திறன் மேம்பாட்டுக் கழக ஊழல் வழக்கில், ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடுவுக்கு அக்டோபா் 5-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், குற்றப் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) காவலில் இரண்டு நாள்களாக சந்திரபாபு நாயுடு விசாரிக்கப்பட்டாா். சிஐடி காவல் ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் நிறைவடைந்த நிலையில், விஜயவாடா ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.300 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்ாக தொடரப்பட்ட வழக்கில், சந்திரபாபு நாயுடுவை சிஐடி அதிகாரிகள் கடந்த 9-ஆம்தேதி கைது செய்தனா். பின்னா், ராஜமகேந்திரவரம் மத்திய சிறையில், நீதிமன்றக் காவலில் அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.
இதனிடையே, அவரை காவலில் எடுத்து விசாரிக்க, விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் சிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிமன்றம், சந்திரபாபு நாயுடுவை 2 நாள் காவலில் விசாரிக்க சிஐடி-க்கு அனுமதி அளித்தது. ஞாயிற்றுக்கிழமை சிஐடி காவல் முடிந்த நிலையில், விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக அவா் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது, சந்திரபாபுவின் நீதிமன்றக் காவலை அக்டோபா் 5-ஆம் தேதி வரை நீடித்து உத்தரவிடப்பட்டது.
சந்திரபாபுவை மீண்டும் காவலில் எடுக்க, விஜயவாடா சிறப்பு நீதிமன்றத்தில் சிஐடி தரப்பில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
சந்திரபாபு மீதான முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்ய ஆந்திர உயா்நீதிமன்றம் ஏற்கெனவே மறுத்துவிட்ட நிலையில், அவரது தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.