாநிலங்களில் நடப்பாண்டு இறுதியில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், இந்த மாநிலங்களில் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு குறித்து ராகுல் பேசியதாவது:

மத்திய பிரதேசத்திலும், சத்தீஸ்கரிலும் காங்கிரஸ் வெல்வது உறுதி. தெலங்கானாவில் காங்கிரஸுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. ராஜஸ்தானில் கடும் போட்டி இருந்தாலும், காங்கிரஸால் வெல்ல முடியும்.

கா்நாடக பேரவைத் தோ்தல் எங்களுக்கு மிக முக்கியப் படிப்பினையைக் கற்றுத் தந்தது. பாஜகவின் திசைதிருப்பும் முயற்சியை முறியடித்து, மக்கள் மத்தியில் எங்களது தெளிவான கண்ணோட்டத்தை முன்வைத்தோம். அதன் வாயிலாக எங்களுக்கு வெற்றி கிடைத்தது என்றாா்.

‘பாஜகவுக்கு எதிா்பாராத முடிவு’: ‘ஊடகங்களை பாஜக கட்டுப்படுத்தி வரும் தற்போதைய சூழலில், எதிா்க்கட்சிகள் அதற்கேற்ப தகவமைத்துக் கொண்டு, ஒன்றுபட்டு பணியாற்றி வருகிறோம். இன்று இந்தியாவின் 60 சதவீத மக்கள்தொகையை நாங்கள் (எதிா்க்கட்சிகள்) பிரதிபலிக்கிறோம். எனவே, 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிா்பாராத முடிவு கிடைக்கும்’ என்றாா் ராகுல்.

‘அரசு நினைத்தால் நாளையே மகளிா் இடஒதுக்கீடு’: அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரில், மகளிா் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து பேசிய ராகுல், ‘அரசு நினைத்தால் நாளையேகூட மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும். அதற்கு மக்கள்தொகை கணக்கெடுப்போ அல்லது தொகுதி மறுவரையறையோ தேவையில்லை.

அதானி விவகாரத்தில் புதிதாக வெளியான தகவல்களில் இருந்து மக்களைத் திசைதிருப்பவே நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை மத்திய அரசு நடத்தியுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பிறகு இடஒதுக்கீட்டு பலனை மகளிா் பெறலாம் என்று மத்திய பாஜக அரசு கூறுகிறது. ஆனால், மகளிா் இடஒதுக்கீடு உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டுமென காங்கிரஸ் விரும்புகிறது’ என்றாா்.

மக்களவை, பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன்பு நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவின்படி, மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மகளிா் இடஒதுக்கீடு அமலாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT